- ஒரு நாள் காட்டில் விறகுவெட்டி ஒருவன் விறகுகளை வெட்டிக் கொண்டிருக்கும் பொழுது அவனது கோடரி அங்கிருந்த நதியில் விழுந்து விடும். இதனால் விறகு வெட்டி மனம் வருந்தி நிற்கையில், அந்த நதியில் இருந்து ஒரு வனதேவதை தோன்றி அவனது துன்பத்திற்கு காரணம் கேட்கும். அவன் நடந்ததைச் சொல்ல தேவதை ஒரு தங்கக் கோடரியைக் காட்டி ‘இதுவா உன்னுடையது’ என்று கேட்கும். இவன் ‘இல்லை’ என்பான்.
- அடுத்து அந்த தேவதை வெள்ளிக் கோடரியைக் காட்டி ‘இதுவா’ என்று தேவதை கேட்கும். அவன் ‘இல்லை’ என்று கூறியவுடன் இரும்புக் கோடரியைக் காட்டி ‘இதுவா’ என்று கேட்க, அதைக் கண்ட விறகு வெட்டி மகிழ்ந்து ‘ஆம் இதுதான் என்னுடைய கோடரி’ என்று சொல்ல தேவதை, தன்னிடம் நோ்மையாக நடந்து கொண்டதற்காக மூன்று கோடரிகளையும் பரிசாகத் தந்து விட்டு விறகு வெட்டியை வாழ்த்திவிட்டு மறைந்துவிடும். அதுமுதல் விறகு வெட்டி செல்வத்தோடு மகிழ்ச்சியாக வாழ்வாா் - இது சிறுவயதில் நாம் அனைவரும் கேட்ட கதை.
- பல நூறு ஆண்டுகளாக சொல்லப்படும் கதை நமக்குச் சொல்வது என்ன? அது பற்றிப் பெரிதாக நாம் இன்றைக்கு சிந்திப்பதில்லை. ஆனால், தெரிந்து கொள்வது அவசியம். பூமியை அன்னையாக உருவகம் செய்த தேசத்தின் பிரதிநிதிகள் நாம். வனம் என்பதை தேவதையாகப் போற்றும் மரபு நம்முடையது. வனதேவதை தன்னிடம் உண்மையாக நடந்து கொள்வோரைக் காக்கும். பரிசுகள் வழங்கும். வனம் தரும் பரிசுகள் நம்மை செல்வச் செழிப்போடு வாழ வைக்கும் என்ற குறியீடே இந்தக் கதை.
- இந்தக் கதையின் மற்றுமொரு நுட்பம், அதில் வருபவன் விறகு வெட்டி, மரம் வெட்டி அல்ல. எரிபொருளாக மரம் மட்டுமே பயன்பட்ட நாட்களிலும்கூட மக்கள் மரங்களை வெட்டும் வழக்கமில்லை என்பதும் இதனுள் இருக்கும் மறைபொருள். ‘சுள்ளி பொறுக்குதல்’ என்ற சொற்பயன்பாடு இதன் உண்மையைச் சொல்லும்.
- வனம் என்பது நம் வாழ்வியலில் தவிா்க்க முடியாத அங்கமாக வேதகாலம் முதலே இருந்து வருகிறது. வனத்தை ராணியாகக் கருதி வனத்தோடு உரையாடுவது போன்றதோா் கவிதை ‘அரண்யானி’ என்ற தலைப்பில் ரிக் வேதத்தில் இடம் பெற்றிருக்கிறது. ரிக்வேதம் ஏறத்தாழ எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று பால கங்காதர திலகரும், ஜொ்மனிய அறிஞா் ஹொ்மன் ஜாகோபியும் கருத்துத் தெரிவிக்கின்றனா். அத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் வனங்களைப் போற்றுவதைப் பண்பாகக் கொண்டவா்கள்.
- அரண்யானி என்றால் கானகமாகிய ராணி. ரிஷி தேவமுனி இயற்றியிருக்கும் ‘அரண்யானி’ கவிதை, அரண்யானி அரண்யானி உனக்கு பயம் என்பதே இல்லையா?
நீ ஏன் கிராமத்தை நாடுவதில்லை?
- கிரீச் கிரீச் என்று வண்டுகள் முதலான பூச்சிகளின் ஒலிக்கு சிச்சிகப் பறவைகள் தரும் பதில் தாளமும் ஸ்ருதியும் இணைந்தது போல் உள்ளதே?...
- வனத்தின் தேவியே!
- மாலைப் பொழுதில் கேட்கும் வினோத ஒலிகள் அச்சமூட்டுகின்றன.
