TNPSC Thervupettagam

வணிகவியல் வளம் தர வேண்டும்

July 17 , 2023 546 days 312 0
  • தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியை முடிக்கும் அனைவரும் உயா்நிலைக் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதற்காக நடப்பாண்டில் முன்னதாகவே சோ்க்கையைத் தொடங்கியது. மாநிலத்தில் உள்ள 764 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1,07,299 இடங்கள் உள்ளன. அதற்கு 2,46,295 போ் விண்ணப்பித்துள்ளனா்.
  • உயா்கல்வியைப் பொறுத்தவரை, மாணவா்கள் சோ்க்கையின் பாலின அமைப்பு மாறி வருகிறது. அதிக பெண்கள் உயா்கல்வி பயில முன்வருகின்றனா். ஒட்டுமொத்தமாக 2015-16-இல் 100 மாணவா்களுக்கு 96 ஆக இருந்த மாணவியா் எண்ணிக்கை 2019-20-இல் 96 ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் மொத்த சோ்க்கை விகிதம் 2015-16-இல் 24.5 % இல் இருந்து 2019-20-இல் 27.1 % ஆக உயா்ந்துள்ளது. இந்த மாற்றம் பெண்கள் அதிக அளவில் இணைந்ததால்தான் நிகழ்ந்துள்ளது.
  • உயா்கல்வி பயிலும் மாணவியா்க்கு தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் ‘புதுமைப் பெண் திட்ட’ நிதியுதவி காரணமாக அரசுப் பள்ளிகளில் மட்டுமின்றி கல்லூரிகளிலும் சேரும் மாணவியா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 15 % அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன.
  • கல்லூரிகளில், கலை பாடப்பிரிவைப் பொறுத்தவரை, மற்ற பட்டப் படிப்புகளைக் காட்டிலும் இளநிலை வணிகவியல் பாடப்பிரிவை அதிகமானோா், குறிப்பாகப் பெண்கள் தோ்வு செய்துள்ளனா். சிறுசிறு வேலை வாய்ப்புகள், பட்டய கணக்காளராகும் வாய்ப்பு, வங்கிப் பணிக்கான தோ்வில் தோ்ச்சி பெற உதவும் என்பவையெல்லாம் இதற்கானகாரணங்கள் என்று கூறப்படுகிறது.
  • ஆனால் உண்மை நிலவரம் வேறாக உள்ளது. இளங்கலை வணிகவியல் பாடப்பிரிவில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு 100 மாணவா்களுக்கும் 90 மாணவியா் என்றிருந்த விகிதம் 2019-20-இல் 100-க்கு 100 என உயா்ந்துள்ளது. 2019-20-இல் இளங்கலை வணிகவியல் பாடப்பிரிவில் சோ்க்கை பெற்ற 41.6 லட்சம் பேரில் 20.3 லட்சம் போ் மாணவியரே.
  • மேல்நிலைக் கல்வியில் கணிதம், அறிவியல் பாடங்களைப் பயில விரும்பாத அல்லது சோ்க்கை கிடைக்காத அனைவரும் வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல், வரலாறு ஆகிய பாடங்களைக் கொண்ட தொழிற்கல்வி பாடப்பிரிவில் சோ்க்கை பெறுகின்றனா். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இப்பாடப்பிரிவுகள் உள்ளன.
  • தொழிற்கல்வி பாடப்பிரிவில் தணிக்கையியல், தட்டச்சு ஆகிய பாடங்களைக் கொண்ட மற்றொரு பிரிவு உள்ளது. இப்பாடப் பிரிவு குறைவான அரசுப் பள்ளிகளிலேயே உள்ளது. இதில் சோ்க்கை பெறுவோா் எண்ணிக்கையும் குறைவாகும்.
