TNPSC Thervupettagam

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா

April 18 , 2024 265 days 203 0
  • எதிர்நீச்சல் அடித்து சாதனை படைப்பவர்கள் மாமனிதர்கள். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் துணிச்சல், உழைப்பு, தியாகம் என்ற மூன்றும் கட்டாயம் இருக்கும்.
  • கால வெள்ளம் இழுத்துச் செல்லும் வழிகளில் எல்லாம் போராடிச் சென்று முழுகாமல் தப்பிக்கிறவர்கள் சாமானியர்கள். அந்த வெள்ளத்திலேயே எதிர்நீச்சல் அடித்து சாதனை படைப்பவர்கள் மாமனிதர்கள். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் துணிச்சல், உழைப்பு, தியாகம் என்ற மூன்றும் அவர்களுடைய குணாம்சங்களாகக் கட்டாயம் இருக்கும். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுமத்தின் நிறுவனர் - தலைவரான ராம்நாத் கோயங்கா அத்தகைய மாமனிதர்.
  • நாட்டின் முதலாவது சுதந்திரப் போரில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போரிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களில் ஒருவராகவும், இந்திரா காந்தி காலத்தில் கொண்டுவரப்பட்ட நெருக்கடிநிலைக்கு எதிராக நடந்த இரண்டாவது சுதந்திரப் போரில் பத்திரிகைத் துறைக்கே ஒரு வழிகாட்டியாகவும், மூத்த தளபதியாகவும் திகழ்ந்தவர் ராம்நாத் கோயங்கா.
  • பிகார் மாநிலத்தின் வட பகுதியில் உள்ள தர்பங்காவில் 1904-இல் பிறந்த கோயங்கா, படிப்பை முடித்ததும் மாதச் சம்பள வேலை கிடைக்கும் என்று எவர் கையையும் எதிர்பாராமல் வியாபாரத்தில் ஈடுபடத் தீர்மானித்தார். வியாபாரத்தின் அடிப்படைகளையும் நெளிவு, சுளிவுகளையும் தெரிந்துகொள்ள கொல்கத்தா நகருக்குச் சென்றார். அங்கு சிறிது காலம் பயிற்சி எடுத்த பிறகு, மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் வர்த்தகப் பிரதிநிதியாகச் சென்னைக்கு வந்தார்.
  • சென்னைக்கு வந்தவர் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு சுக போகமாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், நாட்டில் எல்லோர் மனதிலும் வீசிக்கொண்டிருந்த சுதந்திர வேட்கை அவரையும் விட்டு வைக்கவில்லை. சென்னை மாநகரின் மேல்தட்டு மக்களிலிருந்து சாமானியர் வரை அனைவரிடமும் நன்றாகக் கலந்து பழகினார். அதன் விளைவாக, சமூகத்தின் கட்டமைப்பையும் அதன் பிரச்னைகளையும் தேவைகளையும் நன்கு தெரிந்துகொண்டார். சென்னைக்கு வந்த சில மாதங்களிலேயே அதன் சுக துக்கங்களில் முழு ஈடுபாடுகாட்ட ஆரம்பித்த அந்த இளைஞரின் துடிப்பால் கவரப்பட்ட சென்னை அரசு நிர்வாகிகளால் சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அரசாங்கம் நியமித்த பதவியை ஏற்றுக்கொண்டாலும், அதை மக்களுடைய நன்மைக்காகவே முழுக்க முழுக்கப் பயன்படுத்தினார் கோயங்கா.
  • பதவி கொடுத்துவிட்டதே அரசாங்கம் என்று அதற்குத் துதி பாடிக்கொண்டிருக்காமல், அரசின் தவறுகளையும் குறைகளையும் தயங்காமல் சுட்டிக்காட்டி அவையில் சண்டமாருதம் செய்தார். இதனால் அரசு மட்டுமல்ல, மேல்தட்டு மக்களும் அவரைக் கூர்ந்து நோக்க ஆரம்பித்தனர். தேசிய இயக்கத்தார் அவரை சுவீகரித்துக் கொண்டனர்.
  • மேலவை உறுப்பினர்கள் சிலர் சேர்ந்து தொடங்கிய "இன்டிபென்டன்ட் பார்ட்டி' என்ற கதம்பக் குழுவுக்கு அவரையே செயலராக நியமித்தனர். தத்தளிக்கும் பல நிறுவனங்களைக் கைதூக்கிவிடும் காவலராக அவர் உருவெடுத்தார்.
  • நிதி உதவியும் இதர ஆலோசனைகளும் தேவைப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகளுக்குத் தன்னுடைய வியாபாரத் தொடர்புகளைப் பயன்படுத்தினார். தேசிய எழுச்சி கொண்ட பத்திரிகைகளுக்கு உதவுவதைத் தன்னுடைய கடமையாகவே கருதினார்.
  • அந்த வகையில்தான் டி.பிரகாசத்தின் ஸ்வராஜ்யாவுக்கும் எஸ்.சதானந்தின் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கும் உதவிகளைச் செய்து வந்தார்.
