TNPSC Thervupettagam

வரலாற்றில் மறைந்துபோன எலிசபத்தின் பறவைகள்

December 23 , 2023 362 days 237 0
  • மதராசப்பட்டினம் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எப்படி இருந்திருக்கும்? நூல்கள், குறிப்புகள் வழியே அந்த விவரங்களை அறியலாம். அது போக மதராசப்பட்டினத்தில் அக்காலகட்டத்தில் வாழ்ந்த இரண்டு சகோதரிகளின் கடிதங்கள், ஓவியங்கள் மூலமும்கூட அறிய முடியும்! எலிசபத் க்வெலிம் (Elizabeth Gwillim) தனது இளைய சகோதரி மேரி சைமண்ட்ஸுடன் இங்கிலாந்தில் இருந்துஹிந்துஸ்தான்எனும் கிழக்கிந்திய கம்பெனியின் கப்பலில் பயணித்து மதராசப்பட்டினத்திற்கு வந்திறங்கியது 26 ஜூலை 1801இல். எலிசபத் க்வெலிமின் கணவரான ஹென்றி க்வெலிம் மதராஸ் உயர் நீதி மன்றத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்க, இங்கிலாந்திலிருந்து இங்கு வந்தபோதுதான் இவர்களும் சேர்ந்து வந்தனர்.
  • அப்போதிலிருந்து 1808ஆம் ஆண்டு வரை தங்களது தாயாருக்கும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர்கள் தொடர்ந்து கடிதங்களை எழுதியுள்ளனர். சுமார் 700 பக்கங்கள் கொண்ட இக்கடிதங்களின் மூலம் அப்போது இருந்த மதராசப்பட்டினத்தின் நிலவமைப்பு, உயிரினங்கள், தாவரங்கள், மக்களின் பேச்சுநடை, உடுத்திய உடை, உணவு, பண்பாடு, அப்போது நிலவிய காலநிலை போன்ற பல விவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது. இந்தக் கடிதங்களைப் போலவே குறிப்பிடத்தக்கவை இவர்கள் வரைந்த நீர்வண்ண ஓவியங்களும். எலிசபத் க்வெலிம் 201 ஓவியங்களை வரைந்திருந்தார். இவற்றில் 121 ஓவியங்கள் கனடா நாட்டின் மான்ட்ரியல் நகரத்தில் உள்ள மெக்கில் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளன.
  • இந்த ஓவியங்களில் பெரும்பான்மையானவை அப்போதிருந்த மதராசப்பட்டினப் பகுதிகளில் இருந்த பறவைகளே. அவருடைய கடிதங்களில் இருந்து பறவைகளை வரைய அவர் எடுத்துக்கொண்ட முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. உள்ளூரில் பறவைகளைப் பிடிப்பவர்களிடமிருந்து பறவைகளை உயிருடன் வாங்கி, அவற்றை நிற்க வைத்து ஓவியம் தீட்டி இருக்கிறார். ஓவியம் முடிந்தவுடன் அவற்றைச் சுதந்திரமாகப் பறக்கவும் விட்டிருக்கிறார். ஓவியத்தை முடிக்கும்வரை சில பறவைகளுக்கு வீட்டிலேயே உணவிட்டு வளர்த்து வந்திருக்கிறார். சில வேளைகளில் இறந்த பறவைகளை வைத்தும் வரைந்திருக்கிறார்.

ஓவியங்களின் சிறப்புத்தன்மைகள்

  • இவரது ஓவியங்கள் அழகானவை மட்டுமல்ல அறிவியல் துல்லியம் கொண்டவையும்கூட. பல பறவைகளின் ஓவியங்களில் ஒவ்வோர் இறகுகளும், அவற்றின் நிறமும், வடிவமைப்பும், நாம் இயற்கையில் எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே இருப்பது வியக்கவைக்கிறது. இவரது ஓவியங்கள் பல வகையில் சிறப்புத்தன்மை வாய்ந்தவை. இந்த நீர்வண்ண ஓவியங்கள் யாவும் இயல்பான அளவுடன் (life-size), அதாவது பறவைகளின் உண்மையான உருவத்திற்கு ஏற்ப அமைந்திருக்கின்றன. சுமார் 36X27 அங்குலம் கொண்ட சுவரொட்டி அளவுள்ள ஓவியத்தையும் (வெண்கழுத்து நாரை), சிறிய அளவான 8X9 அங்குலம் (கதிர்க்குருவி) உள்ள ஓவியத்தையும் தீட்டியுள்ளார்.
  • அவர் இருந்த காலகட்டத்தில் உலகில் உள்ள எந்தவோர் ஓவியரும் இந்த அளவுக்குப் பறவைகளை வரைந்ததாக இதுவரை அறியப்படவில்லை. பறவைகளை ஓவியம் தீட்டுபவர்கள் பொதுவாக அந்தப் பறவையை உயிருடன் பார்த்திருக்க மாட்டார்கள். பிடித்துப் பஞ்சடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட மாதிரிகளை வைத்தே வரைந்திருப்பார்கள். அதுவும் உலகின் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு, பல நாள் கழித்து அவர்களை வந்தடையும் பறவைகளின் உடலில் இறகுகள் உதிர்ந்தோ, உடல் பாகங்களின் இயற்கையான நிறங்கள் மங்கியோ, வெளிறியோ போயிருப்பதால், அவற்றின் உண்மை நிறங்களை ஓவியத்தில் கொண்டுவருவது சாத்தியமில்லை. ஆனால், எலிசபத் க்வெலிம் பறவைகளை உயிருடன், அவை பிடிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகிலேயே வைத்து வரைந்ததால், அவரது ஓவியங்கள் மிகவும் துல்லியமாக இருப்பதைக் காணமுடிகிறது.

