- வங்கதேசம் என்ற நாடு உருவாகி ஐம்பதாண்டுகள் ஆனது கொண்டாடப்படுகிறது. “இந்த நாடு பொருளாதார, நிதி நிர்வாகரீதியாக நீண்ட காலம் நிலைத்திருக்காது” என்று அமெரிக்காவின் அப்போதைய வெளியுறவு அமைச்சரும், அறிஞர்களில் ஒருவராகவும் கருதப்பட்ட ஹென்றி கிஸ்ஸிங்கர் கூறியிருந்தார். அவருடைய கணிப்பு பொய்த்துவிட்டது.
- இப்போது வளரும் நாடுகளுக்கு வங்கதேசம்தான் முன்மாதிரி நாடாக இருக்கிறது. அதன் தேசிய வருமானம் ஐம்பது மடங்காக உயர்ந்திருக்கிறது. நபர்வாரி வருமானம் இருபத்தைந்து மடங்கு உயர்ந்துவிட்டது.
- இந்தியா, பாகிஸ்தானைவிட அதிகம். உணவு தானிய உற்பத்தி நான்கு மடங்காக உயர்ந்திருக்கிறது. மக்கள்தொகைப் பெருக்கம் 2.5 மடங்குக்கு மேல் போகாமல் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. நபர்வாரி உணவு தானிய வழங்கல் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி 100 மடங்கு பெருகியிருக்கிறது. 1990-ல் நாட்டு மக்களில் 60% பேர் ஏழைகளாக இருந்தனர்.
- இப்போது அந்த எண்ணிக்கை 20% ஆகக் குறைந்துவிட்டது. சராசரி ஆயுள் காலம் 72 வயதாக உயர்ந்திருக்கிறது. பல்வேறு சமூகநலக் குறியீடுகள் பக்கத்து நாடுகளைவிட அதிகம். சிலவற்றில் இலங்கை விதிவிலக்கு. மனிதவள குறியீட்டெண் 60%.
- இந்தச் சாதனைகளில் பெரும்பாலானவை கடந்த முப்பது ஆண்டுகளில் எட்டப்பட்டவை. முதல் இருபது ஆண்டுகளில் அரசியல் கொந்தளிப்பும் சோகையான பொருளாதார வளர்ச்சியுமே மிகுந்திருந்தன. வங்கதேசத்தின் வளர்ச்சியை உணர வேண்டும் என்றால் இன்னொரு கோணத்தில் பார்க்க வேண்டும்.
- 1990-ல் பாகிஸ்தானின் நபர்வாரி வருமானம் வங்கதேசத்தில் இருந்ததைவிட இரண்டு மடங்கு. இப்போதோ வங்கதேசத்து நபர்வாரி வருவாயில் ஏழில் ஒரு பங்காக சரிந்துவிட்டது. கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பாக, 2011 முதல் 2019 வரையில் வங்கதேசத்தின் ஜிடிபி 7 முதல் 8 சதவீதமாக இருந்தது. பாகிஸ்தானின் வளர்ச்சியைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு.
- வங்கதேசத்தின் வளர்ச்சிக் கதை மிகவும் சுவாரஸ்யமானது. புயல், வெள்ளம், பஞ்சம் ஆகிய இயற்கைப் பேரிடர்களுக்கு அடிக்கடி ஆளாகக்கூடிய ஒரு நாடு எப்படி இவ்வளவு சாதனைகளைப் படைக்க முடிந்திருக்கிறது. அதுவும் பக்கத்து நாடுகளான இந்தியா, பாகிஸ்தானைவிட சமூக – பொருளாதார அம்சங்களில்?
எப்படி இந்தச் சாதனை?
- வங்கதேசம் மிகவும் கடுமையான சூழ்நிலைகளைக் கடந்துதான் இந்த உன்னத நிலைக்கு வந்திருக்கிறது. விடுதலைக்குப் பிறகு, வங்காளிகளை மட்டுமே கொண்ட புதிய நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான மக்களை மீள் குடியமர்வு செய்ய வேண்டிய பெரிய கடமை அரசுக்கு இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த சில மாதங்களுக்குள்ளாகவே அதன் நம்பிக்கைக்குரிய தலைவர் ஷேக் முஜிபுர் ரெஹ்மான் படுகொலை செய்யப்பட்டார்.
