அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்துவதற்கான மசோதா, அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. திருத்தப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரிவிதிப்புச் சட்டம் 1974இன் படி, விரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
11 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துவிதமான வாகனங்களுக்கும் ஒரே நேரத்தில் தற்போது வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களின் விலை கணிசமாக உயரும் என்றும், மற்ற மாநிலங்களைவிட இந்த வரி தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதாகவும் வாகன விற்பனைத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கு இது கூடுதல் சுமையாகவே அமையும் என்றும் விமர்சனம் எழுந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் கடைசியாக 2008இல் இருசக்கர வாகனங்களுக்கும் 2010இல் நான்கு சக்கர வாகனங்களுக்கும் 2012இல் சுற்றுலா வாகனங்களுக்கும் வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டன. முன்பு இருசக்கர வாகனங்களுக்கு வாழ்நாள் வரியாக 8% பெறப்பட்டு வந்தது. தற்போது அது இரண்டு அடுக்கு முறையாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1 லட்சத்துக்குள் விற்கப்படும் இருசக்கர வாகனங்களுக்கு இனி 10% வரியும், ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்கப்படும் இருசக்கர வாகனங்களுக்கு 12% வரியும் விதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு இதுவரை இரண்டு அடுக்கு முறையில் மட்டுமே வரி வசூலிக்கப்பட்டுவந்தது. அது, தற்போது நான்கு அடுக்கு முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.5 லட்சத்துக்குக் கீழ் விலை உள்ள கார்களுக்கு 12%, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13%, ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரையிலான கார்களுக்கு 18%, ரூ.20 லட்சத்துக்கு மேல் உள்ள கார்களுக்கு 20% வரியும் இனி வசூலிக்கப்படும்.
வணிகப் பயன்பாடு வாகனங்கள் உள்ளிட்ட இதர வாகனங்களுக்கும் இந்த வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சாலை வரி என்றழைக்கப்படும் வாழ்நாள் வரி மட்டுமல்லாமல் பசுமை வரி, சாலைப் பாதுகாப்பு வரி போன்றவையும் உயர்த்தப்பட்டுள்ளன. ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகு புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வரும்.
காலத்துக்கு ஏற்ப வரி உயர்வு விதிக்கப்படுவது தவிர்க்க முடியாததுதான். ஆனால், வரி விதிப்பின்போது மக்கள் நலன் சார்ந்து சில அம்சங்களை அரசு கருத்தில் கொண்டிருக்கலாம். குறிப்பாக ஆடம்பரம், வணிகப் பயன்பாடு, அதிக சிசி திறன் அல்லாத இருசக்கர வாகனங்களுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்திருக்கலாம். அதேவேளையில், வருவாய்ப் பற்றாக்குறையில் உள்ள தமிழ்நாடு அரசு, வருவாயைப் பெருக்கும் நோக்கில் மட்டுமே வரிகளை உயர்த்தியிருப்பதாக முன்வைக்கப்படும் வாதங்கள் கருத்தில் கொள்ளத்தக்கவை.
மேலும், போக்குவரத்துத் துறை சார்ந்த இதுபோன்ற வரிகள், தரமான சாலை உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், அவற்றைப் பராமரிக்கவும், விளக்குகள், சிக்னல்கள் போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்கவுமே விதிக்கப்படுகின்றன. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் தவிர்த்த பிற சாலைகள் பெரும்பாலும் குண்டும் குழியுமாகவே உள்ளன.
இப்போது அதிகரிக்கப்பட்டுள்ள வரிகளை இயன்றவரை குறைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். வசூலிக்கப்படும் வரிகள் சாலை மேம்பாட்டுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அனைத்துச் சாலைகளும் தரமாகப் பராமரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் வரி உயர்வுக்கு நியாயம் கற்பிக்க முடியும்.