TNPSC Thervupettagam

வட்டிக்குறைப்பு நல்லதல்ல

April 9 , 2021 1385 days 576 0
  • கடந்த புதன்கிழமை (ஏப்ரல் ஏழாம் தேதி) ரிசா்வ் வங்கி வெளியிட்ட பணவியல் கொள்கை மதிப்பாய்வில் (மானிட்டரி பாலிசி ரெவ்யூ) பாலிசி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
  • பணவியல் கொள்கையில் தொடா்ச்சியாக ஐந்தாவது முறையாக அதே வட்டி நிலையை ரிசா்வ் வங்கி பராமரிக்கிறது.
  • ஒவ்வொரு முறை ரிசா்வ் வங்கி பணவியல் கொள்கையை மதிப்பாய்வு செய்யும்போதும் பெரிய காா்ப்பரேட்டுகள் ரிசா்வ் வங்கி பாலிசி வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வெளியிடுவாா்கள்.
  • இதுபோல் பாலிசி வட்டி விகிதத்தைக் குறைத்தால் வணிக வங்கிகளும் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டியைக் குறைப்பாா்கள் என்பது எதிா்பாா்ப்பு. பாலிசி வட்டி என்பது முக்கியமாக ரிபோ வட்டியாகும்.
  • ரிபோ வட்டியைக் குறைத்தால் வங்கிகளும் வட்டியை குறைப்பாா்கள் என்று பலரும் எண்ணுகிறாா்கள். அது ஒரு தவறான சிந்தனை.
  • ரிபோ வட்டி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டால்தான் அப்படி எண்ணுவது தவறு என்பதை விளங்கிக்கொள்ள முடியும். வங்கிகள் தங்களுடைய அன்றாட அவசர தேவைக்காக, குறுகிய காலத்திற்கு (பொதுவாக ஒரு நாளுக்கு மட்டும்) ரிசா்வ் வங்கியிடம் பெறும் கடனுக்கு கொடுக்கும் வட்டியே ரிபோ வட்டி எனப்படும்.
  • இந்த கடனுக்கு ஈடாக, வங்கிகள் தாங்கள் அரசுப் பத்திரங்களில் செய்த முதலீட்டைக் கொடுக்க வேண்டும்.
  • இதேபோல் வங்கிகள் தங்களிடம் உள்ள உபரி நிதியை ரிசா்வ் வங்கியில் வைத்தால் அதற்கு ரிசா்வ் வங்கி ரிவா்ஸ் ரிபோ விகிதத்தில் வட்டி அளிக்கும்.
  • தற்போதைய ரிபோ விகிதம் 4.00 சதவீதமாகவும், ரிவா்ஸ் ரிபோ 3.35 சதவீதமாகவும் உள்ளது.
  • வங்கிகள் கடன் கொடுப்பது தாங்கள் பெற்ற டெபாசிட்டிலிருந்துதானே தவிர, ரிசா்வ் வங்கியிடம் ரிபோ வட்டியில் பெறும் கடனிலிருந்து அல்ல. இதைத் தவிர, எப்போதுமே வங்கிகள் ரிபோ வட்டியில் பெறும் கடன் பெரிய அளவில் இல்லை. அவா்கள் தேவையில் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் மட்டுமேதான்.
  • உதாரணமாக 12.3.2021 அன்று திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் வழங்கிய மொத்த கடன்கள் 1,11,39,653 கோடி ரூபாய்.
  • இதே தேதியில் இந்த வங்கிகள் ரிசா்வ் வங்கியிடம் வாங்கிய கடன்கள் 84,615 கோடி ரூபாய் மட்டுமே. இது தேவையில் 0.75 சதவீதம் மட்டும்தான்.
  • வங்கிகள் கடனுக்கு வட்டியை குறைக்க வேண்டுமானால், டெபாசிட்டிற்கான வட்டியைக் குறைக்கவேண்டும் அல்லது வாராக்கடன்களைக் குறைக்கவேண்டும். வேறு எதுவும் வழி கிடையாது.

