- சமீபத்தில் ஒரு மருந்துக் கடைக்குச் சென்றிருந்தபோது, வட இந்தியத் தொழிலாளர்கள் சிலர் அங்கு வந்ததைப் பார்த்தேன். அவர்களைக் கண்டதும் மருந்தாளுநர், வலிநிவாரணிகளை அவர்கள் கேட்காமலேயே எடுத்துக்கொடுத்தார்.
- தொடர்ந்து பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அந்த ஆபத்தான மருந்துகளை அவர்கள் ஏன் வாங்குகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாள் முழுவதும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட்டதால் ஏற்படும் உடல் வலியைப் போக்கவும், நிம்மதியான உறக்கத்தைப் பெறவும் அவர்கள் அந்த வலிநிவாரணிகளை வாங்கிச் செல்வதாகப் பின்னர் அறிய முடிந்தது.
- ஆனால், அந்த மருந்துகளால் ஏற்படப் போகும் பிரச்சினைகளை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதைப் பொருட்படுத்தவும் அவர்களுக்கு நேரம் இல்லை. அவர்களைத்தான் ‘வடக்கன்ஸ்’ என நம்மவர்கள் விளிக்கிறார்கள். நம் தொழிலாளர்களின் வாய்ப்பை அவர்கள் தட்டிப்பறிப்பதாகவும் விமர்சிக்கிறார்கள்.
வரவின் பின்னணி
- வட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மேலதிக சமூக, பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு மட்டுமே 8.8% பங்களிக்கிறது. இது தேசியப் பங்களிப்பில் இரண்டாமிடம். நாட்டிலேயே அதிக அளவு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்குகின்றன.
- சமூக வளர்ச்சியிலும் நமது மாநிலம் சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரியில் சேர்வோர் விகிதம் (GER), தேசிய விகிதத்தைவிட இரண்டு மடங்கு. இந்தியாவிலேயே அதிக அளவு முனைவர் படிப்புகளை (PhD) முடிப்போர் விகிதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
- இந்தியாவில் உள்ள சிறந்த 100 கல்லூரிகளில் 32 தமிழ்நாட்டில் இருப்பதாகக் கூறுகிறது, தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (NIRF). அதேபோல சுகாதாரக் குறியீடுகள், தனிநபர் வருமானம் ஆகியவற்றிலும் நம் மாநிலம் முன்னேறியுள்ளது.
- உயர் கல்வி பெற்று மற்ற மாநிலங்களுக்கும், வேறு நாடுகளுக்கும் குடிபெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை தோராயமாக 50 லட்சம் என மதிப்பிடப்படுகிறது. ‘அயலகத் தமிழர்கள் நல மாநாடு’ ஒன்றைத் தமிழ்நாடு அரசு சமீபத்தில் நடத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.
- இது மட்டுமல்லாது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆண்டுதோறும் உயர் கல்விக்காக ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் இப்போதும் பயணிக்கின்றனர். மறுபுறம், குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி (NFHS-5) பிறப்பு விகிதத்துக்கான தேசியச் சராசரி 2.0 என்று உள்ளபோது, தமிழ்நாட்டில் அது 1.7 ஆகக் குறைந்துள்ளது.
- இவ்வாறு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார வளர்ச்சி, குறைந்த பிறப்பு விகிதத்தை ஒட்டிய மக்கள்தொகை குறைவு போன்றவை, உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தட்டுப்பாடு, வட இந்தியத் தொழிலாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி நகர்த்தியுள்ளது.
அதிகரிக்கும் வெறுப்பு
- வளர்ந்த பிரதேசங்களை நோக்கிய மக்களின் நகர்வு உலகம் முழுவதும் வழக்கமானதுதான். மனிதவளக் குறியீட்டில் தொடர்ந்து முதல் வரிசையில் உள்ள கனடா, வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 15 லட்சம் வெளிநாட்டவரைத் தங்கள் நாட்டில் குடியேற்ற முடிவுசெய்துள்ளது.
- இது அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 4% ஆகும். ஏனெனில், அங்கும் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதன் காரணமாகத் தொழிலாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதை நிவர்த்திசெய்யவில்லை எனில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி குறைந்து பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பது அந்நாட்டின் கவலை.
