- நகைக் கடன், வீட்டு வசதி கடன், வர்த்தக நோக்கங்களுக்காக கடன் வழங்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக ஐஐஎஃப்எல் உள்ளது. இந்த நிலையில், தங்க நகைப் பிரிவில் புதிதாக கடன்களை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அந்நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள தடை அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
- தங்க ஆபரணங்களின் தூய்மையை பரிசோதித்தல், கடன் வழங்கும் நடைமுறை, தவணை கட்ட தவறியவர்களின் நகை ஏலம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் இந்நிறுவனம் உரிய விதிமுறைகளை கடைபிடிக்கப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பிடித்தம் செய்யப்படும் சேவைக் கட்டணங்களில் சீரான கட்டண முறையோ அல்லது வெளிப்படைத் தன்மையோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
- இந்த நிலையில், ரிசர்வ் வங்கி சட்டம் 1934 பிரிவு 45எல் (1)(பி)-ன் கீழ், இந்நிறுவனம் புதிதாக தங்க நகை கடன்கள் வழங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஏற்கெனவே வழங்கப்பட்ட கடன்களுக்கான செயல்முறைகளை வழக்கம்போல தொடரலாம் என்று தெரிவித்தது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த கட்டுப்பாடு கடுமையானதாக தோன்றுகிறது. இது, நிறுவனத்தின் நிர்வாகம் சார்ந்த அல்லது நெறிமுறை சார்ந்த பிரச்சினையோ இல்லை.
- செயல்பாடுகளில் காணப்படும் சில பிரச்சினைகள் மட்டுமே. தங்க சோதனையை பொருத்தவரை எங்கள் கிளைகளின் மதிப்பீட்டுக்கும், தணிக்கை குழு மதிப்பீட்டுக்கும் வேறுபாடுகள் இருக்கலாம். எனினும், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்குப் பின் திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஐஐஎஃப்எல் நிர்வாக இயக்குநர் நிர்மல் ஜெயின் தெரிவித்துள்ளார்.
- ஜேஎம் பைனான்சியல் நிறுவனத்துக்கும் தடை அதேபோன்று, பங்குகள் மற்றும் கடனீட்டு பத்திரங்களுக்கு எதிராக எந்தவிதமான நிதி உதவியும் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜேஎம் பைனான்சியல் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
- வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாப்பதில் ரிசர்வ் வங்கி உறுதியாக உள்ளது. இதை உறுதி செய்வதற்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 03 – 2024)