- ஆட்சியைக் கைப்பற்ற ராணுவம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டது. சில வேளைகளில் வெற்றியும் பல சமயங்களில் தோல்வியும் அதற்குக் கிடைத்தது. 1991 வரையில் ராணுவம்தான் பெரும்பாலும் ஆட்சி நடத்தியது. ஜெனரல் எர்ஷாத் 1991-ல் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு வழிவிட்டார். 2007-ல் ராணுவம் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகளுக்கு ஆட்சிசெய்தது.
- ஷேக் ஹசீனாவின் (முஜிபுர் ரெஹ்மானின் மகள்) அவாமி லீக் கட்சியும், காலிதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியக் கட்சியும் (பிஎன்பி) 1991 முதல் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. 2009 முதல் தொடர்ந்து மூன்று முறையாக அவாமி லீக் வெற்றி பெற்று ஆள்கிறது. இரண்டு பேகம்களுக்கும் இடையிலான அரசியல் சண்டை தீவிரமானது, கசப்பானது.
- காலிதா ஜியா கடந்த பொதுத் தேர்தலைப் புறக்கணித்துவிட்டு சிறையிலேயே இருந்தார். அரசியல் இப்படியிருந்தாலும் இந்த நாட்டின் வளர்ச்சி மட்டும் எப்படி தொய்வில்லாமல் வளர்கிறது என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வங்கதேசம் ஏதோ அரசியல் நிலைத்தன்மை இல்லாத நாடுபோலத்தான் தோற்றமளித்தது. இதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
ஆறு காரணங்கள்
- முதலாவதாக, இந்தியா – பாகிஸ்தான்போல அல்லாமல் வங்கதேசம் முழுக்க கலாச்சாரரீதியாக ஒரே இனம், அதாவது ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்டது. இந்நாட்டின் குடிமக்கள் அனைவருக்குமே ஒரே வரலாற்றுப் பின்னணிதான். எனவே மதம், பிராந்தியம், பழங்குடி – சமவெளி, நிலப்பிரபுக்கள் – குடிவாரதாரர்கள் என்ற வேறுபாடுகள் கரைந்துவிட்டன. கிராமப்புற – நகர்ப்புற வேறுபாடுகள் இருந்தாலும் வளர்ச்சி காரணமாக நகர்ப்புற வசதிகள் கிராமங்களுக்கும் கிட்ட ஆரம்பித்துவிட்டதால் வேற்றுமை குறைந்துவருகிறது.
- இரண்டாவதாக, வங்கதேசம் முழுக்க ஒற்றை ஆட்சிதான். மாநிலங்களோ மாகாணங்களோ கிடையாது. எனவே மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே அரசு நிர்வாகம், அரசியல் நிர்வாகம், சட்ட நிர்வாகம், நிதி நிர்வாகம் அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது. பல அடுக்கு அரசுகளுக்குள் ஏற்படக்கூடிய உரசல்களுக்கு வங்கதேசத்தில் வாய்ப்பே இல்லை. அரசின் கொள்கையும் அதை நடைமுறைப்படுத்துவதும் அதிகாரப் படிநிலையில் நன்கு ஒருங்கிணைந்து நிறைவேற்றப்படுகிறது. ஆட்சி மாறினாலும் ஆளும் தலைமை மிக வலுவானதாகவும் எதிர்க்கட்சி மிகவும் வலிமை குன்றியதாகவுமே அமைகிறது. இதனால் வெற்றி பெறும் கட்சி இடும் கட்டளையை ஏற்று நடப்பதைத் தவிர அதிகார வர்க்கத்துக்கு வேறு வழி இருப்பதில்லை.
