- தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுவதற்காகப் பட்டியலிடப்பட்டுள்ள மசோதாக்களில் முக்கியமான ஒன்று, வங்கிகள் தனியார்மயத்தை அதிகரிப்பதற்கான மசோதா.
- வங்கிகள் கம்பெனி சட்டம் 1970, 1980 மற்றும் வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ஆகிவற்றில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு சட்டங்கள் மூலம்தான் 14 பெரிய தனியார் வங்கிகளும், 6 பெரிய தனியார் வங்கிகளும் இந்திரா காந்தி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசுகளால் தேசியமயமாக்கப்பட்டன. அவற்றின் 100% பங்குகள் தனியார் கைகளிலிருந்து ஒன்றிய அரசின் வசம் மாற்றப்பட்டன. 1994-ல் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் வங்கி ஊழியர்களின், பொது மக்களின் பரவலான எதிர்ப்பையும் மீறி கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் மூலமாக பொதுத்துறை வங்கிகளில் ஒன்றிய அரசின் பங்குகள் 100% என்பதிலிருந்து 51% ஆகக் குறைக்கப்பட்டது.
காத்திருக்கும் பேரபாயம்
- ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, ‘இந்த நிதி ஆண்டிற்குள் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும்’ என்று அரசின் நோக்கத்தை அறிவித்தார். தற்போது கொண்டுவரப்படவுள்ள சட்டத்திருத்தத்தின் நகல்கள் இன்று வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சுற்றுக்கு விடப்படவில்லை. ஆனால், இந்தச் சட்டத்திருத்தம் மூலமாக அரசு வங்கிகளில் ஒன்றிய அரசின் பங்குகள் 51%-க்குக் கீழே குறையும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அது 33% ஆகலாம் அல்லது 26% ஆகலாம் என்று இரு பேச்சுகள் உள்ளன; அரசின் பங்கு முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்படலாம் என்றும்கூட ஒரு பேச்சு உள்ளது. திட்டவட்டமாகத் தெரியவில்லை.
- எதுவாக இருந்தாலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டுவிட்டால், இரண்டு வங்கிகள் மட்டுமல்ல; தற்போதுள்ள 12 பொதுத் துறை வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி தவிர மற்ற 11 அரசு வங்கிகளையும் தனியார்மயமாக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குக் கிடைத்துவிடும். பின்னர் நாடாளுமன்றத்தை நாடாமலேயே வெறும் அரசு ஆணையின் மூலமாகவே 11 வங்கிகளையும் தனியார்மயமாக்கிவிட முடியும்.
- ஒரு பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்கப்போகிறோம் என்றுதான் பட்ஜெட்டின்போது அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலமாக ஐந்து பொதுத்துறைப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களையும் தனியார்மயமாக்குவதறகான அதிகாரத்தை அரசு பெற்றிருக்கிறது. இதே பாணிதான் வங்கி தனியார்மயமாக்கலின்போதும் நடைபெறும் என்று தெரிகிறது.
அரசின் வாதம் என்ன?
- அரசு வங்கிகள் குறைவாக லாபம் ஈட்டுகின்றன. பல சமயம் நஷ்டமடைகின்றன. மக்கள் வரிப்பணத்திலிருந்து கடந்த ஏழாண்டுகளில் மூன்று லட்சம் கோடி ரூபாய் மூலதனமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தனியார்மயம். இதுவே ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைக்கும் வாதம். இதன் உண்மைத்தன்மை என்ன என்று பார்ப்போம்.
- கடந்த ஏழு ஆண்டு கால பாஜக ஆட்சியில் அரசு வங்கிகள் ஈட்டிய மொத்த லாபம் ரூ.11,10,913 கோடி. வராக்கடன்களுக்காக லாபத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ரூ.12,38,346 கோடி. இதில் 90% பெருங்கடனாளிகளின் வராக்கடனுக்காக ஒதுக்கப்பட்டது. நிகர நஷ்டம் ரூ.1,27,433 கோடி. பெருங்கடனாளிகளுக்கான ஒதுக்கீடுதான் நிகர நஷ்டத்திற்கு காரணம். இத்துடன் ரூ.8,10,262 கோடி இந்த ஏழாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதிலும் 90% பெருங்கடனாளிகளின் கடன் தள்ளுபடியே ஆகும்.
பெருநிறுவனங்களுக்குச் சாதகமான கொள்கைகள்
- பெரும் கடனாளிகளுக்கு கடன் வழங்கும் கொள்கையும், கடன் வசூல் கொள்கையும் அவர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த அளவு சொத்து அடமானம் பெற்றுக்கொண்டு கடன் கொடுக்கும் கொள்கையும், மென்மையான கடன் வசூல் சட்டங்களுமே இந்தப் படுமோசமான நிலைக்கு காரணம். இதில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று வங்கி ஊழியர் இயக்கம் நீண்ட நாட்களாக போராடிவருகிறது. இதை சரி செய்யும் பொறுப்பு ஒன்றிய அரசையே சார்ந்தது. ஆனால், கார்ப்பரேட்டுகளின் நலம் காக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு இதைச் செய்யாது.
