- கரோனா தொடர்பில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்ட ஓர் அறிக்கை நம் விசேஷ கவனத்தைக் கோருகிறது.
- பிளாஸ்மா சிகிச்சை தொடர்பில் பேசியுள்ள அவர், ‘கரோனா நோயாளிகளுக்கு ஆய்வு நோக்கில் மட்டுமே பிளாஸ்மா வழங்கப்பட வேண்டும். கரோனா சிகிச்சைக்கான மருந்தாக அனைவருக்கும் இதை வழங்கக் கூடாது’ என்று அந்த அறிக்கையில் மருத்துவர்களை எச்சரித்திருக்கிறார்.
- ஒரு பெரிய ஆபத்பாந்தவன்போல பிளாஸ்மா சிகிச்சை பார்க்கப்பட்டது பலருக்கும் நினைவிருக்கலாம்.
- ஏப்ரலில் கரோனா தொற்றுக்குச் சரியான மருந்து எதுவும் இல்லாத நிலையில், ‘ஆபத்து மிகுந்த கரோனா நோயாளிகளுக்கு அவசரச் சிகிச்சையாக ஆய்வுரீதியில் பிளாஸ்மா வழங்கப்படலாம்’ என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனம் அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து, இந்தியாவிலும் குறிப்பிட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு இந்த சிகிச்சையை அளிப்பதற்கு 21 மருத்துவ நிறுவனங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மே மாதம் அனுமதி கொடுத்தது.
- அதையொட்டி, கரோனா தொற்றிலிருந்து மீண்டவரிடமிருந்து பிளாஸ்மாவைப் பெறுவதற்கும், ‘பிளாஸ்மா வங்கி’களைத் தொடங்குவதற்கும் அரசுகளும் ஆராய்ச்சி நிறுவனங்களும் முன்வந்தன.
- ஆரம்பத்தில், இந்த சிகிச்சையில் பலரும் குணமடைந்ததாகத் தகவல்களும் வந்தன. புது டெல்லியில் கரோனாவால் கடுமையான மூச்சுத்திணறலில் பாதிக்கப்பட்டிருந்த சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெய்ன் பிளாஸ்மா சிகிச்சையில் குணமானதாக அறிவித்தார்.
- இப்போதும் கேரளம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கு முன்னுரிமை கொடுத்துவருகின்றன. இந்தச் சூழலில் ஒன்றிய அமைச்சரின் மருத்துவ எச்சரிக்கை ஒரு சமூக முக்கியத்துவமும் பெறுகிறது. எப்படி?
பிளாஸ்மா சிகிச்சை
- கரோனா நோயாளிகள் உடல்நிலை தேறிவரும்போது அவர்கள் ரத்த பிளாஸ்மாவில் கரோனாவுக்கு எதிரான அணுக்கள் (ஆன்டிபாடீஸ்) புதிதாக உருவாகியிருக்கும். அவற்றுக்கு கரோனா கிருமிகளைக் கட்டுப்படுத்தும் திறன் இருக்கும்.
- அவர்கள் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து, புதிய கரோனா தொற்றாளர்களுக்குச் செலுத்தினால், இவர்கள் உடலில் தடுப்பாற்றல் மண்டலம் கூடுதல் பலம் பெற்று, கரோனாவைக் கட்டுப்படுத்தும்.
- ‘தேற்றாளர் ரத்தநீர் சிகிச்சை’ (Convalescent Plasma Therapy) எனும் மருத்துவ மொழி கொண்ட இந்தச் சிகிச்சை கரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ‘சார்ஸ்’, ‘மெர்ஸ்’ வைரஸ் நோய்கள் பெருந்தொற்றாகப் பரவியபோதும் மேற்கொள்ளப்பட்டது.
- அப்போது அந்த நோயாளிகளின் இறப்பு விகிதத்தை அது குறைத்தது. ஆனாலும், கரோனா சிகிச்சைக்கான மருந்தாக அது அங்கீகரிக்கப்படவில்லை.
- காரணம், பிளாஸ்மா செலுத்தப்பட்டவர்களுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளும் ஸ்டீராய்டுகளும் கொடுக்கப்பட்டதால், எந்த மருந்தில் நோய் குணமானது என்பதைத் தெளிவுபடுத்த இயலவில்லை. பிளாஸ்மா சிகிச்சையின் பலன் குறித்து முழுமையாக அறிய இன்னும் அதிக எண்ணிக்கையில் ஆய்வுகள் தேவைப்பட்டன.
- ஆகவே, இந்த கரோனா காலத்தில் இந்தியாவிலும் அமெரிக்கா, சீனா, கியூபா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் பிளாஸ்மாவை ஆய்வு அடிப்படையில் வழங்கத் தொடங்கினர்.