- மூன்றாவது, வங்கதேசப் பெண்கள் எழுத்தறிவு பெற்றவர்களாகவும் விழிப்புணர்வுள்ளவர்களாகவும் இருக்கின்றனர். மகளிர் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு, சுகாதாரமான வாழ்க்கை முறை ஆகியவற்றை அரசு பிரச்சாரம் செய்யும்போது வரவேற்று ஏற்றனர். சிறு கடன் திட்டங்களின் மூலம் பெண்கள் கடன் பெற்று பலன் பெற்றனர். மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணக்கமாகச் செயல்பட்டு பொருளாதாரச் சுதந்திரம் பெற்றன. குடும்பங்களின் வருமானம் பெருகியது. பெண்கள் குடும்பங்களை வழிநடத்துபவர்களாக மாறினார்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கிராமீன் திட்டம், பிராக், ஆசா போன்றவை மகளிர் முன்னேற்றத்துக்குப் பல வழிகளிலும் உதவுகின்றன. அரசாங்கம் அனைத்தையும் தானே செய்ய முடியாது என்பதை உணர்ந்து, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்திக்கொண்டது. கல்வி, சுகாதார விழிப்புணர்வு பெற்ற பெண்கள் போதிய இடைவெளியில் இரண்டு குழந்தைகளைப் பெற்று அவற்றின் கல்வி, உடல் நலனுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர். பெண்கள் வேலை செய்வது அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களிடையே பாலின சதவீத வேறுபாடு குறைவு. ஆரம்பக் கல்வியில் எல்லா பெண் குழந்தைகளும் கட்டாயம் இடம்பெறுகின்றனர்.
- நான்காவதாக, இரண்டு பெரிய கட்சிகளுக்கும் இடையில் கடுமையான அரசியல் வேறுபாடு இருந்தாலும் ஆட்சிக்கு வருகிறவர்கள் முந்தைய அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் தொய்வில்லாமல் நிறைவேற்றுகின்றனர். பேரியல் பொருளாதார நிர்வாகத்தில் நிலைத்தன்மை, நிதியைக் கையாள்வதில் சிக்கனம், வர்த்தக நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை, தனியார் துறைக்கு ஊக்குவிப்புச் சலுகைகள், சமூக வளர்ச்சியில் அக்கறை ஆகியவற்றில் எந்த ஆட்சியும் குறை வைப்பதில்லை. ஆட்சி மாறினாலும் வளர்ச்சிகள் பாதிக்கப்படுவதில்லை. இதனால் முதலீட்டாளர்களும் சந்தையும் கவலையற்று வேலையைத் தொடர முடிகிறது. இதனால் அனைவருக்கும் பொருளாதாரப் பலன் தொடர்ந்து கிடைக்கிறது.
- ஐந்தாவதாக, தொழில்-வர்த்தக கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, பொருளாதாரத்தை அன்னிய முதலீடுகளுக்குத் திறந்துவிடுவது, அன்னியத் தொழில்நுட்பத்தை வரவேற்பது, ஏற்றுமதியாளர்களுக்கு ரொக்க ஊக்குவிப்புகளையும் ஏனைய வரிச்சலுகை உள்ளிட்ட ஊக்குவிப்புகளையும் அளிப்பதில் தாராளம் காட்டப்படுகிறது. ஆயத்த ஆடை தயாரிப்பு, ஏற்றுமதியில் சீனத்துக்கு அடுத்த இடத்தை வங்கதேசம் பிடித்திருக்கிறது. உலகின் தலைசிறந்த ஆயத்த ஆடை பிராண்டு நிறுவனங்கள் தயாரிப்புப் பணிகளை அயல்பணி ஒப்படைப்பு அடிப்படையில் வங்கதேசத்துக்கே அதிகம் தருகின்றன. இந்தத் துறையில் பெண்களுக்குக் கிடைத்துள்ள அபரிமிதமான வேலைவாய்ப்பால் அவர்களுடைய குடும்பங்கள் பொருளாதாரத்தில் தற்சார்பையும் வளத்தையும் எட்டியுள்ளன. இளம் தலைமுறையினர் தொழில் முனைவோர்களாக வளர்கின்றனர். எனவே உயர் கல்வியிலும் திறன்களை வளர்ப்பதிலும் ஆர்வம் அதிகமாகி வருகிறது.
