TNPSC Thervupettagam

வன்கொடுமையல்ல பயங்கரவாதம்

November 10 , 2023 236 days 175 0
  • தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2023, ஏப்ரல் மாதத்தில், 'மாநில அளவிலான விழிப்புக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசின் சார்பில் சில புள்ளிவிவரங்கள் வழங்கப்பட்டன. அவற்றைப் பார்த்தபோது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2021ஐவிட 2022இல் அதிகம் என்பது தெரியவந்தது. சுமார் 400 வழக்குகள் அதிகரித்திருந்தன.
  • வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுடைய வீதம் 2021இல் 11% ஆக இருந்தது, அது 2022இல் 9.59% ஆகக் குறைந்திருந்தது. ஐபிசி வழக்குகளில் தண்டனை பெறுவோர் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இது மிக மிகக் குறைவாகும்.
  • இதில் 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 430 கிராமங்கள் வன்கொடுமை நிகழ்ந்த கிராமங்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய ஆண்டைவிட இது அதிகமாக இருந்தது.

குறையாத குற்றங்கள்

  • ஆதிதிராவிடப் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவது 2021இல் 8 ஆக இருந்தது. இது 2022இல் 16 ஆக அதிகரித்திருந்தது. ஆதிதிராவிட சிறுமியர் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பாகப் பதியப்பட்ட போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை 2021இல் 166 ஆக இருந்தது, அது 2022இல் 258 ஆக அதிகரித்திருந்தது.
  • இந்த விவரங்கள் எல்லாவற்றையும் சுட்டிக்காட்டியதோடு குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து இந்த வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் அக்கூட்டத்தில் வலியுறுத்தினார். தமிழக அரசு அதில் முனைப்பு காட்டினாலும் ஒவ்வோர் ஆண்டும் ஆதிதிராவிட மக்களின் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
  • முக்கியமான காரணம், ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறையை சமூகப் பிரச்சினையாகவே காவல் துறை அணுகுவதுதான் எனத் தோன்றுகிறது. அதைக் குற்றமாகப் பார்க்க காவல் துறையினர் தயங்குகின்றனர்.

வன்கொடுமை என்றால் என்ன?

  • வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989இல் இயற்றப்படும் வரை வன்கொடுமை என்ற சொல்லுக்குச் சட்டப்பூர்வமான விளக்கம் நமது நாட்டில் இல்லை. அந்தச் சட்டத்தில்தான் முதன்முதலாக வன்கொடுமை என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது.
  • அந்தச் சட்டத்தின் பிரிவு 3இன் கீழ் 29 வகையான குற்றங்கள் பட்டியலிடப்பட்டு அதற்கான தண்டனைகள் வரையறுக்கப்பட்டன. அந்தச் சட்டத்தை மேலும் வலுவாக்க அவ்வப்போது திருத்தங்களும் செய்யப்பட்டன. ஆனாலும், பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை.
  • சாதி அடிப்படையில் இழைக்கப்படும் குற்றங்களை நாம் ஒரே விதமாகப் பார்க்கக் கூடாது.

