TNPSC Thervupettagam

வண்டியை நிறுத்திய முழக்கம்

June 2 , 2024 29 days 64 0
  • உரிமைக்கான போராட்டங்களில் விடுபடல்கள் எல்லாக் காலத்திலும் உண்டு. ‘இவர்களுக்கு மட்டும்’ அல்லது ‘இவர்களுக்கு முதலில்’ என்பது போன்ற ஒப்பந்தங்களுடனோ கோரிக்கைகளுடனோ சில உரிமைப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்ணான சோஜர்னர் ட்ரூத், இந்த விடுபடல்களைத்தான் கண்டித்தார். பெண்ணுரிமைக்கான போராட்டங்களில் அவர் பங்கெடுத்தபோது அமெரிக்க வெள்ளை இனப் பெண்களுக்கு இருக்கிற உரிமைகள் ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்களுக்கும் வேண்டும் என வாதிட்டார்.
  • ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கான வாக்குரிமைப் போராட்டத்திலும் இதேபோன்றதொரு விடுபடலை சோஜர்னர் சந்திக்க நேர்ந்தது. அடிமைமுறை ஒழிப்புக்காகவும் ஆப்ரிக்க அமெரிக்க மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிய ஃபிரடெரிக் டக்ளஸின் போராட்டங்களில் சோஜர்னர் பங்கேற்றார். ஆப்ரிக்க அமெரிக்கர்களில் ஆண்களுக்கு முதலில் வாக்குரிமை கிடைக்கட்டும், பிறகு பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடலாம் என்கிற டக்ளஸின் நிலைப்பாட்டில் சோஜர்னருக்கு உடன் பாடில்லை. பாலினப் பாகுபாடின்றி ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே நேரத்தில் வாக்குரிமை கிடைக்க வேண்டும் என்றார். தன் கருத்து களுக்காக டக்ளஸுடன் முரண்பட வேண்டியிருந்தபோதும் இறுதிவரை தன் கொள்கையில் உறுதியாக இருந்தார். சக போராளிகளோடு கருத்து மோதலில் ஈடுபட்டால் தான் தனித்துவிடப்படுவோம் என்று தெரிந்தபோதும் உரிமை களுக்காகத் தான் வகுத்துக்கொண்ட நிலைப்பாட்டிலிருந்து சோஜர்னர் விலகவே இல்லை.

வாழ்க்கையே வரலாறு

  • முறைப்படி படிக்கவும் எழுதவும் தெரியாத சோஜர்னருக்கு, அவர் சார்ந்திருந்த அமைப்புகளில் ஒன்றின் மூலமாக ஆலிவ் கில்பர்ட்டின் அறிமுகம் கிடைத்தது. தான் கடந்துவந்த பாதையை ஆலிவ் கில்பர்ட்டிடம் சொல்ல, பின்னாளில் அதுவே தனது வாழ்க்கைச் சரிதமாக வெளியாகும் என சோஜர்னர் நினைத் திருக்கவில்லை. கில்பர்ட்டின் நான்கு ஆண்டு உழைப்புக்குப் பிறகு, ‘Narrative of Sojourner Truth’ என்கிற பெயரில் 1850இல் அந்த நூல் வெளியானது. ‘வடபகுதி அடிமை, உடல்ரீதியான அடிமைத் தளையிலிருந்து நியூயார்க் மாநில அரசால் 1828இல் விடுவிக்கப்பட்டவர்’ என்கிற அடிக்குறிப்புடன் வெளியான அந்த நூல், சோஜர்னருக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. பெண்களால், குறிப்பாக ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்களால் என்ன செய்துவிட முடியும் என்கிற எள்ளலோடு நிறவெறியில் மூழ்கியிருந்த மக்களுக்குத் தன் ஆக்கபூர்வமான செயல்களால் பதிலளித்தபடி இருந்தார் சோஜர்னர்.

உறுதிக்குக் கிடைத்த வெற்றி

  • பொதுப் பேருந்துகளில் நிறத்தின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்பட்ட பாகுபாட்டுக்கு எதிராக அமெரிக்க மனித உரிமைப் போராளியான ரோசா பார்க்ஸ் 1955இல் முன்னெடுத்த போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போதைய பேருந்துகளில் முதல் வரிசை இருக்கைகள் அமெரிக்க வெள்ளை இனத்தவருக்கும் பின்னிருக்கைகள் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. 1955 டிசம்பர் 1 அன்று அந்த நாளின் வேலையை முடித்துவிட்டுச் சோர்வுடன் பேருந்தில் ஏறினார் ரோசா பார்க்ஸ். தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த மூவர் அமரும் இருக்கையில் அமர்ந்தார். அமெரிக்க வெள்ளை இனத்தவருக்கான இருக்கைகள் அனைத்தும் நிரம்பியிருந்த நிலையில் அந்தப் பேருந்தில் அமெரிக்கர் ஒருவர் நின்றபடி பயணம் செய்ய நேர்ந்தது. அவருக்காகப் பின்னிருக்கையை ஒதுக்கித்தரும்படி நடத்துநர் சொல்ல, ரோசாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த இருவரும் எழுந்துகொண்டனர். ரோசா பார்க்ஸ் மட்டும் எழவே இல்லை. விதிமுறைகளை மீறியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
  • அதைத் தொடர்ந்து மாண்ட் கொமெரி பேருந்துகளில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் யாரும் பயணம் செய்யக் கூடாது என்கிற போராட்டத்தைப் பிற போராளிகளுடன் இணைந்து ரோசா பார்க்ஸ் முன்னெடுத்தார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாகநீடித்த போராட்டத்தைத் தொடர்ந்து பேருந்துகளில் நிறத்தின் அடிப்படை யிலான பாரபட்சம் கடைப்பிடிக்கப்படக் கூடாது, அது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • இந்தப் போராட்டம் குறித்து, ‘அமெரிக்க வெள்ளை இனத்தவருக்காக இருக்கையை விட்டுத்தரும்படி என்னிடம் சொன்னபோது நான் இருக்கையைவிட்டு எழவில்லை. அடுத்து என்ன நேரும் என்பதைப் பற்றி நான் யோசிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என்னை அடிக்கலாம், வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துப் பேருந்தில் இருந்து இறக்கிவிடலாம். என்னைக் கைது செய்யலாம். ஆனால், அப்படி நான் இறக்கிவிடப்படும் முன் மனிதராகவும் குடிமகளாகவும் என் உரிமைகள் குறித்து நான் அறிந்துகொள்ள வேண்டும்என நினைத்தேன்’ என்று ரோசா பார்க்ஸ் பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார்.