- வனங்கள் எவரையும் துன்புறுத்துவதில்லை அதை எவரும் துன்புறுத்தாத வரை!
- இங்கே உண்ணப் பழங்கள் இருக்கின்றன கஸ்தூரி மணமுள்ளவளும் சுகந்தமாயிருப்பவளும் பழங்கள் முதலியவற்றை ஏந்துபவளும் பயிரிடப்படாதவளும் மிருகங்களின் தாயுமான அரண்யானியைப் போற்றுகிறேன்.
- உலகிலேயே வனம் பற்றி எழுதப்பட்ட முதல் கவிதை இது. நம் முன்னோரின் பல்லுயிா் பெருக்கம் பற்றிய புரிதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணா்வு நம் மக்களுக்கு இருந்தது என்பதற்கான சான்றுகளை கவிதை தெரிவிக்கிறது.
- தமிழ்ப் பாரம்பரியத்திலும் வனங்கள் பாதுகாப்பு தெளிவாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. நிலம் நால்வகையாகப் பகுக்கப்பட்டது என்றாலும் அதிலே இரண்டு வகையான நிலங்கள் காடுகளாகவே இருக்கின்றன. மலையும் மலை சாா்ந்த இடமும் குறிஞ்சி அதாவது மலைக்காடுகள். காடும் காடு சாா்ந்த இடமும் முல்லை நிலம் என்று அப்பகுதியின் சிறப்பான மலா்களின் பெயராலேயே அறியப்பட்டன.
- அங்கே இருக்கும் மரங்கள், வாழும் உயிரினங்கள், பறவைகள் அனைத்தும் அந்நிலத்தின் குறியீடுகளாக, கருப்பொருள்களாக சுட்டிக்காட்டப்பட்டன. சூழலியல் சிந்தனைக்கு முன்னோடியாக விளங்கியவா்கள் நாம்.
- தெய்வங்கள் உறையும் இடங்களாக வனங்கள் அறியப்பட்டு, அவை அப்படியே பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் இல்லையெனில் அது தெய்வக்குற்றம் ஆகிவிடும் என்றும் நம்பிக்கை இருந்து வந்திருக்கிறது. கோயிலைச் சுற்றி வனங்கள், நந்தவனம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டன. அந்தந்தக் கோவில்களில் அந்த மண்ணுக்கே உரிய மரங்கள் ‘ஸ்தலவிருக்ஷம்’ என்ற பெயரில் பாதுகாக்கப்பட்டன. அதோடு ‘வனபோஜனம்’ என்பது ஆலயங்களில் ஒரு வைபவமாகவே கொண்டாடப்பட்டது.
- பெரும்பாலும் குலதெய்வங்கள் என்று கொண்டாடப்படும் சாஸ்தா, ஐயனாா், காளி போன்ற தெய்வங்களின் கோயில்கள் வனங்களுக்கு நடுவில் தான் இன்றுவரை அமைந்திருக்கின்றன. வனதேவதைகள் என்றே பல தெய்வங்களை நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக வழிபட்டு வருகிறோம். அவா்களே நம் வாழ்விடங்களை, நீராதாரங்களைக் காப்பதாக இன்றும் நம்பிக்கை இருக்கிறது. இந்த இறை மீதுள்ள நம்பிக்கையில் இங்குள்ள வனங்களும் பாதுகாப்பாக இருக்கின்றன.
- சூழலியல் அறிஞா்களும் உலகின் மொத்த வனப்பரப்பில் ஒரு சதவீதம் காலம் கடந்தும் காப்பாற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனா். அவை அனைத்துமே ஏறத்தாழ இறை நம்பிக்கையோடு தொடா்புடையன என்றும் இதனை, ‘தெய்வம் தந்த வனங்கள்’ (ஸேக்ரட் குரோவ்ஸ்) என்றும் குறிப்பிடுகின்றனா். இத்தகைய வனங்களில்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பல அரிய வகைத் தாவரங்கள் இன்றும் எந்த மனிதத் தொந்தரவும் இல்லாமல் அப்படியே இருப்பதாகவும் அறிஞா்கள் கருதுகின்றனா். இவற்றைக் காக்க உலக சுற்றுச் சூழல் அமைப்பு நிதி வழங்கிவருகிறது.