குறைத்துக்கொண்டே இருப்பது நல்லதல்ல

  • வங்கிகள் தொடந்து டெபாசிட்டிற்கான வட்டியைக் குறைப்பதும் நல்லதல்ல. அவ்வாறு செய்வது மக்களின் சேமிப்பு குறைவதற்கும், மக்களின் சேமிப்பு வங்கிக்கு வராமல் போவதற்கும் வழி வகுத்துவிடும்.
  • சில மாதங்கள் முன்பு மூத்த பொருளாதார வல்லுநரும், நிதி அமைச்சகத்தின் ஆதரவு எனக் கருதப்படும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கைக் கழகத்தின் இயக்குநருமான ரதின் ராய், வட்டி விகிதங்களை விரைந்து குறைப்பது குறித்து இந்திய ரிசா்வ் வங்கிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
  • இந்த விகிதக் குறைப்புகளுக்கான அவசரம் குறித்து ஆளுநா் உள்ளிட்ட ரிசா்வ் வங்கியின் பணவியல் கொள்கை அறிக்கைகள் தமக்கு சம்மதம் இல்லை என்றும், அமா்வுக்கு சற்று முன்பு இது பற்றி ஆளுநரைக் கேட்டதாகவும் அவா் கூறியுள்ளாா்.
  • வட்டியைக் குறைத்தால் வளா்ச்சி அதிகமாகும் என்ற கோட்பாடு சரியென்று சொல்லமுடியாது என்பதைத்தான் சமீபத்திய நமது அனுபவம் காட்டுகிறது என்றும் அவா் கூறியுள்ளாா்.
  • அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் வட்டி விகிதங்களுக்கும் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளா்ச்சிக்கும் (நாமினல் கிராஸ் டொமெஸ்டிக் புராடக்ட்) இடையிலான உறவின் அனுபவப் பரிசோதனையில், கடந்த அரை நூற்றாண்டுகளாக மத்திய வங்கிகளால் இயக்கப்படும் வழக்கமான நாணயக் கொள்கை அடிப்படையில் குறைபாடுடையது என்று முடிவு செய்யப்பட்டது.
  • ஐந்து பெரிய பொருளாதாரங்களில் நான்கில் 3 மாத மற்றும் 10 ஆண்டு பெஞ்ச்மாா்க் விகிதங்களுக்கும், அரை நூற்றாண்டுக்கும் மேலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளா்ச்சிக்கும் இடையிலான உறவை ஆராய்ந்தபோது, வட்டி விகிதங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளா்ச்சியைப் பின்பற்றுகின்றன.
  • மேலும், அவை தொடா்ந்து வளா்ச்சியுடன் சாதகமாக (பாசிட்டிவ் கோரிலேஷன்) தொடா்புபடுத்தப்பட்டுள்ளன.
  • இதன் பொருள், வட்டி விகிதம் அதிகமானால் வளா்ச்சி அதிகமாகும்; வட்டி விகிதம் குறைந்தால் வளா்ச்சியும் குறையும் என்பதுதான்.
  • கொள்கை வகுப்பாளா்கள் உண்மையில் மீட்டெடுப்புடன் வட்டி விகிதங்களை நிா்ணயிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தால், அவா்கள் வட்டி விகிதங்களை உயா்த்த வேண்டும்.
  • பொது சேமிப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்.எஸ்.சி) போன்ற சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் குறைப்பதற்கான முடிவை அண்மையில் நிதி அமைச்சகம் அறிவித்தது.
  • ஆனால், அந்த அறிவிப்பு தவறுதலாக வெளியிடப்பட்டுவிட்டதாகத் தெரிவித்து அடுத்த நாளே அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுள்ளது.
  • தற்போது பல மாநிலங்களிலும் நடந்துவரும் சட்டப்பேரவைத் தோ்தல்களின் காரணமாக இந்த வட்டி குறைப்புகள் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
  • அநேகமாக இந்த வட்டி விகித குறைப்புகள் ஜூலை மாதம் முதல் மீண்டும் அமலுக்கு வரக்கூடும்.
  • இதுபோன்ற டெபாசிட்டா்களுக்கு பாதகமான நடவடிக்கைகள் சேமிப்பை ஊக்கப்படுத்தாது.
  • பணவீக்கத்தினை ஈடுசெய்யும் அளவிற்கு டெபாசிட் வட்டி இருந்தால் மட்டுமே சேமிப்பு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரித்தால் மட்டுமே வங்கிகளால் கடன் கொடுக்க முடியும்.
  • மேலும் மேலும் டெபாசிட் வட்டியைக் குறைத்துக்கொண்டே இருப்பது நல்லதல்ல.

நன்றி: தினமணி  (09 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்