- நான் 1976ஆம் ஆண்டு, உயர்நிலைக் கல்வி பயில ஈரோட்டில் இருந்த என் அம்மாயியின் (அம்மாவின் அம்மா) வீட்டுக்கு வந்தேன். அம்மாயி விறகுக் கடை வைத்திருந்தார். விடுமுறை நாட்களில் விறகுக் கடைக்கு நான்தான் மேலாளன்.
- அந்த விறகுக் கடைக்கு தினமும் கால் சராய் அணிந்த ஒரு கிறிஸ்தவர், சைக்கிளில் வந்து போவார். அம்மாயி அவருக்கு தினமும் பத்து ரூபாய் தருவார். அந்தப் பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு கனரா வங்கி எனப் பெயர் இருந்த பாஸ்புக்கில் வரவு வைத்துக்கொடுத்துவிட்டுப் போவார். அது ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கு. ஆண்டு இறுதியில் சேமித்த 3,650 ரூபாயுடன் கொஞ்சம் வட்டியும் சேர்ந்து கிடைக்கும்.
- எங்கள் குடும்பத்தின் ஆணிவேர் அந்தச் சேமிப்புதான். அவரைப் பலகாலம் வங்கி அலுவலர் என நினைத்திருந்தேன். ஆனால், அவர் வங்கியின் விரிவாக்கப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த ஒரு முகவர் என்பது பின்னாளில் தெரியவந்தது. இந்தத் திட்டம் வங்கிகள் தேசியமயமாக்கத்தின் நேரடி விளைவு என்பதை வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் உரை வழியே தெரிந்துகொண்டேன்.
ஒப்புக் கொள்ள மறுக்கும் கருத்து
- ‘நீண்ட 1970களில் ஏழ்மையும் பொருளாதார மேம்பாடும்’ என்னும் தலைப்பில் அண்மையில், அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் ஸ்ரீநாத் ராகவன் ஆற்றிய உரை, வங்கிகள் தேசியமையமாக்கப்பட்டதன் பின்னணியில் சில புதிய புரிதல்களை அளிக்கிறது. 1969ஆம் ஆண்டு, இந்தியாவில் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இவை இந்தியாவில் வங்கிகளில் வைக்கப்பட்டிருந்த சேமிப்பில் 85%த்தை வைத்திருந்த வங்கிகளாகும். 1980ஆம் ஆண்டு மேலும் 6 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இத்துடன் இந்தியாவின் 91% வங்கித் தொழில் அரசின் கீழ் வந்தது.
- 1969ஆம் ஆண்டு, இந்திய அரசின் இந்த நடவடிக்கையை, அன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.கருணாநிதி, “உங்கள் அரசின் இந்த முடிவை நான் உறுதியாக வரவேற்கிறேன். இந்திய விடுதலைக்குப் பின்னான கடந்த 20 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முக்கியமான கொள்கை முடிவு” என வரவேற்று எழுதியிருந்தார். முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர், வங்கிகள் தேசியமயமாக்கத் திட்டத்தை எழுதிய இந்திய ரிசர்வ் வங்கியின் வரலாற்றாசிரியர்கள் இதே கருத்தை வழிமொழிந்தார்கள்.
- “வங்கிகள் தேசியமயமாக்க நடவடிக்கை என்பது விடுதலைக்குப் பின் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகளில் மிகச் சிறந்த ஒன்று. 1991 பொருளாதாரச் சீர்திருத்தங்களைவிட முக்கியமானது” என்கின்றனர் ரிசர்வ் வங்கியின் வரலாற்றாசிரியர்கள். துரதிருஷ்டவசமாக அரசியல், பொருளாதாரத் தளங்களில் இன்றுவரை ஒப்புக்கொள்ளப்படாத ஒரு கருத்து இது.
நிதித் துறையின் பெரும்பாய்ச்சல்
- இந்திரா காந்தியின் இந்த நடவடிக்கை என்பது இந்திய வங்கி மற்றும் நிதித் துறையின் அடிப்படைக் கட்டமைப்பையே மாற்றியமைத்தது. இதனால், ஊரகப் பகுதிகளில் அதிக வங்கிக் கிளைகள் தொடங்கப்பட்டன. 1969ஆம் ஆண்டில், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் 80% மக்கள் வசித்துவந்தனர். ஆனால், 22% வங்கிக் கிளைகள் மட்டுமே ஊரகப் பகுதிகளில் இருந்தன. 80% மக்களுக்கு 22% வங்கிக் கிளைகள் என்பது ஒப்புக்கொள்ள இயலாத பாரபட்சம்.
- 1969ஆம் ஆண்டில், இந்தியாவின் 2,700 நகரங்களில், 617 நகரங்களில் வங்கிகள் இல்லை. இந்தியாவின் ஆறு லட்சம் கிராமங்களில், 5000 கிராமங்களில்கூட வங்கிகள் இல்லை. வங்கிகள் வழங்கிய கடன்களில் வேளாண்மைக்கு 1%க்கும் குறைவாகவும், சிறு வணிகத்துக்கு 2%க்கும் குறைவாகவும் இருந்தன.
- இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்ட நான்கே ஆண்டுகளில் (1973) ஊரக வங்கிக் கிளைகள் 36% ஆக உயர்ந்தது. 1985ஆம் ஆண்டில் இது 56% ஆக மேலும் உயர்ந்தது. வேளாண்மையும், ஊரகக் குறுந்தொழில்களும் முதன்மைத் துறைகளாகக் கருதப்பட்டு, வங்கிகள் வழங்கும் கடன்களில் குறைந்தபட்சம் 40% இவற்றுக்கு வழங்கப்பட வேண்டும் என இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன.
- அதுவரை வங்கிகள் வழங்கிய கடன்களில் 3%க்கும் குறைவாக இருந்த வேளாண் மற்றும் சிறுதொழில் துறைக்கான கடன்கள் 35% ஆக அதிகரித்தது இந்திய நிதித் துறையில் மக்கள் நலன் நோக்கிய பெரும்பாய்ச்சல் ஆகும்.
வங்கிக் கொள்கையும் வேளாண்மையும்
- இந்த முடிவு எடுக்கப்பட்ட ஆண்டுதான் இந்தியா உணவு தானிய உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியை நிறுத்தியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் வேளாண்மையும் ஊரகத் தொழில்களும் இந்தியாவின் 90% மக்களுக்கான வாழ்வாதாரமாக இருந்தன.
- உழவர்களும், ஊரகச் சிறுதொழில்முனைவோர்களும், தொழில் செய்யத் தேவையான நிதித் தேவைகளுக்காக உள்ளூர் செல்வந்தர்களையே நம்பியிருந்தனர். இவர்கள் பெரும்பாலும் முற்பட்ட, ஆதிக்கச் சாதியினராகவே இருந்தனர். உள்ளூரில் கடன் வட்டி விகிதங்கள், வங்கியின் வட்டி விகிதங்களைவிட 1000% முதல் 1200% வரை அதிகமாக இருந்தன.
- எதிர்பாராதவிதமாக வேளாண்மையில் நஷ்டம் ஏற்பட்டால் உழவர்கள் உள்ளூர் கந்துவட்டி முதலாளிகளிடம் நிலத்தை இழந்து கூலிகளாக மாறுவது மிகச் சாதாரணமான நிகழ்வாக இருந்தது. நிலம் மட்டுமல்ல, பல பகுதிகளில் பெரும் நிலச்சுவான்தார்கள் உழவர்களின் மனைவி மக்களை அபகரித்துக்கொள்ளும் கொடுமையும் அன்று இயல்பு.
- கலை, வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் என்பார்கள். 1970களின் இறுதி வரை இந்தியத் திரைப்படங்களின் வில்லன்கள், ஊரக ஏழைகளுக்கு வட்டிக்குப் பணம் தந்து அவர்கள் நிலத்தையும் பெண்கள், பிள்ளைகளையும் அபகரித்துக்கொள்பவர்களாக இருந்தார்கள். ‘உரிமைக் குரல்’ என்னும் வெகுஜனத் திரைப்படத்தின் வில்லன் நம்பியாரும், ‘விதேயன்’ என்னும் அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தின் மம்மூட்டியும் மிகச் சிறந்த உதாரணங்கள்.
- இந்தியாவின் மிக வெற்றிகரமான திட்டங்களான பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சி திட்டங்களுக்கு ஒன்றிய அரசு வலிந்து உருவாக்கிய இந்த மிக விரிவான வங்கிக் கட்டமைப்பு மிகப் பெரும் ஆதாரமாக இருந்தது. கறவை மாடு கடன், உரம் மற்றும் வேளாண் இடுபொருட்கள் கடன் போன்றவை குறைவான வட்டியில் கிடைத்து, பெருமளவு உழவர்கள் கந்துவட்டிக் கடன் கொடுமையிலிருந்து வெளியே வந்தார்கள். இந்த வசதியைக் கரும்பு ஆலைகள் பயன்படுத்தி, தங்களிடம் ஒப்பந்தம் செய்துகொள்ளும் உழவர்களுக்கு வங்கிகள் வழியே எளிதாக கடன் வாங்கிக் கொடுத்தார்கள். இந்தக் கட்டமைப்பினால், ஊரக மக்களுக்குக் கிடைத்த விடுதலையைப் புள்ளி விவரங்களை வைத்து மட்டுமே எழுதிவிட முடியாது.
- வங்கிகள் தேசியமயமாக்கத்தின் விளைவுகள் இத்துடன் மட்டுமே முடியவில்லை. அது ஒரு பக்கம் மட்டுமே.
