TNPSC Thervupettagam

வங்கதேசம்: அமைதியும் ஜனநாயகமும் மீட்கப்பட வேண்டும்

August 9 , 2024 111 days 109 0
  • வங்கதேச அரசுக்கு எதிரான போராட்டங்களின் காரணமாகப் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்திருப்பது சர்வதேச அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைவது பதற்றத்தைச் சற்றே தணித்திருக்கிறது. எனினும் முழு அமைதி இன்னும் திரும்பவில்லை.
  • வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா 1996இல் முதல் முறையாக வங்கதேசப் பிரதமரானார். 2009 முதல் தொடர்ச்சியாக அந்நாட்டின் பிரதமராக நீடித்துவந்தார்.
  • அவரது ஆட்சிக் காலத்தில் வங்கதேசப் பொருளாதாரம் பெருமளவு வளர்ச்சி அடைந்தது. மத அடிப்படைவாதிகளைக் கட்டுப்படுத்தியது, மதச் சிறுபான்மையினரைப் பாதுகாத்தது, ஜனநாயகத்தை வலுப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஹசீனாவின் ஆட்சி பாராட்டப்பட்டது.
  • ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அவரது ஆட்சிமுறை சர்வாதிகாரப் போக்குக்குத் தடம் மாறியதாக விமர்சனங்கள் எழுந்தன. முதன்மை எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் தலைவர் காலிதா ஜியா, மக்களின் நன்மதிப்பைப் பெற்ற செயல்பாட்டாளர் முகமது யூனுஸ் உள்பட அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பிய பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அரசுக்கான எதிர்ப்பை ஜனநாயக வழிமுறைகளில் வெளிப்படுத்த இயலாத சூழலில் வெடித்த கலகம் இப்போது அரசைக் கவிழ்த்திருக்கிறது.
  • வங்கதேசச் சுதந்திரப் போரில் பங்கேற்றவர்களின் வம்சாவளியினருக்கு வங்கதேச அரசுப் பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மாணவர்கள் போராட்டம் கடந்த ஜூன் மாதம் மீண்டும் உயிர்பெற்றதுதான் பிரச்சினையின் தொடக்கப்புள்ளி.
  • போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததை அடுத்து, உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவை 7% ஆகக் குறைத்தது. ஆனால், பிரதமர் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையுடன் போராட்டம் தொடர்ந்தது. மீண்டும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
  • ஆகஸ்ட் 4 அன்று பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தை நோக்கி லட்சக்கணக்கானோர் படையெடுத்தனர். பிரதமர் வீடு சூறையாடப்பட்டது. அதற்கு முன்பு தனி விமானத்தில் நாட்டைவிட்டுப் புறப்பட்ட ஹசீனா, இந்தியாவில் தற்காலிகமாகத் தஞ்சம் அடைந்துள்ளார்.
  • இதற்குப் பிறகும் வன்முறை தொடர்கிறது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள், வணிக நிறுவனங்கள் சூறையாடப்படுவதாகக் கூறப்படுகிறது. அதே நேரம், போராட்டக்காரர்கள் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அரணாக நிற்கும் செய்திகளும் வருகின்றன.
  • மாணவர்களால் தொடங்கப்பட்ட போராட்டத்தில் ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட வங்கதேசத்தின் மதப் பழமைவாத அமைப்புகள் ஊடுருவிவிட்டதை உணர முடிகிறது. பாகிஸ்தான், சீனா போன்ற அந்நிய சக்திகளின் பங்களிப்பும் இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தைப் புறம்தள்ளிவிட முடியாது. ஷேக் ஹசீனா அரசு நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுடன் இணக்கப் போக்கைக் கடைப்பிடித்தது. கடந்த 10 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகள் வலுவடைந்துள்ளன.
  • அதேநேரம், வங்கதேசத்துடன் 4,096 கி.மீ. எல்லையை இந்தியா பகிர்ந்துகொள்கிறது 19,000 இந்தியர்கள் வங்கதேசத்தில் வசிக்கின்றனர். எனவே, ஹசீனா அரசுடன் இந்தியா பேணிய நல்லிணக்கம். அமையவிருக்கும் புதிய அரசுடனும் தொடர வேண்டும். வங்கதேசத்தில் இந்தியர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதும் அந்நாட்டில் நிலையான அரசு அமைந்து அமைதியும் ஜனநாயகமும் மீட்கப்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதும் இந்திய அரசின் வரலாற்றுக் கடமை.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்