TNPSC Thervupettagam

வங்கதேசம்: கும்பல்களின் நீதி!

September 29 , 2024 58 days 64 0

வங்கதேசம்: கும்பல்களின் நீதி!

  • திருடியிருப்பான் என்கிற சந்தேகத்தின்பேரில் நடுநிசியில் பிடித்த நபரை மாணவர்கள் சேர்ந்துகொண்டு கடுமையாக தாக்கி படுகாயப்படுத்தினர், இடம்: டாக்கா பல்கலைக்கழக எஃப்எச் ஹால்; தங்களுக்குச் சமூக அக்கறையுள்ளது என்று காட்ட, படுகாயப்பட்ட அவரை டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்; அடிப்பதற்கு முன்னால் அவரை நன்றாக சாப்பிடவைத்து அதைப் புகைப்படமும் எடுத்துள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ’இறந்துவிட்டார்’ என்று அறிவித்தபோது கொண்டுவந்து சேர்த்தவர்களில் ஒருவர்கூட அங்கே இல்லை! கடுமையான ரத்த காயங்களுடன் பிணவறையில் உள்ள அந்தச் சடலம், மாணவர்களின் ‘அதிதீவிர சமூக அக்கறை’க்குச் சாட்சியாகக் கிடக்கிறது.

ஆகஸ்ட் 5க்குப் பிறகு

  • ஷேக் ஹசீனா தலைமையிலான அரசைக் கவிழ்த்த ஆகஸ்ட் 5க்குப் பிறகு புதுவிதமான ‘நீதி வழங்கல்’ புரட்சிகரமாக அரங்கேறுகிறது. சட்டம் படித்த வழக்கறிஞர்கள், விசாரணைக்கான நீதிமன்றக் கூடம் இல்லாத புதுமுறை இது. இந்த நீதி வழங்கலில் சாட்சிகளோ, முறையான விசாரணைகளோ, குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் வாதாட வழக்கறிஞரோ தேவையில்லை. குற்றஞ்சாட்டப்பட்ட பிறகு கூடியிருக்கும் கும்பலே நேரடியாகவும் உடனடியாகவும் நீதி வழங்கிவிடுகிறது.

ஷமீம் மொல்லா

  • ஒரு காலத்தில் ஜஹாங்கீர்நகர் பல்கலைக்கழகத்தின் காப்பாளராக வலம் வந்த ஷமீம் மொல்லா, தன்னுடைய குடியிருப்பில் ஆயுதபாணியாக ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாய் உடன்வர கம்பீரமாக நடை பழகுவார். மாணவர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய அவர் இறுதியாக, ‘மக்களுடைய கருத்துப்படி’ ஒரு கும்பலால் தண்டிக்கப்பட்டார். கணசாஸ்தோ கேந்திரத்துக்கு நடைப்பயிற்சிக்குச் சென்றதுதான் அவருடைய கடைசி நடை! அவரைவிட குரூரமாகவும் விரைவாகவும் சமஅளவுக்கும் இரக்கமின்றி ஒரு கும்பல் அவர் மீது குற்றம் சுமத்தி அங்கேயே அடித்துக் கொன்றது.
  • எப்பேர்ப்பட்ட கொடியவர்கள் என்றாலும் அவர்களும் தங்கள் தரப்பை எடுத்துச்சொல்ல ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும். அவர் அயோக்கியர்தான், இரக்கமற்றவர்தான், சட்ட விரோதமாக எல்லாவற்றையும் செய்தவர்தான், அதற்காக ஒரு கும்பலே அவர் மீது குற்றமும் சுமத்தி, விசாரணையும் நடத்தி, பிறகு உடனேயே அடித்துக் கொல்வது சரியல்ல.
  • எல்லாமே அப்பாவித்தனமாகவும் ஒரு திட்டமில்லாமலும்தான் ஆரம்பித்தன. சில தொழிற்சாலைகளுக்குத் தீ வைத்தார்கள், சில வழிபாட்டுத்தலங்களை சேதப்படுத்தினார்கள். பிறகு திடீரென அவர்களுக்குள் ஆவேசம் வந்தது. குற்றங்கள் செய்தவர்களைத் தண்டிக்க கும்பல்களுக்கு எதற்குச் சாட்சியங்கள், ஆவணங்கள்?
  • உடனே வங்கதேச நீதிவழங்கு முறையே அடியோடு மாறிவிட்டது. இருட்டில் ஏதோ சில பேர் முணுமுணுத்துக்கொண்டிருந்த நீதி வழங்கல் முறை இப்போது நடைமுறைச் சட்டமாகிவிட்டது.

