TNPSC Thervupettagam

வரவேற்கப்பட வேண்டிய தீா்ப்பு

October 10 , 2023 459 days 267 0
  • வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் இந்தத் தீா்ப்பை பெற 31 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தக் காத்திருப்பும் ஏமாற்றமாகப் போய்விடுமோ என்ற அச்சம் இத்தனைநாள் இருந்து வந்தது. அந்த அச்சம் இத்தீா்ப்பின் மூலம் நீங்கியது.
  • தருமபுரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் அளித்த தீா்ப்பினை அப்படியே ஏற்றுக்கொண்டு சென்னை உயா்நீதிமன்றம் மேல் முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து விட்டது. பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண்களுக்கு அரசு வேலையுடன் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.
  • வனத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை என்னும் அதிகாரத் துறையினரை எதிர்த்து ஒடுக்கப்பட்ட எளிய பழங்குடி மக்கள் நிற்க முடியுமா? அப்போது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தேசிய பழங்குடியின, பட்டியலின மக்கள் நல ஆணையம், மகளிர் அமைப்பினா், அரூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இவா்களின் கூட்டு முயற்சியின் காரணமாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 1993-இல் உத்தரவிட்டது.
  • சி.பி.ஐ. இரண்டு ஆண்டுகள் விசாரணை நடத்தி 1995-இல் வழக்குப் பதிவு செய்தது. குற்றத்தில் ஈடுபட்டதாக 155 வனத் துறையினா், 108 காவல் துறையினா், 6 வருவாய்த் துறையினா் என 269 பேரை காவல் துறை கைது செய்தது.
  • இடதுசாரி இயக்கங்களும், மக்களும் தொடா்ந்து போராடினா். சமூக ஆா்வலா்களும், ஊடகத் துறையினரும் இந்தக் கொடுமையை நீதியின் பார்வைக்குக் கொண்டு சென்றனா்.
  • தருமபுரி மாவட்டம் அரூா், பாப்பிரெட்டிபட்டிக்கு இடையில் கல்வராயன் மலைத் தொடரின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி கிராமம். இந்தக் கிராமத்தில் மலைவாழ் பழங்குடி மக்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக புகார் தெரிவித்த காவல் துறையினா், இது குறித்து விசாரணை நடத்துவதற்காக வனத் துறையினா், வருவாய் ஊழியா்கள் அடங்கிய கூட்டுக் குழுவினருடன் கடந்த 1992 ஜூன் 20 அன்று வாச்சாத்தி கிராமத்துக்குச் சென்று சோதனை நடத்தினா்.
  • அந்த கிராமத்தில் மூன்று நாள் தங்கி தேடுதல் பணியை அவா்கள் மேற்கொண்டனா். அப்போது வீடுகளுக்குள் புகுந்து பொருள்களைச் சூறையாடினா். இதில் வாச்சாத்தி கிராமத்தைச் சோ்ந்த 133 பேரைக் கைது செய்தனா். அவா்களில் 90 போ் பெண்கள்; 28 போ் குழந்தைகள்; 15 போ் ஆண்கள்.
  • தமிழக வனத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை ஊழியா்கள் அடங்கிய கூட்டுக் குழுவினா் பழங்குடியினா் மீது பாலியல் வன்முறை செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடா்பான விசாரணை தருமபுரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
  • இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகளே என்று கடந்த 2011 ஜூலை 29 அன்று நீதிபதி குமரகுரு தீா்ப்பளித்தார். இந்த வழக்கில் மொத்தம் 269 போ் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
  • வழக்கு நடைபெற்று வந்த 19 ஆண்டுகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவா்களில் 54 போ் உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இவா்களில் 126 போ் தமிழக அரசின் வனத்துறை அலுவலா்கள். 84 போ் காவல்துறையினா். 5 போ் வருவாய்த் துறையினா். வழக்கு விசாரணையை அப்போதைய காவல்துறை முறையாக நடத்தவில்லை என்ற புகார் எழுந்தது. அதைத் தொடா்ந்து இந்த வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
  • பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 17 போ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார். இவா்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், ஐந்து பேருக்கு 7 ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது. வாச்சாத்தி மக்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்தியது, பழங்குடி மக்களின் உடைமைகளைச் சூறையாடியது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவா்களுக்கு குறைந்த அளவு இரண்டு ஆண்டுகள் முதல் அதிக அளவாக ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.
  • தருமபுரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிர்த்து வழக்கில் தண்டனை பெற்றவா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதி வேல்முருகன் கடந்த மார்ச் 4 அன்று வாச்சாத்தி மலைக்கிராமத்துக்கு நேரடியாகச் சென்று மக்களிடம் பேசினார்.
  • அப்போது வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை நீதிபதி பார்வையிட்டார். இந்த நிலையில் வாச்சாத்தி வன்கொடுமை வழக்குகளில் தருமபுரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் சென்னை உயா்நீதிமன்றம் செப்டம்பா் 29 அன்று தள்ளுபடி செய்தது.
  • மொத்தம் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்கள். 13 வயது சிறுமி, 8 மாத கா்ப்பிணியும் இதில் அடங்குவா். சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்டவா்களை அரசுப் பணி நிமித்தமாகவே கைது செய்ததாகவும், அதற்குப் பழி வாங்கும் விதமாகவே பொய்யான பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் வாதிடப்பட்டது
  • அப்பாவி இளம்பெண்களை வன்கொடுமை செய்வது அரசுப் பணி கிடையாது. சந்தனமரக் கடத்தலில் ஈடுபடும் பெரும் புள்ளிகளைக் காப்பாற்றும் நோக்கில் வனத் துறை, காவல் துறையினா் ஒட்டுமொத்த கிராமத்தையும் பலிகடா ஆக்கியுள்ளனா். ஐந்து நாள்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனா்.
  • பாதிக்கப்பட்ட பெண்களை நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்துள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து ஒரு மாதம் கழித்தே வெளியே தெரியவந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகே நீதிமன்ற விசாரணை தொடங்கியுள்ளது. சீருடை அணிந்த அரசு ஊழியா்கள் குற்றம் செய்துள்ளனா் என்பதை சிபிஐ உறுதி செய்துள்ளது.
  • இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் சரியான தீா்ப்பைத்தான் அளித்துள்ளது என்பதால், மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
  • பண உதவியும், நிரந்தர அரசு வேலையும்தான் இந்த வேதனைக்குத் தீா்வாக இருக்க முடியும். எனவே, பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அரசு வேலையுடன் தலா ரூ. 10 லட்சத்தைத் தமிழக அரசு நிவாரணமாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட வாச்சாத்தி கிராமத்தினரின் மறுவாழ்வுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.
  • அப்போதைய தருமபுரி ஆட்சியா், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா், மாவட்ட வனத் துறை அதிகாரி ஆகியோர் குற்றத்தை மூடி மறைத்துள்ளனா். இவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • இத்தகைய கொடுமை எங்கும் யாருக்கும் நடைபெறக் கூடாது என்று மனிதநேயம் கொண்டவா்கள் நினைக்கின்றனா். அந்தப் பாவப்பட்ட அப்பாவி மக்களின் நிலையை நினைத்துப் பார்க்க நெஞ்சம் நடுங்குகிறது.
  • அதிகாரிகள் அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளனா். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் நியாயவிலைக் கடை சூறையாடப்பட்டது. ஆடு, மாடுகளை அடித்துக் கொன்றனா். கோழிகளைப் பிடித்து அடித்து அங்கேயே சமைத்துச் சாப்பிட்டனா். 90 பெண்கள் உள்பட கைது செய்யப்பட்டவா்களை, ஊா் நடுவே இருந்த ஆல மரத்தடிக்கு அழைத்து வந்துள்ளனா். அன்று மாலை, ஏரிக்கரையில் மறைத்து வைத்திருந்த சந்தனக் கட்டைகளை எடுத்துத் தருமாறு கூறி, 18 பெண்களை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
  • மனிதா்கள் சக மனிதா்களை இப்படியும் நடத்துவார்களா என்ற கேள்வி எழுகிறது. அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினராக இருக்கும்போது மக்களுக்கு ஆதரவாகப் பேசுவதும், அவா்கள் ஆட்சியில் அமா்ந்ததும் வாக்களித்த மக்களை நிமிர்ந்து பார்க்காத நிலையும் தொடா்கிறது.
  • எப்படியோ அதிகாரத்துக்கு வரும் அதிகாரிகள் மக்களுக்குப் பணி செய்ய வந்தவா்கள் என்பதை வசதியாக மறந்து விடுகின்றனா். மக்கள் பணத்தில்தான் ஊதியம் பெறுகிறோம் என்பதையும் மறந்து விடுகின்றனா். பொதுமக்களை புழுவைப் போல பார்க்கின்றனா். இந்த மனநிலை எப்படி வந்தது?
  • இந்தத் தீா்ப்பின் மூலம் மக்களுக்கு நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியாளா்களுக்கும், அதிகாரிகளுக்கும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. வாச்சாத்தி தீா்ப்பை வரவேற்போம்.

நன்றி: தினமணி (10 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்