- இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் உச்சநீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் அமர்வு விசாரித்த "கேசவானந்த பாரதி - எதிர் - கேரள மாநில அரசு' வழக்கு 1973-இல் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
- அந்த வழக்கில் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை அமைப்பை (பேஸிக் ஸ்ட்ரக்சர்) மாற்ற முடியாது என்று தெள்ளத் தெளிவான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
- கூட்டாட்சி, அடிப்படை உரிமைகள், மதச் சார்பின்மை, அதிகாரப் பங்கீடுகள், நாடாளுமன்றம், ஆட்சி நிர்வாகம், நீதிமன்றம் என்ற வெவ்வேறு அதிகாரங்கள் ஒன்றுக்கொன்று தலையிடக்கூடாது என்கிற அதிகாரப் பகிர்வு (செப்பரேஷன் ஆஃப் பவர்) உள்ளிட்ட முக்கிய அம்சங்களில், அரசியல் சாசனத்தை எந்த சூழ்நிலையிலும் திருத்தியமைக்க முடியாது.
- இவையெல்லாம் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கூறுகள் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவுபடுத்தியது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி தலைமையிலான பதிமூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு.
- இந்த பதிமூன்று நீதிபதிகளில் 6 பேர், 7 பேர் என்றுஆதரவாகவும் எதிராகவும் தீர்ப்பு எழுதினார்கள். அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான இந்தத் தீர்ப்புக்குக் காரணமான ஏழு நீதிபதிகளில், மூத்த நீதிபதிகளான ஜே.எம். ஷெலட், ஏ.என். குரோவர், கே.எஸ். ஹெக்டே ஆகிய மூன்று நீதிபதிகளும் இந்தியத் தலைமை நீதிபதி பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பட்டியலில் இருந்து அன்றைய மத்திய அரசால் நீக்கப்பட்ட அநீதி நடந்தது. அந்த மூன்று நீதிபதிகளும் அதைக் கண்டித்து அப்போது பதவி விலகினார்கள்.
42-ஆவது திருத்த சட்டம்
- 1973 ஏப்ரல் 24-ஆம் தேதி பூஜ்யஸ்ரீ கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பை வழங்கியதிலிருந்து நீதிமன்றத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் எதிர்வினையாற்றத் தயாரானார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.
- அலகாபாத் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக ராஜ்நாராயண் தொடுத்த தேர்தல் வழக்கில் தனக்கு எதிராகத் தீர்ப்பு கிடைத்தபோது அவரது ஆத்திரம் மேலும் அதிகரித்தது. நீதித்துறை மீது கடுமையான எதிர்ப்பு நிலையை எடுத்தார் இந்திரா காந்தி.
- 1975 ஜூன் 25-ஆம் நாள், இந்திரா அவசர நிலையை அறிவித்தார். சித்தார்த்த சங்கர் ரே போன்றவர்களின் ஆலோசனையின் பேரில் சில கடுமையான நடவடிக்கைகளையும் இந்திரா காந்தி மேற்கொண்டார்.
- நீதிமன்ற அதிகாரத்தை மட்டுப்படுத்தவும், பிரதமர் போன்றோர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்கிற விதிவிலக்கை ஏற்படுத்துவதற்காக அரசியல் சாசனத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வரவும் முன்னாள் மத்திய அமைச்சர் சுவரண் சிங் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் இந்திரா காந்தி.
- அப்போது சட்ட அமைச்சராக இருந்த எச்.ஆர். கோகலே, சுவரண் சிங் குழுவின் பரிந்துரையின் பேரில் 42-ஆவது சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார்.
- 42-ஆவது திருத்தம் 1976 டிசம்பர் 18-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அவசர நிலை காலத்தில் கொண்டுவரப்பட்டது. பிரதமர் இந்திரா காந்தி இதற்காக தனிக் கவனம் செலுத்தினார். இந்த சாசனத் திருத்தம் அப்போது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.