நீதித் துறையும் காரணம்

  • ‘அடக்கிவைத்த கோபத்தை மக்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிப் பெருக்கு இது, தானாக அடங்கிவிடும்’ என்றுதான் மக்கள் நினைத்தார்கள். நாடு முழுவதுமே சேர்ந்து தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி ஆற்றுப்படுத்திக்கொள்கிறது என்றும் கருதினார்கள். நேர்மையாக சிந்தித்தால், இந்த நிலைமைக்கு நீதித் துறையும் காரணம் என்பது புரியும்.
  • நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகள் நாள் கணக்கில் இழுத்துக்கொண்டேபோகின்றன, டன் கணக்கில் காகிதம் வீணாகிறது, வழக்கறிஞர்களின் வாத – பிரதிவாதங்கள் முடிவில்லாமல் நீள்கின்றன, ஆதாரம் உண்டா – சாட்சிகள் எங்கே என்றே எல்லா வழக்குகளிலும் கேள்விகள் எழுகின்றன; இவையெல்லாம் நீதி மறுக்கப்படுவதற்கே பயன்படுகின்றன என்று மக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள். சட்டத்தை நேரடியாகத் தங்களுடைய கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டார்கள்.
  • கோபம் கொண்ட கும்பல்கள் சில நிமிஷங்களில் நியாயம் வழங்க முடியும்போது, எதற்கு இந்த நீதிமன்ற வழக்குகளில் பல மாதங்கள், வருடங்கள் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்றே முடிவுசெய்துவிட்டார்கள். கூட்டத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நீங்கள் குற்றவாளிதான் என்று ஒப்புக்கொண்டுவிட்டால் அப்புறம் என்ன, நீங்கள் குற்றவாளிதான். ‘பெரும்பான்மையின் முடிவு’ என்பது என்ன – ஜனநாயகம்தானே? பெரும்பான்மை ஆள்கிறது, அவ்வளவுதான்!
  • பழைய அரசு நிறுவனங்கள் திறமையற்றவை, மக்களுக்கு நீதி வழங்க முடியாமல் தோற்றுவிட்டன. அச்சப்படாதீர்கள், வங்கதேசிகள் எப்போதுமே புதுமையாக சிந்திப்பவர்கள், செயல்படுகிறவர்கள். பாரம்பரியமான நீதி வழங்கல் முறை சட்ட சிடுக்குகளால் மேற்கொண்டு நகர முடியாமல் தவிக்கும்போது, கும்பல்கள் சேர்ந்து, வழக்கத்துக்கு மாறான வகையில் தண்டனைகளை வழங்கி நீதியை நிலைநாட்டிவிடுகின்றன!

ஆசிரியர்கள் முன்னிலை

  • வங்கதேசத்தில் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்துக்கு ஆசிரியர்கள்தான் முன்னிலை வகித்தனர். ஒரு காலத்தில் ஆசிரியர்கள் என்றால் மிகவும் மதித்தார்கள். இப்போது அவர்களும் பத்தோடு பதினொன்று ஆகிவிட்டார்கள், சமூகத்தின் விமர்சனங்களுக்கு அதிகம் இலக்காகிவிட்டார்கள். கல்வியின் பயன் என்ன என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவதைவிட, கல்வியை போதிக்க நல்ல வழியிருக்கிறதா என்ன?
  • பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும்தான் நீதி வழங்கத் துடித்த கும்பல்களுக்கு முதல் வேட்டைக்களமாக இருந்தன. சில ஆசிரியர்கள் பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள், காரணம் அவர்கள் தவறுசெய்தார்கள் என்பதற்காக அல்ல; சுதந்திரமாக சிந்திக்குமாறு கற்றுத்தந்ததற்காக! சுதந்திர சிந்தனை என்பது அதிருப்திக்கு முதல்படி. அது உங்களுக்குத் தெரிவதற்கு முன்னால் கும்பல்களால் நியமிக்கப்படும் தலைவர்களையே மாணவர்கள் கேள்விக் கேட்கவும் கூடும், கேட்பார்களா மாட்டார்களா – அதை நாம் அனுமதிக்க முடியுமா?