போராட்டங்களின் முன்னோடி

  • ரோசா பார்க்ஸின் போராட்டத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ‘இருக்கை உரிமை’ போராட்டத்தில் சோஜர்னர் ஈடுபட்டார். 1860களில் அமெரிக்க வீதிகளில் ஓடிய வாகனங்களில் மோசமான நிறப் பாகுபாடு நிலவியது. ஒற்றை அல்லது இரட்டைக் குதிரைகள் பூட்டப்பட்டுத் தண்டவாளத்தின் மீது ஓடும் டிராம் போன்ற வாகனங்களின் உள்ளே அமர்ந்து பயணம் செய்ய அமெரிக்க வெள்ளை இனத்தவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆப்ரிக்க அமெரிக்கர்கள், வாகனத்தின் கூரை மீது அமர்ந்தபடியோ வாகனத்தின் முன்புறத்தின் குதிரைகளின் பின்னால் ஓட்டுநருக்கு அருகில் நின்றபடியோதான் பயணம் செய்ய வேண்டும் என்கிற சட்டம் அன்றைக்கு அமலில் இருந்தது.
  • அமெரிக்க உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து பொதுப்போக்குவரத்து வாகனங்கள் சிலவற்றில் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு எனச் சில இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. ‘மகளிர் மட்டும்’ பேருந்துகளைப் போல் ஆப்ரிக்க அமெரிக்கர் களுக்கெனத் தனியாக வாகனங்களும் விடப்பட்டன. ஆனால், அந்த ஒன்றிரண்டு வாகனங்களுக்காக மணிக் கணக்காகக் காத்திருக்க வேண்டும். ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்குத் தனி வாகனங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுகூடத் தெரியாமல் பலர் கால் கடுக்கக் காத்திருக்க, அவற்றிலும் அமெரிக்க வெள்ளை இன மக்களே பயணம் செய்வதும் உண்டு.
  • அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஆப்ரிக்க அமெரிக்க இளைஞர்கள் பெருவாரியாகப் பங்கெடுக்கும்படி செய்ததால் சோஜர்னரின் புகழ் வெள்ளை மாளிகை வரை பரவியி ருந்தது. சோஜர்னரைக் கௌரவிக்கும் பொருட்டு அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்துப் பாராட்டினார் ஆபிரகாம் லிங்கன். அதன் பொருட்டுப் பொதுப்போக்குவரத்து வாகனங்களில் சோஜர்னர் அடிக்கடி பயணம் செய்ய நேர்ந்தது. 1860களின் மத்தியில் ஒருநாள் வாஷிங்டனில் வாகனத்துக்காக சோஜர்னர் காத்திருந்தார். முதலில் ஒரு வண்டி வந்தது. சோஜர்னர் கையசைத்தும் நிற்காமல் சென்றது. இரண்டாம் வண்டியும் சோஜர்னரைப் புறக்கணித்துச் செல்ல, மூன்றாம் வண்டி வந்தபோது, “நான் பயணம் செய்ய வேண்டும்...” என்று முழக்கமிட்டார். அந்த உரிமைக் குரல் அங்கிருந்தவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது. வண்டியும் வேகமிழந்து நின்றது. உடனே வாகனத்தினுள் சோஜர்னர் ஏறினார். அவரைக் கூரையின் மீதோ வண்டியின் முன்புறமோ செல்லும்படி நடத்துநர் சொன்னார். சோஜர்னர் அதைப் பொருட்படுத்தவே இல்லை. அவரைக் கைது செய்ய நேரிடும் என்கிற எச்சரிக்கையைக் கேட்ட பிறகும் சிறிதும் அசராமல் வண்டியினுள் அமர்ந்திருந்தார். “என்னைப் பிற பகுதி மக்களைப்போல் எதுவும் அறியாதவள் என்று நினைத்தீர்களா? நான் நியூயார்க்கில் இருந்து வருகிறேன். எனக்கும் சட்டம் தெரியும்” என்று துணிவோடு சொன்னார் சோஜர்னர். இதற்காக அவர் கைது செய்யப்பட்டாரா, அவருக்கு நீதி கிடைத்ததா? அவற்றை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்