TNPSC Thervupettagam

வங்கதேசத்தின் வளர்ச்சி..!

November 3 , 2020 1363 days 641 0
  • நிகழாண்டில் ஜிடிபி வளர்ச்சியில் இந்தியாவை வங்கதேசம் முந்தும் என்கிற சர்வதேச நிதியத்தின் கணிப்பு மிகப் பெரிய அதிர்வு அலையை ஏற்படுத்தியிருக்கிறது.
  • வங்கதேசம் என்றாலே வறுமையின் பிடியில் சிக்கியுள்ள நாடு என்றும், வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக வங்கதேசத்தினர் பெருமளவில் இந்தியாவுக்குள் ஊடுருவுகிறார்கள் என்றும் பரவலாகக் கருதப்படும் நிலையில், வங்கதேசத்தின் வளர்ச்சி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்திருப்பதில் வியப்பில்லை.
  • வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி, கடந்த சில ஆண்டுகளாகவே சீராக முன்னேறிக்கொண்டிருக்கிறது என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.
  • கடந்த எட்டு ஆண்டுகளில், முதலில் 6%-ஆகவும், பிறகு 7%-ஆகவும் உயர்ந்து 2019-இல் 8.2% வளர்ச்சியை வங்கதேசம் கண்டது. உலகம் முழுவதும் கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு பல நாடுகளின் பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், வங்கதேசத்தின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் நிகழாண்டில் 3.8% வளர்ச்சியைக் காண இருக்கிறது.
  • அதற்கு நேர்மாறாக, நமது வளர்ச்சி சீரானதாக இல்லாமல் சில ஆண்டுகளில் அதிக வளர்ச்சியையும், சில ஆண்டுகளில் வீழ்ச்சியையும் மாறிமாறி எதிர்கொள்கிறது.
  • வங்கதேசம் நிகழாண்டில் 3.8% வளர்ச்சியை காணும் என்று தெரிவிக்கும் சர்வதேச நிதியம், இந்தியா 13% பின்னடைவை எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்திருக்கிறது.
  • இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறியிருக்கும் வங்கதேசத்தின் வளர்ச்சி, நம்மை சிந்திக்க வைக்க வேண்டுமே தவிர, அதற்காக நாம் கவலையடைய வேண்டிய அவசியம் இல்லை.
  • சர்வதேச நிதியத்தின் கணிப்புப்படி, அடுத்த நிதியாண்டிலேயே வங்கதேசத்தைவிட இந்தியா வளர்ச்சியடைந்துவிடும் என்கிற கணிப்பையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • வங்கதேசத்தின் வளர்ச்சிக்கான காரணங்களில் ஒன்று, பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வங்கதேசத்தில், கருத்தரிப்பு விகிதம் இந்தியாவைவிடக் குறைந்திருக்கிறது.
  • ஒரு குடும்பத்தில் சராசரியாக இரண்டு குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றன என்கிற நிலையில், மரண விகிதத்தைவிடப் பிறப்பு விகிதம் குறைந்திருக்கிறது.
  • ஏனைய இஸ்லாமிய நாடுகளைப் போலல்லாமல், மக்கள்தொகைப் பெருக்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வளர்ச்சி முன்னிலைப்படுத்தப்பட்டதன் விளைவுதான் வங்கதேசத்தின் வெற்றி என்பதை நாம் உணர வேண்டும்.
  • வங்கதேசத்தின் தனிநபர் ஆண்டு வருமானம் 1,888 டாலர் (சுமார் ரூ.1,41,600). இந்தியாவின் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1,40,775. இந்தியாவைப்  போன்ற பல வளர்ச்சி அடையும் நாடுகள், வங்கதேசத்தைப் போலவே நம்மைவிட அதிகமான தனிநபர் வருமானத்தை எட்டியிருக்கின்றன என்பது வரலாற்று உண்மை. அதற்குப் பல எடுத்துக்காட்டுகளை அடுக்க முடியும்.