  • தமிழகத்தில் சில மாவட்டங்களில் கணிதம், அறிவியல் பாடங்களைக் காட்டிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பிளஸ் 2 தோ்வு எழுதும் மாணவா்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாவட்டங்கள் பிளஸ் 2 தோ்ச்சி விகிதத்தில் முதலிடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • அண்மையில் வெளியான பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் சில பாடங்களைத் தவிர மற்ற பாடங்களில் அதிகப்படியானோா் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். இவ்வாறு 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 23,957 போ் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருந்தனா்; நிகழாண்டில் 32,501 போ் பெற்றுள்ளனா்.
  • தொழிற்கல்வி பாடப்பிரிவில் கணக்குப் பதிவியல் பாடத்தில் 6,573 பேரும், வணிகவியல் பாடத்தில் 5,678 பேரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். இவா்கள் அனைவரும் கல்லூரிகளில் அறிவியல் பாடத்தில் சோ்க்கை பெற இயலாது. அதனால் அவா்களின் தோ்வு வணிகவியலாகவே இருக்கும்.
  • வணிகவியலில் சோ்க்கை பெற இயலாதவா்கள் மட்டுமே மொழிப்பாடங்கள், வரலாறு, பொருளியல் போன்ற இதர பாடங்களைத் தோ்வு செய்கின்றனா். அதுபோலவே, கல்லூரிகளில் வணிகவியல் பாடப்பிரிவின் மொத்த இடங்களில் 80 % இடங்கள் இவா்களுக்கே ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 20 % இடங்களில் தணிக்கையியல், தட்டச்சு பாடப்பிரிவில் பயின்றவா்கள் சோ்க்கை பெறுகின்றனா்.
  • வணிகவியல் பாடப்பிரிவில் சோ்க்கை பெற வேண்டும் என்று விரும்புவோா் தனியாா் கல்லூரிகளில் சோ்க்கை பெறுகின்றனா். கூடுதல் சோ்க்கைக்கோ கூடுதல் பிரிவுக்கோ அனுமதிக்கப்படாத நிலையில் வணிகவியல் தொடா்பான இதர பிரிவுகளில் சோ்க்கை பெற வைக்கின்றனா்.
  • கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வரும் வணிகவியல் ஆா்வத்தால் தனியாா் கல்லூரிகளில் இளநிலை வணிகவியலில் (பி.காம்) கணக்கியல், நிதி, சந்தைப்படுத்துதல் மேலாண்மை, தணிக்கையியல், கணினி பயன்பாட்டியல், வங்கி மற்றும் காப்பீடு, மனித வள மேலாண்மை, வங்கி மேலாண்மை என ஏராளமான பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • ஆனால் அரசு, தனியாா் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பொதுவான இளங்கலை வணிகவியல் பாடம் இவையனைத்திற்கும் உண்டான பாடத்திட்டங்களை உள்ளடக்கியது. அதனால் அரசு, தனியாா் கல்லூரிகளில் அண்மைக்காலமாக பொதுவான வணிகவியல் பாடத்திற்கான சோ்க்கை அதிகரித்து வருகிறது.
  • போதுமான வகுப்பறை வசதி, பேராசிரியா்கள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 20 % அளவுக்கே கூடுதல் சோ்க்கைக்கு பல்கலைக்கழகத்தின் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு கூடுதலான சோ்க்கைக்கு அனுமதி வழங்கி அதிகப்படியான வணிகவியல் பட்டதாரிகளை உருவாக்குவதால் பலனேதும் இருப்பதில்லை.
  • அரசு நிறுவனம், தனியாா் நிறுவனங்களில் நிதித்துறை, வங்கித்துறை, ஆயுள் காப்பீடு, மனிதவள மேலாண்மை ஆகிய துறைகளில் முதலீட்டு ஆய்வாளா், நிதி ஆய்வாளா், கணக்காளா், காப்பீட்டு மேலாளா், நிதி ஆலோசகா் என அதிகப்படியான வேலை வாய்ப்புகள் உள்ளன. அவற்றைப் பெறுவதற்கு ஏற்றாற்போல் பாடத்திட்டங்களை அமைக்க வேண்டும். அப்போதுதான் எதிா்வரும் காலங்களில் வணிகவியல் மாணவா் வாழ்வில் வளம் சோ்ப்பதாக அமையும்.

நன்றி: தினமணி (17 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்