- கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலைக்கூட தடுத்துவிடலாம்; ஆனால் பேரிடர் காலத்தில் பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்துவதுதான் பெரும்பாடு. கொள்ளை நோய்த்தொற்றுக்கு தடுப்பூசியும், மருந்தும் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்துவதும் காற்றைக் கட்டுப்படுத்துவதும் ஒன்றுதான்.
- "15 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டாலே போதும், கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலின் வேகம் குறைந்துவிடும்" என்று வேடிக்கையாக கட்செவி அஞ்சலில் வெளியிடப்பட்டிருக்கும் பதிவு ஒருவகையில் உண்மையும்கூட.
- தேவையில்லாத அச்சத்தையும் பீதியையும் பரப்புவதுடன், நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த தவறான விமர்சனங்களையும் பரப்புவது மிகப்பெரிய பாதிப்பை பரவலாகவே ஏற்படுத்தியிருக்கிறது.
- இதற்கொரு முடிவு ஏற்படாவிட்டால் கொள்ளை நோய்த்தொற்றுக்கு பல அப்பாவிகள் பலியாக நேரும்.
- அமெரிக்காவைப்போல மக்கள்தொகை குறைந்த, தொழில் நுட்பரீதியாகவும், நிர்வாகக் கட்டமைப்பு ரீதியாகவும் வளர்ச்சியடைந்த ஜனநாயகம் அல்ல இந்தியா. சீனாவைப்போல சர்வாதிகார ஆட்சியும் நிலவவில்லை.
- அதனால் வதந்தி பரப்புபவரைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ வழியில்லை. அதன் விளைவை நாம் எதிர்கொள்கிறோம் என்பதுதான் வேதனை.
- நடிகர் ஒருவரின் மரணத்துக்கும், கொவைட்-19 தடுப்பூசிக்கும் முடிச்சுப் போட்டு, தேவையில்லாத அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பது துரதிருஷ்டவசமானது.
- அந்த நடிகரின் குடும்பத்தினரே மறுத்தும்கூட, அவரது மரணத்தை பரபரப்புச் செய்தியாகப் பரப்பி துன்பியல் மகிழ்ச்சியடையும் போக்கை என்னவென்று சொல்ல?
- நடிகர் இறப்பதற்கு முன், நாள்தோறும் தமிழகத்தில் சுமார் இரண்டு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன.
- நடிகர் இறந்த 17-ஆம் தேதியிலிருந்து அடுத்த மூன்று நாள்களும் மொத்தமாகச் சேர்த்து தமிழகத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை வெறும் 1.60 லட்சம்தான்.
- நடிகர் இறந்த அன்று தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை வெறும் 25,678 மட்டுமே.
- மாநில அரசும், மருத்துவ நிபுணர்களும் தடுப்பூசிக்கும் நடிகரின் மரணத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்று எத்தனையோ விளக்கங்கள் அளித்தாலும்கூட மக்களின் மனதில் ஊடகங்கள் பதியமிட்டிருந்த ஐயப்பாடு, வேரூன்றி கிளை பரப்பி வளர்ந்துவிட்டது. அந்த விளக்கங்களைப் பலரும் நம்ப மறுப்பது அறியாமையின் வெளிப்பாடு.
தேசத் துரோகம்
- தடுப்பூசியின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே இருக்கும் இடைவெளியால் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு ஒருபுறம் நிலவுகிறது.
- இன்னொருபுறம், தடுப்பூசி செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தடுப்பூசி மருந்துகள் போதிய அளவில் பயனாளிகள் இல்லாததால் காலாவதியாகி வீணாகின்றன.
- ஒவ்வொரு கோவிஷீல்ட் குப்பியிலும் 10 தடுப்பூசிகளுக்கான மருந்தும், ஒவ்வொரு கோவேக்ஸின் குப்பியிலும் 20 தடுப்பூசிகளுக்கான மருந்தும் காணப்படுகின்றன.
- குப்பியைத் திறந்தால், நான்கு மணி நேரத்தில் முழுமையாகப் பயன்படுத்தியாக வேண்டும். இல்லையென்றால் தூக்கியெறிய வேண்டியதுதான்.
- அதேபோல, தடுப்பூசி மருந்துக்கு காலாவதிக் கெடு உண்டு. மத்திய அரசால் அனுப்பப்படும் தடுப்பூசிகளை முழுமையாக காலாவதியாகும் கெடுக்குள் பயன்படுத்தாமல் போனால், எந்த முகத்துடன் நாம் கூடுதல் தடுப்பூசி கோர முடியும்?
- தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தடுப்பூசி மருந்துகள் வீணாகும் விகிதம் குறைவுதான் என்கிற அளவில் மகிழ்ச்சி அடையலாம்.
- தேசிய அளவிலான வீணாகும் தடுப்பூசி சராசரி 6.5% என்றால், தமிழகத்தில் 3.7% தான். தெலங்கானா (17.6%), ஆந்திரம் (11.6%) மாநிலங்களைப்போல நாம் மோசமாக இல்லை என்பது ஆறுதல்.
- தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்றால் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது. எந்தவொரு மருந்துக்கும் சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்யும் என்பது அனுபவபூர்வ உண்மை.
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வறிக்கையின்படி, கோவிஷீல்டின் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 10.03 கோடி பேரில் 17,145 பேரைத்தான் நோய்த்தொற்று பாதித்திருக்கிறது.
- அதேபோல இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட 1.57 கோடி பேரில் 5,014 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலாவது முறை கோவேக்ஸின் போட்டுக்கொண்ட 93.56 லட்சம் பேரில் 4,208 பேரும், இரண்டாவதுமுறை தடுப்பூசி போட்டுக்கொண்ட 13.37 லட்சம் பேரில் வெறும் 698 பேர் மட்டுமே கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
- தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நோய்த்தொற்று பாதிப்பு கட்டுக்குள் வராது என்பது தவறான பிரசாரம்.
- பெரும்பாலான மக்கள்தொகையினருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் நாடுகளில் கொள்ளை நோய்த்தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் உயிரிழப்புகளும் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
- அதனால் நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு தடுப்பூசிதான் ஒரே வழி.
- ஆய்வு முடிவுகளின்படி, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 0.02 - 0.04% பேர்கள் மட்டும்தான் கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட 99.96% பேரை ஒதுக்கிவிட்டு விதிவிலக்குகளை விளம்பரப்படுத்தி பீதியைக் கிளப்புவது ஒருவகையில் தேசத் துரோகம்.
நன்றி: தினமணி (24 – 04 - 2021)