  • 1960-களில் உலக வங்கியின் புள்ளிவிவரப்படி, இந்தியாவின் தனிநபர் ஆண்டு வருமானம் 82 டாலர் (ரூ.6,150). தென் கொரியாவில் அதுவே இரட்டிப்பாகி 188 டாலராக இருந்தது (ரூ.14,100).
  • அடுத்த 20 ஆண்டுகளில் தென் கொரியாவின் தனிநபர் ஆண்டு வருமானம் இந்தியாவைவிட ஆறு மடங்கும், 2020-இல் 15 மடங்கும் அதிகமாகி இருக்கிறது.
  • 1960-களில் கொரிய அதிகாரிகள் நமது இரும்பு, எஃகு, உருக்கு ஆலைகள் எப்படி செயல்படுகின்றன என்று தெரிந்துகொள்ள இந்தியா வந்தனர். டி.டி. கிருஷ்ணமாச்சாரி, விதிமுறைகளைத் தளர்த்தி இந்தியாவை உலகின் இரும்பு, எஃகு உற்பத்திக் கேந்திரமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை நாம் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தோம்.
  • 1960-இல் தாய்லாந்தின் தனிநபர் ஆண்டு வருமானம் வெறும் 101 டாலர். இப்போது அதுவே 7,300 டாலர். 1966-இல் இந்தியாவில் இந்திரா காந்தி பிரதமரானார். அடுத்த ஆண்டு இந்தோனேஷியாவில் சுகர்னோ அதிபரானார்.
  • 1970-களில் தனிநபர் ஆண்டு வருமானத்தில் இந்தோனேஷியா 80 டாலராகவும், இந்தியா 112 டாலராகவும் இருந்தன.
  • அரை நூற்றாண்டுக்குப் பிறகு இப்போது இந்தோனேஷியாவின் தனிநபர்  ஆண்டு வருமானம் இந்தியாவைவிட இரண்டு மடங்கு (4,000 டாலர்).
  • 1991-இல் இந்தியாவின் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்காக இருந்த வியத்நாமின் தனிநபர் ஆண்டு வருமானம் (95 டாலர்). இப்போது 2020-இல் 3,500 டாலர்.
  • இந்தியாவின் மெத்தனமான  வளர்ச்சிக்கு ஜவாஹர்லால் நேரு காலத்தின் சோஷலிசக் கொள்கைகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டுவது வழக்கமாகி இருக்கிறது.
  • ஆனால், பொருளாதார சீர்திருத்தத்துக்குப் பிறகும்கூட, பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் அபரிமித வளர்ச்சியை அடைந்துவிடவில்லை என்பதுதான்  நிஜம்.
  • 1991-இல் சீனாவின் தனிநபர் ஆண்டு வருமானம் 333 டாலர் (ரூ.24,975) என்றால், இந்தியாவில் அதுவே 303 டாலர் (ரூ.22,725). ஒரே நேரத்தில்தான் பொருளாதார தாராளமயக் கொள்கையை இரு நாடுகளும் தழுவின.
  • 30 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவின் தனிநபர் ஆண்டு வருமானம் இந்தியாவைவிட ஐந்து மடங்கு அதிகம்.
  • இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பது பொருளாதாரக் கொள்கைகள் அல்ல, அரசியல் கட்சிகள். ஆட்சியில் இருக்கும்போது வளர்ச்சிக் கொள்கைகளை ஆதரிப்பதும், எதிர்க்கட்சி வரிசையில் அமரும்போது அதை எதிர்ப்பதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், இந்தியாவின் வளர்ச்சி தள்ளாடுகிறது. இது பாஜக-வுக்கும் காங்கிரஸýக்கும் பொருந்தும்.
  • வங்கதேசத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள், இந்தியர்களால் நடத்தப்படுபவை. இதிலிருந்தே தவறு எங்கே என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

நன்றி : தினமணி (03-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்