அரசு வங்கிகளுக்கு மூலதனம்
- இத்தகைய நஷ்டத்தை ஓரளவு சரிசெய்யவே பொதுத்துறை வங்கிகளுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் மூலதனம் வழங்கி உள்ளது ஒன்றிய அரசு. இந்த மூலதனப் பணம் அரசு வங்கிகள் மூலமாக ‘பெருநிறுவனங்களுக்கு வராக்கடன் தள்ளுபடி’ என்ற பெயரில் மடைமாற்றம் செய்யவே பயன்பட்டுள்ளது. அரசு வங்கிகள் ஓர் இணைப்புக் குழாயாகப் பயன்படுத்தப்படுகிறது. மாறாக கடுமையான சட்டத்தின் மூலமாக பெருநிறுவனங்களின் வராக்கடன் வசூலிக்கப்பட்டால், பொதுத்துறை வங்கிகளுக்கு ஒன்றிய அரசு எந்த மூலதனமும் தர வேண்டிய அவசியமே எழாது.
- அந்தத் தொகை சாமான்ய மக்களின் நலன்களுக்காக செலவிடப்படலாம். அரசு வங்கிகளும் தமது 11 லட்சம் கோடி ரூபாய் மொத்த லாபத்தில் பெரும் பங்கை ஒன்றிய அரசுக்கு கொடுத்திருக்கும். அரசு பணமயமாக்கல் திட்டம் மூலமாக ரூ.6 லட்சம் கோடி திரட்ட வேண்டிய தேவையே இருக்காது. எனவே மத்திய நிதி அமைச்சரின் கூற்றில் உண்மைத்தன்மையே இல்லை.
தனியார்மயமானால் என்னவாகும்?
- அரசு வங்கிகள் தனியார்மயமானால் வாடிக்கையாளர்களின் சேமிப்பிற்கு முழுமையான பாதுகாப்பு இருக்காது. 1969-க்கு பிறகு 38 தனியார் வங்கிகள் திவாலாகின. அவற்றில் 25 தனியார் வங்கிகளை அரசு வங்கிகள் தாம் தங்களோடு இணைத்துக்கொண்டு காப்பாற்றின. புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட 10 தனியார் வங்கிகளில் 4 வங்கிகள் திவாலாகிவிட்டன. சென்ற ஆண்டு திவாலாகும் நிலைக்கு சென்ற யெஸ் வங்கியை அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கிதான் காப்பாற்றியுள்ளது.
- அரசு வங்கிகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை உள்ளது. அவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவை. ஆனால் தனியார் வங்கிகளுக்கு இந்த சட்டம் பொருந்தாது. அவற்றில் வெளிப்படைத்தன்மை கிடையாது. அதோடு, பணி நியமனத்தில் தலித், பழங்குடியினர், முன்னாள் ராணுவ வீரர், உடல் ஊனமுற்றோர் போன்றோர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்காது. சமூக நீதி மறுக்கப்படும்.
34 கோடி ஜன் தன் கணக்குகள்
- அரசு வங்கிகள் சாமானிய மக்களுக்கான சேவையில் முன்னணியில் நிற்கின்றன. சாமானிய மக்களுக்கான 43.93 கோடி ஜன் தன் கணக்குகளில் 34.67 கோடி கணக்குகள் பொதுத்துறை வங்கிகளாலும், 7.99 கோடி கணக்குகள் கிராம வங்கிகளாலும் திறக்கப்பட்டிருக்கின்றன. 1.27 கோடி கணக்குகள் அதாவது மொத்தத்தில் 2.89% கணக்குகள் மட்டுமே தனியார் வங்கிகளால் திறக்கப்பட்டுள்ளன. அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால் 34 கோடி ஜன் தன் வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவை மறுக்கப்படும். அவர்கள் வங்கிகளிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
- பெருவாரியான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விவசாயம், சிறு, குருந்தொழில், பெண்களின் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கல்விக் கடனை வழங்குவதில் அரசு வங்கிகள் ஆகப் பெரும் பங்காற்றுகின்றன. இவை இல்லாவிட்டால் நாட்டின் உணவு உற்பத்தி, வேலை வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும். மக்களின் வாங்கும் சக்தி குறையும். அதனால் பொருளாதார கிராக்கி குறையும். அதனால் உற்பத்தி குறையும். இது மேலும் வேலையிழப்பை உருவாக்கும். இந்த தொடர் சங்கிலி பெரும்பாலான இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளும்.
- எனவேதான் ஜனநாயகத்திலும், சமூகநீதியிலும் அக்கறை கொண்டோர் இப்படி வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது.
- தனியார்மய மசோதாவை திரும்பப் பெற வேண்டும்
- வங்கித்துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்
- அரசு வங்கிகளை வலுப்படுத்த வேண்டும்
- இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலின்படி 2021 டிசம்பர் மாதம் 16, 17 ஆகிய இரு நாட்கள் அனைத்து வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் பங்கேற்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கான அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இதில் பகுதிநேர துப்புறவாளர்கள் முதல் முதன்மை மேலாளர்கள் வரை பங்கேற்கின்றனர்.
- இந்த வேலைநிறுத்தத்தினால் பொது மக்களுக்கு சில அசெளகரியங்கள் நேர்ந்தாலும், இது சாமானிய மக்களின் நலம் காக்கும் போராட்டம் என்பதை உணர்ந்து பொதுமக்கள் இதற்கு நல் ஆதரவு நல்குவார்கள் என்றே வங்கித் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி: அருஞ்சொல் (18 – 12 – 2021)