- நாடாளுமன்றம் நினைத்தால் எந்த சட்டமும் கொண்டு வரலாம்; ஆனால், இந்திய அரசியல் சாசனம் வழங்கிய சில அடிப்படை உரிமைகளை நாடாளுமன்றத்தால்கூட மாற்றிவிட முடியாது.
- அப்படி மாற்றிவிட நினைத்து, சட்டம் கொண்டுவரப்பட்டால், அதை சுயமாக ஏற்று விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு.
- 42-ஆவது திருத்த சட்டம் அதை மாற்ற முற்பட்டது. அதன்படி, நாடாளுமன்றத்துக்கே சர்வ அதிகாரமும் உண்டு என மாற்றம் வந்தது.
- அதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது என்பது மட்டுமல்ல, நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தை எந்த நீதிமன்றமும் கேள்வி கேட்கவும் முடியாது.
- அப்படிக் கொண்டு வரப்பட்ட 42-ஆவது திருத்தம், 1977-இல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது திரும்பப் பெறப்பட்டது. அப்படி ரத்து செய்யப்பட்ட சட்டங்கள்தான், 43, 44-வது திருத்த சட்டங்கள்.
- கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பு, ஜனநாயகத்தையும், நாட்டின் ஆட்சி அதிகாரப் பிரிவுகளையும் பிற்காலத்தில் ஒழுங்குபடுத்த உச்சநீதிமன்றம் வழங்கிய அடிப்படை நெறிமுறைகள் அடங்கிய தீர்ப்பாகும்.
- ஏற்கெனவே 1967-இல் "கோலக்நாத் - எதிர் - ஸ்டேட் ஆப் பஞ்சாப்' என்ற வழக்கில் அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைத் திருத்த முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையும் அன்றைக்கு ஆட்சியில் இருந்த பிரதமர் இந்திரா காந்தி விரும்பவில்லை.
கேசவானந்த பாரதி - எதிர் - கேரள மாநில அரசு
- பூஜ்யஸ்ரீ கேசவானந்த பாரதி சார்பில் 1970 மார்ச் மாதம் 21-ஆம் தேதி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- 1972 அக்டோபர் 31-ஆம் தேதி தொடங்கிய வாதம், 1973 மார்ச் மாதம் 23-ஆம் தேதி வரை நடந்தது. தலைமை நீதிபதி எஸ்.எம். சிக்ரி, ஜெ.எம். ஷெலாட், கே.எஸ். ஹெக்டே, ஏ.என். குரோவர், ஏ.என். ரே., பி.ஜெகன்மோகன் ரெட்டி, டி.ஜி. பலேகர், ஹெச்.ஆர். கன்னா, கே.கே. மேத்யூ, எம்.ஹெச். பெக், எஸ்.என். துவிவேதி, ஏ.கே. முகர்ஜி, ஒய்.வி. சந்திரசூட் ஆகிய 13 உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.
- மொத்தம் 68 நாள்கள் வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. வேறு எந்தவொரு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் இத்தனை நாள்கள் விசாரிக்கப்பட்டதில்லை.
- இந்த வழக்கை விசாரிக்கும்போது, நீதிபதி எம்.ஹெச். பெக், உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்று விட்டார்.
- அவர் பிற்காலத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் நாநி பால்கிவாலாவோடு, ரவீந்திர நாராயணன், டி.ஆர். அந்தி அர்ஜுனா, ஜெ.பி. டடாசான்ஜி ஆகியோரும் ஆஜரானார்கள்.
- கேரள அரசு சார்பில், மூத்த வழக்குரைஞர் எச்.எம். சீர்வை, மத்திய அரசு சார்பில் நிரேன் தே (அட்டர்னி ஜெனரல்) ஆகியோர் ஆஜரானார்கள்.
- கேரள அரசு நிலச் சீர்திருத்தச் சட்டங்களில் சில திருத்தங்களைச் செய்தது. துறவியான கேசவானந்த பாரதி தன்னுடைய மடத்தின் சொத்துகளான விவசாய நிலங்களை கையகப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பால் மடத்தின் உரிமைகள் பறிபோகும் என்றுதான் கேரள அரசை எதிர்த்து இந்த வழக்கைத் தாக்கல் செய்தார்.
