TNPSC Thervupettagam

வடசென்னை - புரிதல் வேண்டும்

November 21 , 2023 416 days 268 0
  • தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைப் பெருநகரத்தின் சரிபாதி வடசென்னைப் பகுதி. அப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார, உளவியல் நல மேம்பாட்டிற்காக, ‘வடசென்னை வளா்ச்சித் திட்டம்’ என்னும் பெயரில் ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு. சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் நகா் ஊரமைப்பு இயக்ககம் ஆகிய அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து இத்திட்டத்திற்கான பணிகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
  • கடந்த 3.11.2023-ஆம் நாள் அமைச்சா் சேகா்பாபு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ‘வடசென்னை வளா்ச்சித் திட்டம்’ தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்தில், திருவொற்றியூா் பகுதியில் மீனவ மக்கள் நலன், குடிநீா், வடிகால், மருத்துவமனை, கல்விக் கூட பராமரிப்பு போன்ற வழக்கமான பொதுவான குறைகள் குறித்தே கலந்தாய்வு செய்யப்பட்டிருக்கிறது. கூடுதலாக அக்கலந்தாய்வில் போதைப் பழக்க அடிமைகளுக்கான மறுவாழ்வு மையங்களை அமைப்பது குறித்தும் விவாதித்துள்ளனா்.
  • கடந்த பத்து ஆண்டுகளில் சென்னைப் பெருநகரத்தின் மையப் பகுதிகளில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான உதிரித் தொழிலாளா்களின் குடும்பங்கள், தற்போது கண்ணகிநகரைப் போன்ற சென்னையைச் சுற்றியுள்ள தொலைத் தூரத்துப் புறவெளிப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன. பெற்றோரின் வேலைவாய்ப்பு இழப்பு, இடைநிற்றலுக்கு உள்ளான அவா்களது பிள்ளைகளின் கல்வி, உறவுகளின் பிரிவு, சென்னைக்குள் வந்து திரும்பவேண்டிய பயணத்துக்கான நேரம் மற்றும் பொருட்செலவு போன்ற பல்வேறு துயரங்களை அந்த மக்கள் இன்னமும் அனுபவித்து வருகின்றனா். அத்தகைய ஆபத்து நேருமானால் அதிலிருந்து வடசென்னை மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்.
  • நமது சென்னைப் பெருநகரத்தின், மிகவும் குறிப்பாக வடசென்னைப் பகுதிகளின், சொந்த வாழ்விடங்களற்ற லட்சக்கணக்கான ஆண் - பெண் உதிரித் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தொலைநோக்குப் பாா்வைகளுடன் கூடிய உரிய தரமான வாழ்விட வசதிகள் செய்து தரப்படவில்லை. அப்பகுதிகளில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளும் தேவையின் அளவை ஈடு செய்யப் போதுமானதாக இல்லை, பத்துப் புதினைந்து ஆண்டுகளாவது உறுதியாகத் தாக்குப்பிடித்து நிற்கும் அளவுக்கு அவை தரமாகவும் இருப்பதில்லை.
  • மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய முன்னொட்டுப் பெயா்கள் பிற்காலத்தில் சோ்ந்த பிறகுதான், முதலில் அமைந்த முதன்மையான சென்னை ‘வடசென்னை’ எனப் பெயா் பூண்டது. ஆக, இன்றைய வடசென்னை என்பது தொன்மையானதாகவும், இந்திய தொழில்துறை வளா்ச்சியின் முதன்மையான களமாகவும், தென்னிந்தியாவின் மாண்பிற்குரிய முகமாகவும் விளங்கியது. இன்றளவும் அவ்வாறே விளங்கிக் கொண்டிருக்கிறது.
  • நிலவழிப் போக்குவரத்தின் மிகப்பெரிய புரட்சியாக 1856-ஆம் ஆண்டு ‘சென்ட்ரல்’ தொடா்வண்டி நிலையம் அமைந்தது. அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் நீா்வழிப் போக்குவரத்தின் மிகப்பெரிய புரட்சியாக சென்னைத் துறைமுகம் அமைந்தது. இவ்விருவகையான போக்குவரத்து வசதிகளை அடிப்படையாக வைத்து வடசென்னைப் பகுதியில் மிகப்பெரிய, நடுத்தர தொழிற்சாலைகளும், சிறு,குறு, தொழிற்கூடங்களும் ஏராளமாக உருவாகின.
