TNPSC Thervupettagam

வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி ஏன் குறைக்கவில்லை?

December 16 , 2024 10 days 33 0

வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி ஏன் குறைக்கவில்லை?

  • ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இதில் பொருளாதார நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துவதுடன், அதற்கேற்ப வட்டி விகிதத்தை மாற்றுவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அந்த வகையில், கடந்த 6-ம் தேதி நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு ரெப்போ (வட்டி) விகிதம் 6.5 % ஆகவே தொடரும் என ஆளுநர் (சக்தி காந்த தாஸ்) அறிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து 6.5% ஆக தொடர்கிறது.
  • கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு மாநாட்டில் பங்கேற்ற மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பேசும்போது, “உணவுப் பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ரெப்போ விகிதத்தை நிர்ணயிக்கக் கூடாது. நடப்பு நிதியாண்டின் (2024-25) முதல் காலாண்டில் 6.7% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி, இரண்டாவது காலாண்டில் 5.4% ஆக வீழ்ச்சியடைந்ததற்கு உயர் ரெப்போதான் (6.5%) காரணம். மேலும் உயர் ரெப்போதான் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) இரண்டு முக்கிய கூறுகளான தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
  • மற்றொரு மாநாட்டில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அதிக கடன் விகிதங்கள் கடன் வாங்குபவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது” என கூறியிருந்தார். இந்த முக்கியமான இரண்டு கருத்துகளை 2 அமைச்சர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தியதால், இந்த முறை ரெப்போ விகிதம் நிச்சயம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  • இது சரியான முடிவுதானா என்பதைப் பார்ப்போம். கடந்த 2016-ல் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கூட்டாக ஒப்புக்கொண்ட பணவீக்க இலக்கு விகிதம் 4%. அதேநேரம் (ஆறுதல் விளிம்புடன் (+2%) 6 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது அனைத்து நுகர்வோர் பொருட்களின் சில்லறை விலைகளில் ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. நுகர்வோர் கூடையில் உள்ள பொருட்களில் உணவின் பங்கு மட்டும் 46% ஆகும்.

பணவீக்கம் உயர்வு:

  • இந்நிலையில், கடந்த ஆகஸ்டில் 3.65% ஆக இருந்த பணவீக்கம், செப்டம்பரில் 5.49% ஆகவும், அக்டோபரில் 6.21% ஆகவும் தொடர்ந்து அதிகரித்தது. இதில் உணவுப் பொருள் விலை கடுமையாக அதிகரித்ததே (10.87%) இதற்குக் காரணம். பணவீக்கம் அதிகபட்ச அளவான 6 சதவீதத்தைத் தாண்டியதால் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கவில்லை. மேலும் நடப்பு முழு நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை 7.2% என்ற முந்தைய கணிப்பில் இருந்து 6.6% ஆக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

சிஆர்ஆர் 0.5 சதவீதம் குறைப்பு:

  • பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் கவனம் செலுத்தும் ரிசர்வ் வங்கி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. ஒன்று வங்கிகளில் ரொக்க இருப்பு விகிதம் (CRR) 4.5% லிருந்து 4.0 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகளில் ரூ.1.16 லட்சம் கோடி கூடுதல் பணப்புழக்கம் ஏற்படும். இதைக் கொண்டு, நுகர்வோர் செலவு மற்றும் முதலீடு ஆகியவற்றுக்கு மேலும் கடன்களை வழங்க முடியும்.
  • இரண்டாவதாக, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான வங்கிக் கடன் உச்சவரம்பு ரூ.1.6 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சம் ஆக உயர்த்தப்பட்டது. ரெப்போவைக் குறைக்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்த 2 நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.

ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்கும்:

  • ரூபாயின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் ரிசர்வ் வங்கியின் பங்கு முக்கியமானது. ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பதன் மூலம், இந்திய ரிசர்வ் வங்கி நிதிச்சந்தைகளுக்கு இந்தியாவின் உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளது.
  • இது உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் தக்கவைக்க இன்றியமையாதது. இது அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சியை குறைக்கும். ரூபாயின் மதிப்பு சரிவைத் தடுக்கும். எனவே, ரிசர்வ் வங்கியின் முடிவு சரியானதுதான்.

புதிய ஆளுநர்:

  • ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் மல்ஹோத்ரா, “நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்வதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ளது” என கூறியுள்ளார்.
  • இந்நிலையில், அக்டோபரில் 6.21% ஆக இருந்த பணவீக்கம் நவம்பரில் 5.48% ஆக குறைந்துள்ளது. இது மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. இதுபோல 3-வது ஜிடிபி அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி நம்புகிறது. இதன் காரணமாக, அடுத்த நாணயக் கொள்கை கூட்டத்தில் (பிப்ரவரி) ரெப்போ விகிதக் குறைப்பு குறித்த அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்