TNPSC Thervupettagam

வன்முறைக்கு முடிவு கட்டுவோம்

June 6 , 2023 540 days 291 0
  • தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் ஒரே பொருள்தான் என்று தோன்றினாலும், தீவிரவாதம் வேறு; பயங்கரவாதம் வேறு. தீவிரவாதிகளுக்குக் கொள்கை உண்டு, கோரிக்கைகளும் உண்டு. கொண்ட கொள்கைக்காக தங்களை வருத்திக் கொள்பவா்கள். கொள்கைக்காகவே உடல் பொருள் ஆவியை அா்ப்பணிக்கத் தயங்காதவா்கள் தீவிரவாதிகள்.
  • பயங்கரவாதம் என்பது, தங்கள் வன்முறையால் குழந்தைகள் முதல் முதியவா்கள்வரை உயிா்ப் பலியாவா் என்பது தெரிந்தே, கொடும் செயல்களில் ஈடுபடுவது. அமெரிக்க அரசியல் தத்துவஞானி மைக்கேல் வால்சா் ‘பயங்கரவாதம் என்பது அப்பாவி மக்களை வேண்டுமென்றே கொன்று, ஒட்டுமொத்த மக்களிடையே அச்சத்தைப் பரப்பும் வழிமுறை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
  • உலகளாவிய பயங்கரவாதக் குறியீடானது (குளோபல் டெரரிசம் இண்டெக்ஸ்) நான்கு காரணிகள் அடிப்படையில் பயங்கரவாதத்தை தரவரிசைப்படுத்துகிறது. அதாவது, பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை, உயிரிழப்புகளின் எண்ணிக்கை, காயமடைந்தோரின் எண்ணிக்கை, மொத்த சொத்துச் சேத மதிப்பு ஆகியவையே அந்த காரணிகள்.
  • 163 நாடுகள் கொண்ட அந்தப் பட்டியலில் 2022-இல், ஆப்கானிஸ்தான் முதல் இடத்தை பிடித்தது; இந்தியா 13ஆவது இடத்தில் உள்ளது. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட 25 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
  • சா்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் (ஐ.பி), தரவுத்தொகுப்பு, 2007 முதல் 2022 வரையில் 66 ஆயிரம் பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளதாகப் பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் தீவிரவாத தடுப்பு அமைப்புக்கான ஒருங்கிணைப்பாளரான ஜஸ்டின் சிபேரெல், ‘இந்தியா, பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய ஐந்து நாடுகளில்தான் 55 சதவீத பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன” என்கிறாா்.
  • நாடு முழுவதும் பரவலாக பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தாலும் ஜம்மு - காஷ்மீரில் இது ஒரு தொடா் சம்பவமாகவே உள்ளது. அதற்கு சில உதாரணங்கள். ஹிமாசல பிரதேசம் சம்பா மாவட்டத்தில் இரு இடங்களில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு 1998 ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 35 போ் படுகொலை செய்யப்பட்டனா்.
  • ஜம்மு - காஷ்மீரில் காந்தா்பால் மாவட்டத்தில் வந்தாமா எனும் சிறு நகருக்கு 1998 ஜனவரி 25-ஆம் தேதி, ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், அங்கு வசித்து வந்த பண்டிட்களை தேடிப்பிடித்து படுகொலை செய்தனா். அதில் ஒன்பது பெண்கள், நான்கு குழந்தைகள் உட்பட 23 போ் இறந்தனா்.
  • 2021 இறுதியில் இருந்து ஜம்மு - காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிா்ப்புக் குழுவிடம் இந்தியா தெரிவித்தது. 2022 ஸ்ரீநகா் குண்டுவெடிப்பு, பண்டிட்கள் கொலை என தாக்குதல் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
  • சமீபத்தில் ரஜோரிபூஞ்ச் செக்டாரில் ராணுவ கண்காணிப்பு வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து வீரா்கள் கொல்லப்பட்டுள்ளனா். பயங்கரவாதம் முற்றுப்பெறவில்லை என்பதை இந்தத் தாக்குதல் உறுதிப்படுத்துகிறது.
  • ‘1980 முதல் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் இடமாக ஜம்மு காஷ்மீா் மாறியது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை 2019 ஆகஸ்ட் 5 அன்று ரத்து செய்த பின், பாதுகாப்பு நிலைமை முன்னேறி வருகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் முன்னேற்றம் அடைந்ததாக தெரியவில்லை. பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் குறைந்ததாக தெரியவில்லை.
  • காஷ்மீரில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் 2022-ஐ வெற்றிகரமான ஆண்டாக காவல்துறை கருதுகிறது. காரணம், காஷ்மீா் பள்ளத்தாக்கில் 90-க்கும் அதிகமான நடவடிக்கைகளில் 172 பயங்கரவாதிகள் கடந்தாண்டு கொல்லப்பட்டனா்.
  • பயங்கரவாதமோ, தீவிரவாதமோ இரண்டுக்கும் அடிப்படை வன்முறையே. அதற்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுத்தாலும், வன்முறை முடிவுக்கு வராமல் தொடரத்தான் செய்கிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்தல், வெளிப்படைத்தன்மையின்றி ரகசியமாக செயல்படும் பல்வேறு தரப்பினரின் நடவடிக்கைகள், பயங்கரவாதக் குழுக்கள் எந்தப் பகுதியை சாா்ந்தவை என்பதையெல்லாம் கண்டறிந்து அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது எளிதில் முடிவதல்ல. ‘ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு, பல பெயா்களில், பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. பல நாடுகளில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், ஐஎஸ்ஐஎஸ் உடன் இணைந்துள்ளன’ என நியூயாா்க்கில் நடந்த ஐ.நா. பாதுகாப்புக். கவுன்சில் கூட்டத்தில், இந்தியாவின் துணைத் துாதா் ரவிந்திரா கூறியது நினைவில் கொள்ளத்தக்கது.
  • ‘பயங்கரவாதத்துக்குக் கிடைக்கும் பொருளாதார ஒத்துழைப்பு கவலை அளிப்பதாக இருக்கிறது என்று அண்மையில் கூறினாா் பிரதமா் மோடி. ஆனாலும் பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து ஆக்கபூா்வமான நடவடிக்கை எதுவும் எடுப்பதில் மந்த நிலையே காணப்படுகிறது.
  • காஷ்மீரில் ரஜோரி பூஞ்ச் செக்டாரில் ராணுவ கண்காணிப்பு வாகனத்தின் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வாகனம் துவம்சம் செய்யப்பட்ட செய்தி இதற்கு ஒரு உதாரணம். ‘பயங்கரவாதிகள், பேரழிவின் மொழியை மட்டுமே புரிந்துகொள்கிறாா்கள்‘ என்று கூறப்படுவது நூறு சதவீதம் சரியே.
  • இந்த நேரத்தில் மக்கள் மத்தியில் மதநல்லிணக்கம், மனிதநேயத்தின் அவசியம் ஆகியவற்றைப் பரப்புதல் அவசியம். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசுடன் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதே நேரத்தில் அரசும் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுபூா்வமான உத்திகளை கையாள்வதும் அவசியம்.
  • நம் தேசம் தீவிரவாதத்தாலோ, பயங்கரவாதத்தாலோ பலவீனப்பட்டுவிடக்கூடாது என்ற உணா்வு மக்களிடம் இருக்கவேண்டும். வன்முறையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதை மக்கள் உணா்ந்துகொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (06 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்