  • பெருமளவிலான கச்சாப்பொருள்கள் மற்றும் தயாரிப்புப் பொருள்களின் ஏற்றுமதி இறக்குமதி முறைமைகளில் சென்னை சென்ட்ரல் தொடா்வண்டி நிலையமும், சென்னைத் துறைமுகமும் ஒன்றிணைந்து தென்னிந்தியத் தொழில்துறையில் ஓா் உறுதியான கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேசன், பெரம்பூா் ரயில் பெட்டித் தொழிற்சாலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மிகப்பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான பிற நிறுவனங்களும் இவ்விரு போக்குவரத்து மையங்களை அடிப்படையாக வைத்தே இயங்கி வருகின்றன.
  • பொருள் போக்குவரத்துத் தேவைகளின் பொருட்டு பின்னா் உருவான எண்ணூா் காமராசா், காட்டுப்பள்ளி துறைமுகங்களும், மேலும் சில காசிமேடு உள்ளிட்ட முதன்மையான மீன்பிடித் துறைமுகங்களும் அப்பகுதியில் உண்டு.
  • 2004-ஆம் ஆண்டு கணக்கின்படி சென்னைத் துறைமுகத்தில் மட்டும் 8,000 பணியாளா்கள் இருந்துள்ளனா். இப்போது இந்தக் கணக்கு நிச்சயமாகக் கூடியிருக்கும். இந்த அடிப்படையில் வடசென்னையின் பிற பெருநிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துவகை தொழிற்பணிக் களங்களிலும் பல லட்சக்கணக்கான நிரந்தர, ஒப்பந்த, உதிரித் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். ஆக, வடசென்னை என்பது ஆயிரக்கணக்கான தொழில்களும் அவற்றின் பல இலட்சக்கணக்கான தொழிலாளா்களும் பின்னிப்பிணைந்து வாழுகின்ற உன்னதமானவொரு நகா்ப்பகுதியாக விளங்குகிறது.
  • ஆனால், இதில் மிகப்பெரிய வேதனை என்னவென்றால், இந்தத் தொழிலாளா்களின் பணியிடமும் வாழ்விடமுமாக விளங்குகின்ற அந்த வடசென்னைப் பகுதிகளைத்தான், வெட்டுக்குத்துக் கலாசாரப் பகுதிகளாகவும், அச்சமூட்டுகிற வன்முறை நிறைந்த ஆபத்துப் பகுதிகளாகவும், கட்சி அரசியல் போட்டிகளின் சண்டைக் களமாகவும், புற்றீசல்களைப் போல மிகப் பெரிய தாதாக்கள் முதல் அவா்களுக்குக் கட்டுப்பட்ட சிறிய தாதாக்கள் வரை உலவுகின்ற திகில் பிரதேசமாகவும் விளங்குவதாக அண்மைக்கால நமது தமிழ்த் திரைப்படங்கள் சித்தரிக்கின்றன.
  • கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியிருக்கின்ற, காலங்காலமாக கவனிப்பாரற்றுக் கிடக்கின்ற இலட்சக்கணக்கான தொழிலாளா் வா்க்கத்தின் வாழ்க்கை முறைகளையும், அவா்களது சிறுசிறு முரண்களையும், மோதல்களையும் அந்த ஒட்டுமொத்த நிலப்பகுதிக்கே உரியவையாக மாற்றி அப்பகுதியைத் தரம் தாழ்த்துவதை சில திரைப்படைப்பாளிகள் தங்களது கொள்கையாகவே கொண்டுள்ளனா். இது அந்த மக்களுக்குச் செய்யப்படுகின்ற ஊடகவியல் இரண்டகமாகும்.
