TNPSC Thervupettagam

வரலாற்றைப் பாதுகாக்கும் ஏலகிரி மலை

May 2 , 2024 254 days 223 0
  • வட தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு கூறாக விளங்குவது ஏலகிரி மலை. தமிழ்நாட்டின் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் தவறவிடக் கூடாத அம்சங்கள் நிறைந்தது இந்த ஏலகிரி.
  • ஏலமலை, ஏலக்குன்று என்று வழக்கில் இருந்த இம்மலை, ஏலகிரியாக மாறியுள்ளது. ‘கிரி’ என்பது வடமொழியில் மலையைக் குறிக்கும். இன்றும் மக்கள் வழக்கில் ‘ஏலகிரி மலை’ என்றே வழங்குகின்றனர். ஏலகிரி மலைக்கு மிக அருகாமையில் இருக்கும் சவ்வாது மலை சங்க காலத்தில் நவிரமலை என வழங்கப்பட்டது.
  • சவ்வாது மலை அளவுக்கு அதிகமான வரலாற்றுப் பதிவுகள் ஏலகிரி மலையில் இல்லை என்றாலும், கணிசமான அளவு வரலாற்று ஆவணங்கள் இங்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றன. இக்குறிப்புகள் தமிழ்நாட்டின் வரலாற்றை மேலும் தெளிவுப்படுத்தத் தேவையான ஆவணங்களாக உள்ளன.

கற்கோடாரிகள், கல்வெட்டுகள்:

  • ஏலகிரி மலையில் ஏராளமான கற்கோடாரிகள் உள்ளன. பிள்ளையாரப்பன் என்ற பெயரில் வழங்கப்படும் இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்தவையாகும். புதிய கற்காலக் கருவிகள் ஏலகிரி மலையில் அத்தனாவூர், நிலாவூர் ஆகிய மலை ஊர்களில் காணப்படுகின்றன.
  • ஏலகிரி மலையின் வரலாற்றை முழுவதும் அறிய கல்வெட்டுகளும், நடுகற்களும், பாறை உரல் கல்வெட்டுகளும் தக்கச் சான்றுகளாய் உள்ளன. எழுத்தில்லா நடுகற்கள் ஏராளமாக உள்ளன. எழுத்து உள்ள நடுகற்கள் பல படிக்க இயலாத நிலையில் எழுத்துக்கள் பொறிந்தும், தேய்ந்தும் காணப்படுகின்றன. பல்லவர் கால நடுகற்கள் 3 ஒரே இடத்தில் நிலாவூரில் உள்ள கதவ நாச்சியம்மன் கோயிலில் ‘வெளிச்சாமிகள்’ என்ற பெயரில் வணங்கப்படுகின்றன. இந்நடுகல் சிற்ப வடிவம், எழுத்து வடிவங்கள் பல்லவர் காலத்தவை.
  • மங்களம் கிராமத்தில் பள்ளிக்கூடத்து ராமசாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட பொ.ஆ. (கி.பி) 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறப்பு வாய்ந்த நடுகல் கல்வெட்டொன்று திருப்பத்தூர் பெயர் கொண்ட பல்லவர் கால நடுகல் திருப்பத்தூர், ஏலகிரி மலையிலுள்ள தாயலூர், இரண்டு ஊர்களும் அமைந்திருந்த நாடு, அந்நாட்டை ஆட்சி புரிந்த மன்னன் எனப் பல்வேறு தகவல்களைக் கொண்டிருக்கிறது. 1,300 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட திருப்பத்தூர், தாயலூர் என்னும் இரண்டு ஊர்களும் எந்த மாற்றமும் இன்றி அதே பெயரில் இன்றும் வழங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மழப்பையனின் வீர மரணம்:

  • திருப்பத்தூர் மீது பகைவர்கள் முற்றுகையிட்டபோது, ஏலகிரி மலையில் உள்ள தாயலூரைச் சேர்ந்த ‘மழப்பையன்’ என்ற வீரன் பகைவர்களை எதிர்த்துப் போரிட்டு மாண்டான் என்று இக்கல்வெட்டு உரைக்கிறது. மழப்பையனின் (மழ - இளமை) உருவத்தை நடுகல்லில் செதுக்கியுள்ளனர்.
  • இவ்வீரனின் மார்பு, தொடை பகுதிகளில் அம்புகள் பாய்ந்துள்ளதை இந்நடுகல் சிற்பம் நேர்த்தியாகக் காட்டுகிறது. இவ்வீரனின் இடக்கை ஓரத்தில் காணப்படும் சேனத்தோடு கூடிய குதிரை, இவ்வீரனின் வாகனமாக இருக்க வேண்டும். இவ்வரலாற்றுக் குறிப்பின் மூலம் திருப்பத்தூர் என்னும் ஊர் பல்லவர் காலத்திலேயே சிறப்புடன் விளங்கியதை அறியலாம்.
  • ஏராளமான வரலாற்றுத் தடயங்களைத் தாங்கி நிற்கும் ஏலகிரி மலை வேகமாக வளர்ச்சி பெற்று வருவதால் பாரம்பரியமான பண்பாட்டு அடையாளங்கள் சீரழிந்து வருகின்றன. சுற்றுலாத் தலமாக இம்மலை விளங்குவதால் மலைவாழ் மக்களின் விளைநிலங்கள், தங்கும் விடுதிகளாகவும் சொகுசு பங்களாக்களாகவும் மாறத் தொடங்கியுள்ளன.
  • வளர்ச்சி தவிர்க்க முடியாததுதான் என்றாலும், வரலாற்றுத் தடங்களை மறைத்துவிடும் அளவில் அது அமைந்துவிடக் கூடாது. ஏலகிரி மலை பாதுகாக்கப்பட வேண்டும்; அதன் மக்களும்தான்!

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்