ஒழுக்கக் காவலர்கள்

  • கும்பல்கள்தான் நீதி வழங்கல் மூலம் பிரபலம் அடைகின்றன என்னும்போது, ‘ஒழுக்கக் காவலர்கள்’ உடன் வராமல் இருப்பார்களா? உங்கள் குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண் மிகவும் நவீனமாக ஆடை அணிகிறாரா, அலங்காரம் செய்துகொள்கிறாரா, அவரை அப்படியே விட்டுவிடுவதா? அப்பாவிதான் என்றாலும் சமாதிகளுக்குப் போய் வணங்குகிறாரா, அங்கென்ன அவருக்கு வேலை? தடைசெய்யப்பட்ட ஒரு புத்தகம் பற்றி ஒரு ஆசிரியர் பேசினாரா, சும்மா விடுவது அவரை? அச்சப்படாதீர்கள், மக்களால் நிரம்பிய கும்பல் நீதிக்குழு எல்லாவற்றையும் விசாரித்து உடனே தீர்ப்பு வழங்கிவிடும்!
  • இந்த வழிமுறை மிகவும் எளிதானது. முதல் படி: ஒருவர் முறைதவறி நடந்துவிட்டார் என்று குற்றம் சாட்டுங்கள். இரண்டாவது படி: கும்பலாக சேருங்கள். மூன்றாவது படி: ‘கும்பல் சட்டப்படி’ தண்டனை என்னவோ அதை உடனே வழங்கிவிடுங்கள். 1-2-3, நீதி வழங்குவது மிக எளிது. முடிவுகளோ அபாரமானது! குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உண்டா என்று விசாரிக்க வேண்டாம், ஆதாரங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம், வழக்கறிஞர்களின் தேவையற்ற குறுக்கு விசாரணைகளில் காலத்தைக் கடத்த வேண்டாம். கும்பலுக்குத் தெரியும் யார் குற்றம் செய்தார், என்ன குற்றத்தைச் செய்தார் என்று. இப்போது சமூக ஊடகங்கள் உடனிருக்கின்றன அல்லவா, யார் வேண்டுமானாலும் ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு ‘மெய்நிகர் நீதிபதி’ ஆகிவிடலாம், அவரே நடுவராகவும், நீதியை வழங்கும் தண்டனை அதிகாரியாகவும் வீட்டிலிருந்தே சொகுசாக செயல்படலாம்.
  • இவை எல்லாமே நாட்டின் நன்மைக்குத்தான்! நாடு மிகவும் இக்கட்டான, பெரிய மாற்றத்துக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் காலகட்டம் இது. நாட்டில் இப்போது தேவை ஒழுங்கு; அது கும்பல்களால் மட்டுமே நிலைநாட்டப்பட முடியும்! தங்களுடைய கல்விக்காக போராடிய மாணவர்களைத் தவிர வேறு யாரால் சமூகத்தைக் கட்டுக்குள் வைத்துவிட முடியும்?

பொருளாதாரத்தையும்கூட…

  • இந்தக் கும்பல்கள் நீதித் துறையைச் சீர்திருத்தி தண்டனை வழங்குவதோடு நிறுத்திவிடவில்லை. பொருளாதாரத்துக்குப் புதிய வடிவம் கொடுக்கவும் உழைக்கின்றன. உதாரணத்துக்கு பாருங்கள், காஜி டயர் நிறுவனம், பெக்ஸிம்கோ ஆடை தயாரிப்பு நிறுவனம் ஆகியவை ஒரு காலத்தில் மிகவும் துடிப்பான உற்பத்தி – வியாபார கேந்திரங்களாக இருந்தன - இன்றோ சாம்பல் மேடுகள். பொருளாதார நிலைத்தன்மையாவது, வெங்காயமாவது? அழிப்பதன் மூலம்தான் ஆக்க முடியும் என்று இந்தக் கும்பல்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஒரே நாள் இரவில் 4,000 முதல் 5,000 பேர் வரை தொழிலாளர்கள் நேரடியாக வேலைவாய்ப்பை இழந்தனர். இது அவர்களுக்கு இழப்புதான், முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போட முடியுமா?
  • ஐயோ அந்தத் தொழிலாளர்கள் இனி என்ன செய்வார்கள் என்று கேட்கிறீர்களா? இதற்கெல்லாம் எவரிடமும் பதில் இல்லை. மேலும், உணர்ச்சிவயமான இந்தத் தருணத்தில் இந்தக் கேள்விகள் அநாவசியமானவை. கும்பல்கள் துடிப்பாகச் செயல்படும்போது சில ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரம் போனால்தான் என்ன? நாம் இப்போது ‘புதிய வங்கதேச’த்தைச் செங்கல் செங்கல்லாக அடுக்கி உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்; ஒரு போராட்டம் - ஒரு சூறையாடல் என்று ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறோம்.