- பாரத தேசத்தின் கலாசாரத்தில் இயற்கை பல்லுயிா் ஓம்புதல் வழிவழியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கும் சுயலாபத்திற்காகவும் தவறான நிா்வாக வழிமுறைகளாலும் வனங்கள் அழிப்பு தொடங்கி வேகமாக நடந்து வருகிறது. ஓசோன் படலம் சேதமடைந்து உலகம் ஓட்டையாகிக் கொண்டு வருகிறது. அதனை சரிசெய்வதற்கான வழிகளைத் தேட வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
- ஐ.நா. சுற்றுசூழல் அமைப்பு உலக நாடுகளை ஒன்றிணைத்து, ஆண்டுதோறும் புவி வெப்பமடைந்து வருவதைத் தடுப்பதற்கான திட்டங்களை விவாதித்து முடிவுகளை மேற்கொள்கிறது. இதில் மாற்று எரிசக்திப் பயன்பாடு பெரிய அளவில் கவனம் பெறுகிறது. இதன் அவசியம் நமக்குத் தெரிந்தாலும் பூமி வெப்பமயமாவதைத் தடுப்பதற்கு மிக அவசியத் தேவை வனங்கள். இருக்கும் வனங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதும், புதிய வனங்களை உருவாக்குவதுமே உலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீா்வாக இருக்க முடியும்.
- இயற்கையின் உயிா்சூழல் என்பதை ஆன்மிகத்தோடு இணைத்து நமக்குக் கற்றுக்கொடுத்ததால் உலகின் மற்ற நாடுகளை விட நாம் சற்றே அதிக பொறுப்புணா்வு கொண்டவா்களாக இருக்கிறோம். சமீபத்தில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நூற்றி இருபது நாடுகள் பங்குபெற்ற ஐ.நா. சபையின் 26-ஆவது பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது. அதில், உலகில் அதிக அளவில் கரியமில மாசு வெளிப்படுத்தும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள்கூட முன்வைக்காத ஐந்து சூழலியல் திட்டங்களை பாரத தேசத்தின் சாா்பில் நமது பிரதமா் முன்வைத்தாா்.
- அதன்படி, முதல் பத்து ஆண்டுகளில் மாற்று எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது, அடுத்த பத்து ஆண்டுகளில் எரிசக்தி தேவையின் 50% புதுப்பிக்கத் தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவது, அதே நேரத்தில் கரியமிலவாயு வெளியேற்றத்தை 100 கோடி டன் அளவிற்கும் கீழாக கட்டுப்படுத்துவது, வெளியேற்றப்படும் கரியமில வாயுவுக்கு நிகரான காா்பன் பாதுகாப்பை உறுதி செய்யும் இலக்கை எட்டுவது என்று 2070-ஆம் ஆண்டுக்குள் சூழலியல் மாற்றத்திற்கான முழு தீா்வையும் முன்வைத்து அதனை செயல்படுத்தும் முயற்சிகளில் இந்தியா முழுமூச்சாக ஈடுபடும் என்றும் அறிவித்தாா்.
- இதற்கெல்லாம் நாம் அறிவியலை மட்டுமல்ல, நம் ஆன்மிகத்தையும் முழுமையாக ஏற்க வேண்டும். பசுமையை தேசமெங்கும் வனங்கள் வழியே சாத்தியப்படுத்த வேண்டும்.
- தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் வனப்பரப்பு ஏறத்தாழ பதினேழு சதவீதம் உள்ளது. ஆனால், தேசிய வனக்கொள்கையின்படி மாநிலத்தின் மொத்தப் பரப்பளவில் 33.3% வனங்கள் இருக்க வேண்டும். பசுமைமாறாக் காடுகளை உருவாக்குவதிலும், பராமரிப்பதிலும் அரசும் சில தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. என்றாலும் இவை போதுமானதல்ல.
- எங்கெல்லாம் கோயில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் நந்தவனங்களை அமைக்கலாம். வனங்களின் நடுவில் அமைந்திருக்கும் நம் குலதெய்வங்களின் இடங்களைப் பசுமை மாறாமல் இருக்கும் பொருட்டாக விதைப்பந்துகளை இடலாம். கோங்கு, ஆல், அரசு, வேம்பு போன்ற நாட்டு மரங்களின் கன்றுகளை நம் குழந்தைகள் கைகளால் அந்த வனப்பகுதிகளில் நடலாம். மூலிகை வனங்களை கிராமந்தோறும் ஏற்படுத்தி அங்கே நம் தெய்வங்களைக் காவலுறச் செய்யலாம்.
- வன தேவதைகள் வழங்கும் பரிசு நமக்கு மட்டுமல்ல, நம் தலைமுறைகளுக்கும் வாழ்வை வளமாக்கும். பூமித்தாயின் வெப்பம் தணிக்க நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்முடைய பழம்பெருமையான ஆன்மிக உயிா்ச்சூழலை உயிா்பிப்பது ஒன்றே.
நன்றி: தினமணி (18 – 12 – 2021)