- அதேபோல், வட இந்தியத் தொழிலாளர்கள் தமிழகத்தை நோக்கி வருவதும் சமூக, பொருளாதார அளவீடுகளின்படி தவிர்க்க இயலாத ஒன்றுதான். மாதம் ரூ.10,000 ஊதியத்துக்கு அவர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்கிறார்கள். பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு இல்லாமல் குடும்பத்தைப் பிரிந்து, மோசமான வாழிடத்தில் தங்கி வேலை செய்கின்றனர்.
- இவ்வாறான சாதாரண கூலித் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. உண்மையில், இந்தப் போக்கு இந்திய அரசமைப்பின் பாகுபாட்டுக்கு எதிரான 15ஆவது கூறு, வாழ்வதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் 21ஆவது கூறு ஆகியவற்றுக்கு எதிரானது.
- யேல் பல்கலைகழகப் பேராசிரியர் ஜேசன் ஸ்டேன்லி, ‘பாசிசம் எவ்வாறு இயங்குகிறது?’ (How Fascism Works: The Politics of Us and Them) எனும் ஆய்வு நூலை எழுதியுள்ளார். அதில், ‘சிறுபான்மையினரால் நமது உரிமை / பொருளாதாரம் / கல்வி / வேலைவாய்ப்பு ஆகியவை பாதிக்கப்படுகின்றன என்று பெரும்பான்மையினரிடையே நடத்தப்படும் பிரச்சாரமும் அதையொட்டிப் பரப்பப்படும் அச்சவுணர்வுமே பாசிசத்தின் அடிப்படை’ என்று அவர் வரையறுக்கிறார்.
- ஆகவே, தமிழ்நாட்டினரின் உரிமைக்காகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, வட இந்தியக் கூலித் தொழிலாளர்களை எதிரிகள் எனச் சமூக ஊடகங்களில் சித்தரித்துச் சிலர் பரப்பும் கருத்துகளைப் பாசிசத்தின் தோற்றுவாய் என்றே கருத வேண்டியிருக்கிறது.
தமிழர்களின் குடியேற்றங்கள்
- திரைகடலோடியவர்கள் தமிழர்கள். இங்கிருந்து புலம்பெயர்ந்தோர் பல்வேறு நாடுகளில், மாநிலங்களில் வாழ்கின்றனர். அமெரிக்கத் துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ், பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இந்திய வம்சாவளியினர். தமிழர்கள் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் உலகம் முழுவதும் உள்ளனர். இந்தியாவின் வருவாயில் வெளிநாட்டில் வசிக்கும் நமது மக்கள் அனுப்பும் பணமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
- இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, உடல் வலியைப் போக்க மாத்திரைகள் எடுத்துக்கொண்டு உழைத்துக்கொண்டிருக்கும் எளிய வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைப் பரப்புவது இனவாத வெறுப்பில்தான் முடியும். தமிழ்நாட்டில் கட்டப்படும் பெரும் கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில்கள், சிறு, குறு நிறுவனங்கள் ஆகிய அனைத்திலும் அவர்களின் உழைப்பு அடங்கியுள்ளது.
அரசு செய்ய வேண்டியவை
- அதே நேரத்தில், மத்திய அரசின் பல்வேறு கொள்கைகளால் தமிழ்நாட்டின் அரசு வேலைகளில், ரயில்வே பணிகளில், வங்கிப் பணிகளில், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் போன்ற பலவற்றிலும் தமிழரல்லாத அதிகாரிகள் பணியமர்த்தப்படுவதை இத்துடன் சேர்த்துக் குழப்பிக்கொள்வது தேவையற்றது.
- தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதாரக் கனவோடு நகர்ந்துகொண்டிருக்கும்போது, இவ்வாறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் இங்கே பெருமளவு வருவதைத் தடுப்பது சரியல்ல. உடலுழைப்பு செய்யும் தொழிலாளர்கள் குறைந்தது, உயர் கல்வியறிவு விகிதம் அதிகரித்தது ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த இடைவெளியை நாம் நிரப்பாவிடில், தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சரிந்து வீழ்ந்துவிடும்.
- எவ்வித முறைப்படுத்துதலும் இல்லாமல் இங்கே உழைக்கும் வட இந்தியத் தொழிலாளர்களுக்கு மாநில அரசு நலவாரியம் அமைக்க வேண்டும். அவர்களின் தொழில் முறையை ஒழுங்குபடுத்தி, வருங்கால வைப்பு நிதி, விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடுகள், பணிப் பாதுகாப்பு முதலியவற்றை உறுதிசெய்ய வேண்டும். அது சமூகநீதி வரலாற்றில் ஒரு மணி மகுடமாக அமையும்!
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 02 – 2023)