அம்பேத்கரின் வாதம்

  • தீண்டாமை தொடர்பான குற்றங்களுக்கு என 1954ஆம் ஆண்டு சட்டம் ஒன்று இயற்றப்பட்டபோது அந்தச் சட்ட மசோதாவின் மீது மாநிலங்களவையில் பேசிய அம்பேத்கர், “ஒரு குற்றத்துக்கான தண்டனை என்பது இரண்டு நோக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஒன்று, அந்தக் குற்றத்தை மீண்டும் அவர் செய்யாமல் தடுப்பதற்குத் தண்டனை அவசியமாகிறது; அடுத்து, அவர் அந்தக் குற்றம் செய்வதையே தொழிலாகக் கொள்ளாமல் தடுப்பதற்கு அவரைத் தண்டிக்க வேண்டி இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
  • தீண்டாமைக்கான தண்டனை என்பது அந்தக் குற்றம் மீண்டும் மீண்டும் நிகழாமல் தடுக்கும் விதத்தில் கடுமையானதாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார்.
  • இந்திய தண்டனைச் சட்டத்டோடு ஒப்பிட்டுப் பேசிய அம்பேத்கர், அதில் மரண தண்டனை, தீவாந்தர சிறை தண்டனை, சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் தண்டனை, அபராதம் விதிப்பது, கசையடி கொடுப்பது, சீர்திருத்த முகாம்களில் போடுவது என்று பலவிதமான தண்டனைகள் வரையறுக்கப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
  • ஏழு விதமான குற்றங்களுக்கு மரண தண்டனை, 50 வகையான குற்றங்களுக்குத் தீவாந்தர சிறை தண்டனை, 21 வகை குற்றங்களுக்கு சாதாரண சிறை, 12 குற்றங்களுக்கு அபராதம் என அதில் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொன்னார். அதிகபட்ச தண்டனையை வரையறுத்தால் மட்டும் போதாது; குறைந்தபட்ச சிறைத் தண்டனையும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
  • சாதி அடிப்படையில் செய்யப்படும் குற்றங்களில் பாகுபடுத்துதல், அவமதித்தல் உள்ளிட்ட குற்றங்கள் ஒரு வகை. அவை உளவியல்ரீதியில் ஒருவரைத் துன்புறுத்துபவை, காயங்களை ஏற்படுத்துதல், கொலை செய்தல், உயிருக்கு ஆபத்தை விளவித்தல் முதலான குற்றங்கள் இன்னொரு வகை. இவை இரண்டுக்கும் அப்பால் பட்டியல் சமூகத்தினரின் அமைதியைக் குலைப்பது, அச்சத்தை ஏற்படுத்துவது - அது இன்னொரு வகை.
  • பொதுவாகக் குற்றங்களின் தன்மையைப் பொருத்து புதிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுபோலவே பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை வன்கொடுமை என்று அழைப்பதை மறுஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்தக் குற்றங்களைப் பயங்கரவாதக் குற்றங்களாகக் கருதி அதற்கேற்ப தண்டனைகளை வரையறுக்க வேண்டும். 

ஏன் இது பயங்கரவாதம்?

  • இந்திய அரசு பயங்கரவாதத்துக்கு அளித்துள்ள விளக்கம் இது: “பொதுமக்களுக்கு எதிராக ஓர் அரசியல் நோக்கத்துக்காகவோ அல்லது மதம் சார்ந்த நோக்கத்துக்காகவோ அல்லது ஒரு கருத்தியலின் அடிப்படையிலோ திட்டமிட்ட முறையில் வன்முறையைப் பயன்படுத்திக் கொலை செய்வது அல்லது அச்சத்தை ஏற்படுத்துவது அல்லது பிளவினை உண்டாக்குவது அல்லது பொது அமைதிக்குக் கேடு செய்வது - அதுதான் பயங்கரவாத நடவடிக்கை!”
  • இந்த விளக்கம் சாதிய வன்முறைகளுக்கு நேரடியாகப் பொருந்துகிறதா, இல்லையா? 
  • ஒரு குற்றம் மத அடிப்படையில் செய்யப்பட்டால் அதைப் பயங்கரவாதம் எனச் சொல்லி கடுமையான தண்டனை கொடுப்பதும், அதே குற்றம் சாதி அடிப்படையில் செய்யப்பட்டால் லேசாகக் கருதி கண்டுகொள்ளாமல் இருப்பதும் நீதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது.
  • சாதியின் பெயரால் ஆதிதிராவிட மக்கள் மீது நடத்தப்படுவது வன்கொடுமை அல்ல, அது பயங்கரவாதத் தாக்குதல். எனவே, அந்தக் குற்றத்தைச் செய்தவர்களைப் பயங்கரவாதிகளாகக் கருதி சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) தண்டிக்க வேண்டும்.
  • சாதிப் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த ஒருவேளை அது உதவக்கூடும்!

நன்றி: அருஞ்சொல் (10 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்