இடைக்கால அரசு

  • கும்பல்களின் நீதி வழங்கல்கள் காரணமாக ‘இடைக்கால அரசு’ எதையும் செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. அரசு அதிகாரியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “என்ன செய்யலாம் என்று விவாதித்துக்கொண்டிருக்கிறோம்” என்று அற்புதமாக பதில் அளித்தார். நிருபர்களிடையே பேசும்போதே அவருக்கு வேர்த்து விறுவிறுத்தது; இருந்தாலும், “எல்லாவித வழிகளையும் ஆலோசித்துக்கொண்டிருப்பதாகவும்” குறிப்பிட்டார்.
  • கும்பல்களால் தாக்கப்படுவோம் என்று அஞ்சிய வங்கதேச காவல் துறை செயலற்றுக்கிடக்கிறது. வேலைபோய்விடும் என்ற அச்சம் அவர்களிடையே நிலவுகிறது. காவல்நிலையங்களை கும்பல்கள் எரித்துவிட்டன. காவல் துறை அதிகாரிகளை ‘கொலைகாரர்கள்’ என்று கும்பல்கள் ஜூலை – ஆகஸ்ட் போராட்டங்களின்போது முத்திரை குத்திவிட்டதால் அவர்கள் வெளியே தலைகாட்டவே தயங்குகிறார்கள். சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் துறை முடங்கிவிட்டதால், கும்பல்கள் அந்த இடைவெளியை இட்டு நிரப்புகின்றன. காவல் துறை மீது நம்பிக்கை போய்விட்டால் அப்புறம் கும்பல்கள்தானே நம்பிக்கைக்குரியவர்கள்?
  • இந்தக் கும்பல்கள் வன்முறையாளர்கள்தான் ஆனால் ஜனநாயகவாதிகள்! அவர்களுடைய கூச்சல்களையும் கோபத்தையும் பாருங்களேன். இடைக்கால அரசு செயல்பட்டே தீர வேண்டும் – கும்பல்களுடைய செயல்கள் சரியல்ல என்பதால் அல்ல, ஒரே சமயத்தில் கும்பல்கள் செயல்பட்டுக்கொண்டு - இடைக்கால அரசு செயல்படாமல் இருப்பது நகை முரணாக இருக்கிறது. தொழிற்சாலைகளுக்குத் தீ வைப்பதும், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்படுவதும் நடக்கும் நாட்டிலிருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறிவிடும். நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்காகவாவது அரசு ஏதோ ஒரு கட்டத்தில் இந்தக் கும்பல்களின் செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்துதான் தீர வேண்டும்.
  • கும்பல் எதைச் செய்தாலும் நடவடிக்கை எடுக்காமல் சகித்துக்கொள்வதை இடைக்கால அரசு இன்னும் எத்தனை நாள்களுக்குக் கடைப்பிடிக்கப்போகிறது என்று மக்கள் படபடக்கும் நெஞ்சங்களோடு பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். வங்கதேசம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துகொண்டிருந்தவேளையில், கும்பல்களுடைய அராஜகம் நாட்டுக்குப் புதிய அடையாளமாகிவிட்டது. கையில் ஸ்மார்ட்போன்களோடு வன்முறையில் ஈடுபடும் கும்பல்கள் வீதிகளில் வலம்வரும்போது நீதித் துறையும் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் ஏன் தேவைப்படுகிறார்கள்?

வழுக்குப் பாறை

  • கும்பல்கள் நியாயம் வழங்குவது, உண்மையில் நியாயமும் அல்ல, நிரந்தரமாகவும் இருக்க முடியாது, அது வழுக்குப் பாறை போன்றது. இன்றைக்கு உங்களுடைய பக்கத்து வீட்டுக்காரருடைய வீடு எரிக்கப்படலாம், நாளை அந்த எரிப்பு உங்களுடைய வீட்டுக்கே வரலாம். இப்படி கும்பல்களின் ‘புரட்சித் தீ’ மேலும் கொழுந்துவிட்டு எரிவதற்குள் நாம் விழித்துக்கொள்ள வேண்டும். தான்தோன்றித்தனமான நீதி வழங்கலுக்கும், அராஜகமான செயல்களுக்கும் இடையில் மெல்லிய கோடுதான் தடுப்புச் சுவராகப் பிரிக்கிறது. இவற்றைத் தடுக்கும் சாதனம் எங்கே இருக்கிறது என்பதை யாராவது, ஏதாவது ஒரு நாளில் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நம்புவோம்.

நன்றி: அருஞ்சொல் (29 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்