TNPSC Thervupettagam

வரலாம், வராமலும் போகலாம்!

June 17 , 2021 1321 days 592 0
  • தேசிய அளவில் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வீரியம் குறைந்து வருவது தெரிகிறது.
  • கடந்த மூன்று நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை 70,000-க்கும் கீழே காணப்படுவது ஆறுதல் அறிகுறி.
  • இந்தியாவிலுள்ள 718 மாவட்டங்களில் 382 மாவட்டங்களில்தான் 10-க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன.
  • தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி 10,448 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட சென்னை, செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் வீரியம் குறைந்து கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் மட்டுமே சற்று கூடுதலாகக் காணப்படுகிறது.
  • உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் மிகப் பெரிய சரிவு காணப்படவில்லை என்பது சற்று கவலையளிக்கிறது.
  • தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் பல மாநிலங்களில் பொது முடக்கம் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது.
  • தமிழகம் மட்டுமல்லாமல் தில்லி, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், குஜராத் போன்ற அதிக பாதிப்பு காணப்பட்ட மாநிலங்களும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கின்றன.
  • நோய்த்தொற்றால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு தமிழகத்திலும் 27 மாவட்டங்களில் பொது முடக்கத் தளர்வுகள் அண்மையில் அறிவிக்கப் பட்டிருக்கின்றன.
  • முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருப்பதுபோல, பொது முடக்கம் என்பது நோய்த் தொற்றுக்குத் தீர்வாக இருக்காது. நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில், பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிவிடாமல் இருப்பதற்கும் வழிகோலுவது தான் புத்திசாலித்தனமான நிர்வாக அணுகுமுறையாக இருக்க முடியும்.
  • நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் வேகம் குறைந்து வருகிறது என்று நம்மை ஆறுதல் அடைய விடாமல் ஜூலை முதல் மூன்றாவது அலை வரக்கூடும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
  • கொள்ளை நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளும், தடுப்பூசி திட்டமும், தேவைப்படும் இடங்களில் பொது முடக்கமும் பயன்படுத்தப்பட்டு முன்கூட்டியே திட்டமிட்டால் மூன்றாவது அலையை வெற்றிகரமாக தடுத்து நிறுத்த முடியலாம்; அல்லது அதை எதிர்கொள்ளலாம்.
  • கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் மிக முக்கியமான பங்கு வகிப்பது தடுப்பூசி.
  • தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து அவற்றை எல்லா மாநிலங்களுக்கும் வரும் 21-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யும் என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதிப்படுத்துவதும், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் வீணாகிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும் மாநில அரசுகளின் கடமை.
  • தடுப்பூசி போடுவது மட்டுமல்லாமல், கிராமங்கள் வரை பரிசோதனைகளை அதிகரிப்பதும், நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதும்கூட மாநில அரசுகளின் பொறுப்பு என்பதை மறந்துவிடக் கூடாது.
  • சில மாநிலங்களில் நோய்த்தொற்று பாதிப்பை குறைத்துக் காட்டுவதற்காக பரிசோதனைகள் முறையாக நடத்தப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது.
  • அதே போல, உயிரிழந்தோர் எண்ணிகையும் சரியாகப் பதிவிடப்படுவதில்லை என்றும் தெரிகிறது. இவையெல்லாம் நோய்த்தொற்றுப் பரவலை ஊக்குவிக்குமே தவிர, ஆட்சியாளர்களுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தாது.
  • தடுப்பூசிகள் தேவைக்கேற்ப கிடைக்காமல் இருப்பதும், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் மத்தியில் காணப்படும் தயக்கமும் மூன்றாவது அலை தொற்றுக்கு வழிகோலும்.
  • பிரதமர் கூறியிருப்பது போல, பொது முடக்கத் தளர்வுகளால் நோய்த்தொற்றுப் பரவல் முடிந்து விட்டதாக மக்கள் கருதக்கூடாது.
  • பொதுமக்களின் ஒத்துழைப்பில்லாமல் அரசின் எந்த நடவடிக்கையும் வெற்றி அடையாது என்பதால், நோய்த்தொற்றின் மூன்றாவது அலை உருவாகாமல் தடுக்கும் பொறுப்பு நமக்கு உண்டு.

மூன்றாவது அலை

  • மூன்றாவது அலை நோய்த்தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட இருப்பது குழந்தைகள்தான் என்று கூறப்படுகிறது.
  • குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மூன்றாவது அலை தொடங்குவதற்குள், மற்ற இரு அலைகளில் நாம் கற்றுக் கொண்டிருக்கும் பாடங்களின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும்.
  • குழந்தைகளுக்கு பொருத்தக்கூடிய பிராணவாயு முகக்கவசங்கள் உள்பட என்னவெல்லாம் தேவைப்படும் என்பதை சுகாதாரத் துறை முன்கூட்டியே ஆய்வு செய்து அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
  • மருத்துவமனை வளாகங்களில் குழந்தை நல மருத்துவர்கள், தாய்மார்களுடன் குழந்தைகளைத் தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் உள்ளிட்டவற்றில் இப்போதே கவனம் செலுத்தியாக வேண்டும்.
  • தேவைக்கேற்ப பிராணவாயுவும், அவசர சிகிச்சைப் படுக்கைகளும், கொவைட் 19 பராமரிப்பு மையங்களும் முன்கூட்டியே திட்டமிடப்படாவிட்டால், குழந்தைகளின் உயிரிழப்பை எதிர்கொள்ள வேண்டிய அவலத்துக்கு நாம் தள்ளப்படுவோம்.
  • குழந்தைகளுக்கான கொள்ளை நோய்த்தொற்று சிகிச்சைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருப்பது வரவேற்புக்குரியது. மூன்றாவது அலை வரலாம், வராமலும் போகலாம். ஆனால் அதை எதிர்கொள்ள, கடந்த இரண்டு அலைகளிலிருந்து பாடம் படித்திருக்கும் நாம் தயாராக இல்லாமல் இருந்து விடலாகாது.

நன்றி: தினமணி  (17 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்