https://static.hindutamil.in/hindu/uploads/common/2023/12/23/17033081742006.jpg

எலிசபத் க்வெலிம் வரைந்த கருநாரை (Black Stork)

படம்: McGill Archival Collections Catalogue

பறவையியலின் முன்னோடி

  • உலகளவில் ஜான் ஜேம்ஸ் அடுபான் 1827 முதல் 1838 வரையான காலகட்டத்தில் பதிப்பித்த அமெரிக்கப் பறவைகளின் (Birds of America) இயற்கை அளவிலான ஓவியங்களே ஆகச்சிறந்ததாகக் கருதப்பட்டுவந்தன. இந்தியாவைப் பொறுத்தவரை 1830களில் ஜான் கோல்டு (John Gould), ஜான் எட்வர்ட் கிரெ போன்றவர்கள் பதிப்பித்த இந்தியாவில் தென்படும் சில பறவைகளின் ஓவியங்களும், 1840களில் டி.சி.ஜெர்டான் பதிப்பித்த இந்தியப் பறவைகளின் ஓவியங்களும் இந்தியப் பறவையியலுக்குப் பெரும் பங்களிப்பாகக் கருதப்பட்டுவந்தன. இவை எல்லாம் எலிசபத் க்வெலிமின் ஓவியங்கள் பற்றி நமக்குத் தெரியும் வரைதான்.

ஓவியங்களின் கண்டுபிடிப்பு

  • அவருடைய ஓவியங்கள் உலகிற்குத் தெரியவந்ததே 1924இல்தான்! கண் மருத்துவரும், விலங்கியலாளருமான கேசி ஆல்பர்ட் வுட் லண்டனில் உள்ள பழைய நூல்கள் விற்கும் நிலவறையில் தூசி படிந்துகிடந்த ஒரு பெட்டியில் இருந்த இந்த ஓவியங்களை வாங்கி மெக்கில் பல்கலைக்கழக நூலகத்திற்கு அளித்துள்ளார். ஓவியங்கள் படச்சட்டத்தில் பொருத்தப்பட்டிருந்ததாலும், பெட்டியினுள்ளே இருந்ததாலும் நல்ல வேளையாக பத்திரமாக இருந்திருக்கின்றன. அப்போது இந்த ஓவியங்களை வரைந்த எலிசபெத் க்வெலிம் யார் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
  • பின்னாள்களில் பல முயற்சிகளுக்குப் பின், பலரது உதவியுடன் இவர் யார் என்பது தெரிந்திருக்கிறது. இவர் சென்னைக்கும் வந்து எலிசபெத் க்வெலிம் குறித்த தகவல்களை கன்னிமரா முதலான பல நூலகங்களில் தேடி அலைந்திருக்கிறார். எலிசபெத் க்வெலிமின் கல்லறை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் இருப்பதைக் கண்டறிந்து அவர் சேகரித்த தகவல்களை எல்லாம் ஒரு கட்டுரையாக 1925இல் வெளியிட்டார். எலிசபெத் க்வெலிம் தமது 44ஆம் வயதிலேயே இறந்துவிட்டதாக அறியப்படுகிறது. இறந்ததற்கான காரணங்கள் தெரியவில்லை. இவரது படைப்புகள் முறையாகப் பதிப்பிக்கப்படாத காரணத்தால், இவருக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போனது கெடுவாய்ப்பு. இந்தியப் பறவையியலுக்கு முக்கியமான பங்களிப்பையும், மகத்தான படைப்புகளையும் தந்த எலிசபெத் க்வெலிம் எப்படி இருப்பார் என்றுகூட நமக்குத் தெரியாது. அவரது ஓவியங்களே நமக்கு எஞ்சியுள்ள அவரது ஒரே அடையாளம்!
  • எலிசபத் க்வெலிம், அவரது இளைய சகோதரி மேரி சைமண்ட்ஸ் ஆகிய இருவரும் கைப்பட எழுதிய கடிதங்கள் யாவும் பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ளன. இவற்றை பார்த்து எழுதப்பட்ட படிகளையும் (transcribed copy), ஓவியங்களையும், இவர்களின் கடிதங்களின் வழியே அறிந்துகொண்ட தகவல்கள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், The Gwillim Project எனும் திட்டத்தின் வலைதளத்தில் காணலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 12– 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்