  • 1936-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி, "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்', "தினமணி' ஆகிய நாளேடுகளின் பெரும்பான்மைப் பங்குதாரராகவும் உரிமையாளராகவும் ஆனார் ராம்நாத் கோயங்கா.
  • அரசியல் கட்சிகள், அதிகார மையங்கள், வியாபாரக் குழுமங்கள், நண்பர்கள் வட்டம் என்று எதன் பிடியிலும் சிக்காமல் சுதந்திரமாகப் பத்திரிகை வெளிவர வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
  • இந்தியாவின் நலன் தான் தனது பத்திரிகையின் லட்சியம் என்பதையும் அவர் அப்போதே தீர்மானித்துவிட்டார்.
  • அரசியல் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அறச்சிந்தனையாளர்கள், சமூக சேவகர்கள், மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் என்று அனைத்துத் தரப்பினரும் அவருக்கு வேண்டியவர்களாக இருந்தனர்.
  • எனவே, அனைத்துத் தரப்பினரையும் இணைக்கும் இணைப்புக் கயிறாக அவரால் செயல்பட முடிந்தது.
  • மற்றவர்களுடனான உறவும், நட்பும் எப்படி இருந்தாலும் பத்திரிகையைப் பொறுத்தவரை அதற்கு எது நல்லது என்பதைத் தீர்மானிப்பதில் அவர் சுதந்திரமாகச் செயல்பட்டார். அதில் தலையிடும் உரிமையையோ, சலுகையையோ யாருக்கும் அவர் அளிக்கவில்லை.
  • இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகிய பத்திரிகைகளின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கவும் செயல்படவும் அவர் ஒருவர் மட்டும்தான் இருந்தார் என்பது பெரிய குறைதான் என்றாலும், அப்படியிருந்த ஒரு தனிமனிதர், ஏராளமான மனிதர்கள் ஒரு குழுவாக இருந்தாலும் வெளிக்காட்ட முடியாத ஆற்றலும், வேகமும் கொண்டவராக இருந்ததால் பத்திரிக்கைக்கு அதுவே மிகப்பெரிய பலமாக அமைந்துவிட்டது.
  • பத்திரிகைக்கு நல்ல ஆசிரியர்களை நியமித்தார். அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார். அரசின் விளம்பரங்களுக்காக மட்டுமல்ல பத்திரிகை என்பதைச் செயலில் காட்டினார்.
  • அரசு விளம்பரம் தராவிட்டாலும் மக்களின் பிரச்னைகளை எடுத்து எழுதினால் பத்திரிகைக்கு வாசகர்களின் ஆதரவும், விளம்பரதாரர்களின் ஆதரவும் இருந்தால் போதும் என்பதைச் செயலில் நிரூபித்தார்.
  • தமிழில் "தினமணி'க்கு இருந்த வரவேற்பைப் பார்த்துப் பிரமித்த கோயங்கா, பிற இந்திய மொழிகளிலும் பத்திரிகை தொடங்க விருப்பம் கொண்டு தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார்.
  • அதிகாரமும், பதவியும் உள்ளவர்கள் எத்தனைதான் அச்சுறுத்தினாலும், தான் நினைப்பது சரியென்று பட்டுவிட்டால் அதைச் செய்து முடிக்காமல் அவர் இருந்ததில்லை.
  • அதேசமயம், நண்பர்களிடத்தில் அன்பும், மதிப்பும் கொண்டு அவர்களுடைய பெரிய கோரிக்கைகள் முதல் சிறிய ஆசைகள் வரை அனைத்தையும் முடிந்த வரை நிறைவேற்றியவர் கோயங்கா.
  • பத்திரிகை நடத்துவது லாபத்துக்காக மட்டுமே என்று எந்த நாளும் நினைத்தவர் அல்லர்.
  • அதனாலேயே அவர் இன்னமும் இந்தியப் பத்திரிகை அதிபர்களுக்குத் துருவ நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
  • கோயங்காவை அவருடைய குடும்பத்தினரும் பத்திரிகை நிறுவன ஊழியர்களுமே முழுதாகப் புரிந்துகொண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான். அவருடைய ஆளுமையின் முழுப் பரிமாணமும் உணரப்பட இன்னும் சில காலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது.
  • அவருடைய பிறந்த நாளையொட்டி அவரை நினைவுகூரும் இந்த வேளையில், அஞ்சா நெஞ்சினரான கோயங்காவுக்கு நம்முடைய இதய அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வோம்.

நன்றி: தினமணி (18 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்