- கேசவானந்த பாரதி சார்பில் மூத்த வழக்குரைஞர் நாநி பால்கிவாலா வாதாடினார். வாதாடும்போதே, நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளை மையமாகக் கொண்டு விரிவான வாதங்களும், அதன் நீட்சியாக அன்றைய மத்திய அரசு ஜனநாயகத்தை எவ்வளவு பாழ்படுத்துகிறது என்பதையும் விரிவாகத் தளம் அமைத்து அதன் அடிப்படையில் தன்னுடைய வாதங்களை வைத்தார்.
- நாநி பால்கிவாலா எழுதிய "கோர்ட் ரூம் ஜீனியஸ்' என்ற நூலில் சோலி சொராப்ஜியும் அரவிந்த் தத்தாவும் நாநி பால்கிவாலா, கேசவானந்த பாரதியின் வழக்கை, ஒரு வழக்கென்று எடுத்துக் கொள்ளாமல் நாட்டின் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்ற தவ நோக்கத்தில் வாதாடினார் என்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
- இந்த வழக்கில் 708 பக்கங்களில் தீர்ப்பு பெற்ற கேசவானந்த பாரதி, கேரளத்தின் வடகோடியில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள இடநீர் மடத்தின் தலைமைத் துறவி.
- இந்த மடம் சங்கராச்சாரியருடைய வழியில் பயணிக்கின்ற மடமாகும். ஆதிசங்கரரின் நான்கு சீடர்களில் ஒருவரான தோடகாச்சாரியரின் வழிவந்தவர் இவர். மலையாளம், கன்னடம் இரண்டும் இந்த மடத்தின் மொழிகளாகும்.
- கேசவானந்த பாரதி 1961-இல் இந்த மடத்தின் பீடாதிபதியானார். 80-ஆவது வயதை நெருங்குகின்ற நேரத்தில் மங்களூர் மருத்துவமனையில் 2020 செப்டம்பர் ஆறாம் தேதி மறைந்தார்.
அருட்கொடையான தீர்ப்புகள்
- கேசவானந்த பாரதி உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கானது நீதிமன்றங்களின் விசாரணையின்போது மட்டும் மேற்கோள் காட்டப்படுவதில்லை.
- ஜனநாயகம், அரசியல், சட்டம், ஆட்சி முறைகள் பற்றி விவாதிக்கும்போதெல்லாம் கேசவானந்த பாரதியின் வழக்கு மையப்படுத்தப்படுகின்றது.
- இந்த வழக்கைப்போல ஏ.கே. கோபாலன் வழக்கு, மேனகா காந்தி வழக்கு, மினர்வா மில் வழக்கு, மாதவ ராவ் சிந்தியா வழக்கு, ராஜ்நாராயண் வழக்கு, ஷாபானு வழக்கு, ஒல்கா டெலிஸ் வழக்கு, போபால் விஷ வாயு வழக்கு, நீதிபதிகள் மாற்றம் குறித்த வழக்கு, எஸ்.ஆர். பொம்மை வழக்கு போன்ற பல வழக்குகளின் தீர்ப்புகள் வெறும் தீர்ப்புகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தையும் நாட்டையும் பிழையில்லாமல் நெறிமுறைகளோடு சட்டத்தின் ஆட்சியையும் மக்கள் நல அரசையும் பேணிக்காக்க இந்திய மக்களுக்குக் கிடைத்த அருட்கொடையான பிரகடனத் தீர்ப்புகளாகும் என்று கூறுவது மிகையில்லை.
- பூஜ்யஸ்ரீ கேசவானந்த பாரதியின் வழக்கில் அவருக்கான சரியான பரிகாரம் கிடைக்கவில்லை என்பது உண்மைதான்.
- என்றாலும், நாட்டுக்குப் பரிகாரம் கிடைத்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள ஒவ்வொரு வரியும் இந்தியாவின் மக்களாட்சியைக் காக்கக் கூடிய வைர வரியாகும்!
நன்றி: தினமணி (17-09-2020)