வங்கிகளும் பணப் பாதுகாப்பும்
- இந்திய ஊரக மக்களில் பெரும்பாலானோர் ஏழைகள். எப்படிப்பட்ட ஏழ்மை நிலையில் இருந்தாலும், அவசர காலத்துக்குக் கொஞ்சமேனும் சேமிக்க வேண்டும் என்னும் ஒரு விழைவு மக்களிடம் இருக்கும். ஆனால், அந்தக் காலத்தில் கிராமங்களில் சேமிப்பு வசதிகள் இல்லாததால், எந்தப் பாதுகாப்பும் இல்லாத வழிகளே அவர்களுக்கு இருந்தன.
- நகர்ப்புற வங்கிகளில் சேமிப்புகளை முதலீடு செய்திருந்த மக்களுக்கும் ஆபத்துக்கள் இருந்தன. 1947 முதல் 1969 வரையான காலகட்டத்தில் 665 வங்கிகள் திவாலாகின. தான் பெற்ற நோபல் பரிசு பணத்தின் ஒரு பகுதியை சர் சி.வி.இராமன் ஒரு வங்கியில் வைப்பு நிதியாக வைத்து இழந்தது ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு.
- ஆனால், அரசு வங்கிகளின் பின்னே அரசின் பாதுகாப்பு என்னும் அரண் இருந்தது ஊரக மக்களின் சேமிக்கும் வழக்கத்துக்குப் பெரும் ஆதரவாக இருந்தது. வங்கிகள் வழியே மக்கள் சேமிக்கும் பணம் அரசுக்கும் பயன் தருவதாக இருந்தது.
- வங்கிகளின் பாதுகாப்பு கருதி, அவற்றில் பொதுமக்கள் சேமிக்கும் வைப்பு நிதியில் 25% வங்கிகள் அரசு கடன் பாத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்னும் விதி இருந்தது. 25% ஆக இருந்த அந்த விதியை அரசு 36% ஆக உயர்த்திக்கொண்டது. அதேபோல, வங்கிகள் தமது சேமிப்பில் ரிசர்வ் வங்கியில் பாதுகாப்புக்காக 5% முதலீடு செய்ய வேண்டும் என இருந்த அளவையும் 5%லிருந்து 9% ஆக உயர்த்திக்கொண்டது.
- வங்கிகளின் பாதுகாப்புக்காக என உருவாக்கப்பட்ட இந்த விதிகள் வழியே அரசுக்குக் கிடைத்த செல்வம், அரசின் திட்டங்களுக்கான நிதி ஆதாரமாக மாறியது இந்திய நிதித் துறையில் நிகழ்ந்த மாபெரும் அடிப்படை மாற்றமாகும். 1980களில் அரசின் கடன் பத்திரங்களில் 69% பொதுத் துறை வங்கிகள் கொடுத்தவை ஆகும். அரசு ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் பங்கையும் சேர்த்தால், பொதுமக்களின் சேமிப்பின் வழியே அரசு தனக்கான நிதிக் கடனில் 78%த்தை பொதுமக்களிடம் இருந்தே பெற்றுக்கொண்டது.
பரஸ்பர நன்மை
- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழியே அரசு சாதாரண மக்களுக்கான நிதித் தேவையைப் பூர்த்திசெய்வதோடு மட்டுமே நிறுத்திக்கொள்ளவில்லை, தன் திட்டங்களுக்குத் தேவையான நிதியாதாரங்களையும் அவர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டது.
- இப்படி ஒரு வழியில் அரசுக்கு நிதி கிடைக்கவில்லையெனில், அரசு தன் திட்டங்களுக்கான நிதியைப் பெற பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டியிருந்திருக்கும். அப்படி ஒரு வழியை 1980க்குப் பின் அரசு தேர்ந்தெடுத்து 1990ஆம் ஆண்டு அன்னியச் செலாவணிச் சிக்கலில் மாட்டிக்கொண்டது நம் கண் முன்னே உள்ள வரலாறு.
- வேளாண்மையில் பரஸ்பர நன்மை (Symbiosis) என்றொரு கருதுகோள் உண்டு. பயறுவகைப் பயிர்களின் வேர்களில் ஒரு வகை நுண்ணுயிர்கள் ஒட்டி வாழும். அவை தமக்குத் தேவையான உணவை பயிர்களில் இருந்து உறிஞ்சிக்கொள்ளும். அதேசமயத்தில், காற்றில் இருக்கும் நைட்ரஜனை ஈர்த்து மண்ணில் செலுத்தும். இப்படி மண்ணில் ஈர்க்கப்படும் நைட்ரஜன் பயிருக்கான முக்கியமான ஊட்டச்சத்தாக மாறும். வங்கிகள் தேசியமயமாக்கம் அப்படிச் சமூகத்துக்கும் அரசாங்கத்துக்கும் பரஸ்பரம் பயனளித்த உண்மையான மேம்பாட்டுத் திட்டம்.
நன்றி: அருஞ்சொல் (11 – 08 – 2024)