TNPSC Thervupettagam

வங்கி டெபாசிட் பாதுகாப்பானது

September 18 , 2023 425 days 270 0
  • எந்த ஒரு மனிதனுக்கும் நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்பட சேமிப்பு மிகவும் அவசியம். வருமானத்தைவிட செலவுகுறைவாக இருக்கும் நிலையில் சேமிப்புஏற்படுகிறது. பலவிதங்களில் வருமானத்தை அதிகரிப்பதும் பலவழிகளில் செலவினங்களை குறைப்பதும் அதிக சேமிப்பிற்கு வழிவகுக்கும். சேமிக்கும் பணத்தை சரியான வகையில் முதலீடு செய்வதும் அவசியம்.
  • முதலீடுகளில் பல வகை உண்டு. அதிக ரிஸ்க் உள்ளதாக பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளன. மிக குறைந்த ரிஸ்க்உள்ள முதலீடுகளாக வங்கி டெபாசிட்கள் உள்ளன.
  • இந்தியாவில் இயங்கும் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று அதன் மேற்பார்வையிலேயே வங்கித்தொழிலை கையாள்கின்றன. இந்த வங்கிகள் சாமான்ய மனிதர்களின் சேமிப்பை திரட்டி, நாட்டில் உற்பத்தியை பெருக்க தொழில் முனைவோருக்கும், விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கும் கடன் வழங்குகின்றன. வங்கிகள் சரியான வழியில் டெபாசிட்டர்களின் நிதியை பராமரிப்பது அவசியம். அதற்கான பல கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

கட்டுப்பாடுகள்

  • வங்கிகள் பெறும் டெபாசிட்டுகளை முழுவதுமாக கடனாக வழங்க முடியாது. அவ்வாறு செய்தால் அதில் ரிஸ்க் அதிகம். வங்கிகள் தாங்கள் பெறும் டெபாசிட்களில் 18 சதவீதத்தை அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். இது சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் எனப்படும். மேலும் நாலரை சதவீதத்தை பண இருப்பு விகிதமாக (ரிசர்வ் வங்கியில்) அனுசரிக்க வேண்டும். இதுபோன்ற கட்டுப்பாடுகள் வங்கிகள் அகலக்கால் வைத்து இழப்பை சந்திப்பதை தவிர்க்கின்றன.
  • மேலும் வங்கிகள் எந்தெந்த துறையில் எவ்வளவு கடன் வழங்கலாம் என்பதற்கும் ஒரே நிறுவனத்திற்கு எவ்வளவு கடன் வழங்கலாம் என்பதற்கும் கட்டுப்பாடுகள் உண்டு.
  • கடன் கணக்குகளிலிருந்து வட்டியை லாப கணக்கிற்கு மாற்றுவதற்கும் வழிமுறைகள் உண்டு. வாராக்கடன்களில் வட்டியை பற்று வைக்க முடியாது. வாராக்கடன்களுக்கு ஏற்ப லாபத்தில் ஒருபகுதியை ஒதுக்கி வைக்கவும் ஒழுங்குமுறை உண்டு. வங்கிகள் தொடர்ந்து அவர்களின் டெபாசிட், கடன் போன்ற புள்ளிவிவரங்களை ரிசர்வ் வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற வழிமுறையும் உண்டு.
  • மேற்கண்ட கட்டுப்பாடுகள் காரணமாக வங்கிகள் டெபாசிட்டர்களிடம் பெற்ற நிதியை சரியாக கையாளவும், ஏதாவது தவறு நேர்ந்தால் அதை உடனே கண்டறிந்து சரி செய்யவும் ரிசர்வ் வங்கியால் முடியும்.
  • கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் எந்த வணிக வங்கியில் டெபாசிட் செய்திருந்தவர்களுக்கும் பணஇழப்பு ஏற்பட்டதில்லை. வங்கிகள் சரியான முறையில் ரிசர்வ் வங்கியால் கண்காணிக்கப்படுவதும் ரொக்க கையிருப்பு விகிதம், சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம், கடன் வழங்குவதில் கட்டுப்பாடு போன்றவற்றை அமல்படுத்தியுள்ளதுமே இதற்குக் காரணம் ஆகும். ஏதாவது வங்கி தடுமாறும் நிலை வந்தால் சரியான நேரத்தில் ரிசர்வ் வங்கியும் அரசும் தலையிட்டு வேறொரு வங்கியுடன் அதை இணைத்து டெபாசிட்டர்களை காப்பாற்றியுள்ளன.

டெபாசிட் இன்ஷுரன்ஸ்

  • மேலே குறிப்பிட்ட பல விதிமுறைகளையும் தாண்டி, ஒருவேளை எந்த வங்கியாவது திவாலாகும் நிலை வந்தால், அதனால் டெபாசிட்டர்கள் பாதிப்பு அடையக் கூடாது என்பதற்காக டெபாசிட் இன்சூரன்ஸ் உள்ளது. சென்ற வருடம் இன்சூரன்ஸ் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகை உயர்த்தப்பட்ட பிறகு 98.3 சதவீத டெபாசிட் கணக்குகள் டெபாசிட் இன்சூரன்ஸ் கீழ் வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தின் பாதிப்பு

  • வங்கி டெபாசிட்கள் பாதுகாப்பானது என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் பெறும் வட்டி லாபகரமானதா என்பதையும் பார்க்க வேண்டும். பணத்தின் மதிப்பு அதனுடைய வாங்கும் திறமையை பொறுத்தது. பணத்தின் வாங்கும் திறமை பணவீக்கத்தின் பாதிப்புக்கு உட்பட்டதே. எடுத்துக்காட்டாக சென்ற வருடம் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருந்தது. இதன் பொருள் சென்ற ஆண்டு ஒரு பொருளைநாம் நூறு ரூபாய்க்கு வாங்கி இருந்தால், இன்று அதே பொருளை வாங்குவதற்கு ரூபாய் 106.70 செலவு செய்யவேண்டும்.
  • இது சராசரியாக எல்லா பொருள்களுக்குமானது. சில பொருள்கள் விலை அதிகமாகவோ சில பொருள்கள் குறைவான விலையுடனோ இருக்கலாம். எனவே வங்கி வழங்கும் வட்டியில் பணவீக்கத்தை கழித்தால் மட்டுமே நமக்கு உண்மையான வட்டி தெரியும். லாபம் அதிகமோ, குறைவோ, ஒட்டுமொத்தத்தில் வங்கிகளே நமது டெபாசிட் தொகைக்கு பாதுகாப்பான இடம்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்