- கரோனா தேற்றாளர்களிடமிருந்து பிளாஸ்மாவைப் பெறுவதிலும் பல வழிமுறைகள் உண்டு. அவர்கள் 18 - 60 வயதுக்குள் இருக்க வேண்டும். வேறு துணைநோய்களோ தொற்றுகளோ இருக்கக் கூடாது. நோய் அறிகுறிகள் மறைந்து 3 வாரங்கள் முடிந்ததும் பிளாஸ்மாவைப் பெற வேண்டும். உடனே அதைப் பயன்படுத்திவிட வேண்டும். பெறப்பட்ட பிளாஸ்மாவில் போதுமான ஐஜிஜி எதிரணுக்கள் இருக்க வேண்டும். மிதமான கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கும்போது இது வழங்கப்பட வேண்டும். இத்தனை நெறிமுறைகளுக்கு உட்பட்ட ‘பிளாஸ்மா தானம்’ பலன் தரலாம் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.
- அதேநேரத்தில், கரோனா நோயாளிகளை பிளாஸ்மா மட்டுமே வழங்கப்பட்டவர்கள், மற்ற மருந்துகள் வழங்கப்பட்டவர்கள் என இரு பிரிவினர்களாகப் பிரித்துத் தேர்வாய்வு செய்யப்படும்போதுதான் உண்மை நிலவரம் தெரியும் என்ற கருத்தையும் முன்வைத்தனர்.
தெளிவு கொடுத்த ஆராய்ச்சிகள்
- மேற்படி யோசனையில் புது டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை சமீபத்தில் புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. அதில் 15 கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா மட்டுமே வழங்கப்பட்டது.
- அடுத்த 15 நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்தும் வைரஸ் எதிர்ப்பு மருந்தும் வழங்கப்பட்டன. இந்த இரு பிரிவினரின் இறப்பு விகிதம், நோய் அறிகுறிகள் குறையத் தொடங்கிய காலம், ரத்தத்தில் கரோனா வைரஸ் மறைந்த அளவு, புதிதாக உருவான ஐஜிஜி எதிரணுக்களின் அளவு, மருத்துவமனையிலிருந்து தேற்றாளர் விடுவிக்கப்பட்ட காலம் எனப் பலதரப்பட்ட ஆய்வுக்கூறுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில், எதிலும் பிளாஸ்மா பிரிவினருக்கு அதிக பலன் கிடைத்துள்ளது என்பதற்குப் போதிய ஆதாரமில்லை; குறிப்பாக, இறப்பு விகிதத்தை பிளாஸ்மா குறைக்கவில்லை என அறிவித்திருக்கிறார், எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்திப் குலேரியா.
- இதேபோல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தனித்தனியாகப் பல்வேறு மருத்துவமனைகளில் மொத்தம் 450 பேரிடம் ஆய்வுசெய்தபோதும் இந்த முடிவுதான் கிடைத்தது.
- எனவே, ‘நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு பிளாஸ்மா ஒரு ‘மாய மருந்து’ இல்லை’ என்று அக்கழகம் அறிவித்தது.
- எப்படி முன்பு ‘சார்ஸ்’, ‘மெர்ஸ்’ நோயாளிகளுக்குப் பயன்பட்ட பிளாஸ்மா ‘எபோலா’ நோயாளிகளுக்கு அவ்வளவாகப் பயன்படவில்லையோ, அதேபோன்று இப்போது கரோனா நோயாளிகளுக்கும் பயன்படவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது.
- அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனமும் இதே கருத்தை முன்வைத்துள்ளது. இவ்வாறு, பிளாஸ்மாவின் பலன் உறுதிப்படாமல் ஆய்வு அடிப்படையிலான மருந்தாகக் கருதப்படும் நிலையில், வட மாநிலங்களில் கரோனா நோயாளிகளைக் குறிவைத்து, பணம் பண்ணும் முயற்சியில் சில தனியார் மருத்துவ நிறுவனங்கள் இறங்கியுள்ளதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன.
- சமூக வலைதளங்களில் ‘பிளாஸ்மா தேவை’ எனும் அறிவிப்புகளும், செய்தி ஊடகங்களில் ‘பிளாஸ்மா செலுத்தி கரோனாவைக் குணப்படுத்தினோம்’ எனும் விளம்பரங்களும் இடம்பெறத் தொடங்கின. நோயாளியின் உறவினர்களிடம் பிளாஸ்மா சிகிச்சைக்கு நெருக்கடி கொடுத்த விவரங்கள் தெரியவந்தன.
- ஆரம்பகட்ட விசாரணையில் அரசின் அங்கீகாரம் பெறாத அந்த நிறுவனங்கள் பிளாஸ்மாவைப் பெறுவதற்கும் வழங்குவதற்கும் முறையான நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதை அறிந்த ஒன்றிய சுகாதாரத் துறை அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
- அதன் நீட்சிதான் ஒன்றிய அமைச்சரின் எச்சரிக்கை. எப்போது மக்களின் விழிப்புணர்வும் அரசுகளின் முறையான நடவடிக்கைகளும் கைகோக்கிறதோ அப்போது மருத்துவம் வணிகமாவதைத் தடுக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு இது.
நன்றி: தி இந்து (22-10-2020)