- ஆறாவதாக, தொடர் உயர் வளர்ச்சிக்கு உள்நாட்டு சேமிப்புகளும் முதலீடுகளும் 15 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிகரித்தது முக்கிய காரணம். உற்பத்திக்குத் தேவைப்படும் முதலீடு தனியார் மூலம் கிடைப்பதால் அரசு தனது வருவாயை அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு அதிகம் செலவிட முடிகிறது. விரைவுபடுத்தப்பட்ட வளர்ச்சியின் பலன் அரசு, தனியார் துறை என்று அனைவருக்கும் கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக அதிகரித்து வரும் கேட்பு (டிமாண்ட்), அதிக இறக்குமதிக்கு வித்திட்டாலும், அதற்கான பணம் ஏற்றுமதி மூலம் பெறப்படுகிறது. எனவே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கட்டுக்குள்ளேயே இருக்கிறது.
- தொழிலதிபர்கள், மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே பலன் தரும் திட்டங்களாகப் பார்த்து ஊக்குவிக்காமல் ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்துக்குமான வளர்ச்சிக்கு அரசு ஆதரவு அளிக்கிறது. தேர்தல் பிரச்சாரம் அனைத்துமே கட்சிகளின் சாதனை அடிப்படையில்தான் நடக்கிறதே தவிர தனிமனிதர்களின் புகழ், ஆற்றல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி நடப்பதில்லை. அரசு, ஆட்சியாளர்கள், தனியார் துறையினருக்கு இடையிலான கூட்டு, நாட்டுக்கு நன்மை பயப்பதாகவே இருக்கிறது.
- அரசியல் தலைவர்கள் தொழில் நிறுவனங்களிடம் தேர்தல் செலவுக்கு நன்கொடை பெறுகின்றனர். அதிகாரிகள் ஊதியம் குறைவு என்பதால் வேலையைச் செய்துவிட்டு வியாபாரிகள், தொழிலதிபர்களிடம் அன்பளிப்பு பெறுகின்றனர். தொழிலதிபர்கள் சுற்றுச்சூழலைப் பற்றிக் கவலைப்படாமலும் தொழிலாளர்களை ஓரளவுக்கு சுரண்டியும்தான் லாபம் சம்பாதிக்கின்றனர். ஆனால் இவர்களில் எவருமே தாங்கள் சம்பாதிப்பதை வெளிநாடுகளில் பதுக்குவதோ முதலீடு செய்வதோ இல்லை. எல்லாப் பணமும் வங்கதேசத்துக்குள்ளேயே செலவாகிறது. இதுவும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது.
- வரிக்கும் ஜிடிபிக்குமான விகிதம் 8 அல்லது 9 சதவீதமாகத்தான் இருக்கிறது. இதன் உள்ளடக்கம் என்னவென்றால் பெருக்கல் விளைவால் (மல்டிபிளையர் எஃபக்ட்) பொருளாதாரம் வளர்வதற்கு வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித் தருகிறது. அரசுத் துறையில் செலவிடப்படும் டாலரைவிட, தனியார் துறைக்குக் கிடைக்கும் டாலர் வெகு விரைவாக லாபத்தைக் கொண்டுவருகிறது. அரசின் செலவைவிட வருவாய் குறைவுதான் என்றாலும் இந்த பற்றாக்குறை எப்போதும் 5 சதவீத அளவுக்கே பராமரிக்கப்படுகிறது. அரசின் பொதுக் கடன் சுமையும் மிக மிகக் குறைவு. பேரியியல் பொருளாதாரம் ஸ்திரமாக தொடர்கிறது.
- ஆக, கொள்கையில் தொடர்ச்சி, ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு, மனித ஆற்றலில் தொடர் முதலீடு, அரசுத்துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்படும் முறை ஆகியவற்றால் வங்கதேசம் வெற்றிகளைக் குவிக்கிறது!
நன்றி: அருஞ்சொல் (25 – 12 – 2021)