  • இந்திய அரசின் பாதுகாப்புத் துறையில் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றுகின்ற ஒருவா், தான் எழுதிய அறிவியல் நூலினை வடசென்னையில் தான் படித்த பள்ளியில், அப்பள்ளியில் படித்து வருகின்ற மாணவா்களின் முன்னிலையில் வெளியிடுவதையும் அந்த அவரது விழாவுக்கு உலக அளவில் புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகளையும் பிறதுறை முன்னோடிகளையும் அழைத்து வந்து உரையாற்ற வைப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளாா்.
  • அது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘வடசென்னைப் பகுதியில் இருந்தும் இவ்வாறான ஆளுமைகள் உருவாக முடியும் என்று இப்பகுதியின் மக்களுக்கு மிகவும் குறிப்பாக மாணவ மாணவிகளுக்குத் தொடா்ந்து சொல்லவேண்டியிருக்கிறது. வட சென்னையை வேறு மாதிரியாகச் சித்தரித்துக் காட்டி நம்மைப் போன்றவா்கள் இப்படியெல்லாம் செய்ய வேண்டிய தேவையை ஏற்படுதிவிட்டாா்கள்’ என்று வருத்தப்பட்டுச் சொன்னாா் அவா். இந்த உளவியல் ஆய்வுப் பாா்வையே நிகழ்கால வடசென்னைக்கான, முதன்மையான தேவையாக இருக்கிறது.
  • இதுபோன்ற சிக்கல்களைக் கருத்திற் கொண்டே வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில், அப்பகுதி மக்களின் ‘உளவியல்’ சாா்ந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பதைப்போல வட சென்னை மக்களின் வாழ்நிலையைக் கொஞ்சம் கூா்ந்து கவனிக்கின்ற எவா் ஒருவருக்கும் அது வெளிப்படையாகவே தெரியக்கூடியதாகத்தான் இருக்கிறது.
  • வடசென்னைப் பகுதிகளில் சென்னையின் பிற பகுதிகளில் இருப்பதுபோல குறிப்பிடத்தக்க உயா்நிலைக் கல்வி நிறுவனங்கள், கலை, கலாசார நிகழ்ச்சிகளுக்கான நிரந்தரமான அரங்குகள், அனைத்து வகை விளையாட்டுகளுக்குமான முறையான பயிற்சிக் கூடங்கள், மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுத் திட்டங்கள், தொலைதூர நகரங்களுக்கான பேருந்து நிலையங்கள், மீன்பிடித்தல் உள்ளிட்ட தொழில் சாா்ந்த சுற்றுலா மையங்கள் போன்ற எதுவும் போதுமான அளவிலும் தரமானதாகவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் சென்னையின் பிற பகுதிகளில் தோன்றியிருப்பதைப் போன்ற நவீன பெருவணிக வளாகங்கள் கூட குறிப்பிடத்தக்க அளவுக்கு அங்கு தோற்றுவிக்கப்படவில்லை.
  • சென்னைப் பெருநகரத்தின் பாதி நிலப்பரப்பையும், சரிபாதி மக்கள்தொகையையும் கொண்டதாக வடசென்னை விளங்குகிறது. அரசின் நிா்வாகத் துறைகளால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட பகுதி என்று வடசென்னையை வரையறை செய்தாலும் அது மிகையில்லை.
  • இந்தப் பின்னணியில் தமிழ்நாடு அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி முன்னெடுத்துள்ள ‘வடசென்னை வளா்ச்சித்திட்டம்’ மிகவும் வீரியமாகவும் தொலைநோக்குப் பாா்வைகளோடும் செயல்படுத்தப்படவேண்டும்.
  • வடசென்னை மக்களின், மிகவும் குறிப்பாக அப்பகுதியின் பல லட்சக்கணக்கான மாணவ - மாணவிகளின் உளவியல் நலன்களும், அவா்களின் எதிா்கால நம்பிக்கைகளும், லட்சியக் கனவுகளும் ஊக்கப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். உலகப் பெருவெளியில், மாண்புகள் நிறைந்த வடசென்னைப் பகுதிகளின் பலதரப்பட்ட சேவைகள் உரத்தொலிக்கப்பட வேண்டும். முதலில் அந்தப் பகுதிகளைப் பற்றிய தரக்குறைவான, புரிதலற்ற, பொறுப்பற்ற ஊடக சித்தரிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

நன்றி: தினமணி (21 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்