வரி விதிப்புகள்: நடுத்தர வர்க்கத்தை நசுக்காதீங்க..!
- டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுவதையொட்டி அங்கு பிரதானமாக களத்தில் இருக்கும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போட்டி போட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். 300 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு மாதம் ரூ.2500 ரொக்கம், ரூ.500-க்கு காஸ் சிலிண்டர், முதியோருக்கு இலவச சிகிச்சை, போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்கு நிதியுதவி, எல்கேஜி முதல் முதுநிலைக் கல்வி வரை இலவசம் என இலவசங்களின் பட்டியல் நீண்டு வருகிறது.
- அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்துக்கு மத்தியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் நடுத்தர வர்க்கத்தினரின் சிரமங்கள் குறித்து ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். ‘‘ஓட்டு வங்கிக்கும் நோட்டு வங்கிக்கும் இடையில் சாண்ட்விச் போல தவிக்கிறது நடுத்தரவர்க்கம். எந்த அரசுகள் வந்தாலும் நடுத்தர வர்க்கத்தை வரிகள் போட்டு பிழிந்து எடுக்கிறார்கள். வரி தீவிரவாதத்தால் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கமே. இதனால், இளம் தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ளவே யோசிக்கிறார்கள்’’ என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
- மத்திய பட்ஜெட் வெளியாகும் நேரத்தில் நடுத்தர வர்க்கத்தினர் குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்து விவாதத்துக்குரியதாகவே அமைந்துள்ளது.
- சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார தேக்கநிலை மற்றும் கோவிட் பெருந்தொற்று காலகட்டத்துக்கு பின்னர், நடுத்தர வர்க்கத்தினர் உலகம் முழுக்க பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இதன்விளைவாக அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்கும் ஒரு கலாச்சாரம் பரவி வருகிறது.
- திருமணமான அல்லது இணைந்து வாழும் தம்பதிகள் குழந்தை பெற்று வளர்ப்பதற்கு தற்போது ஏற்படும் செலவுகளை மனதில் வைத்து குழந்தை பெறுவதை தவிர்க்கும் முடிவை எடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Dual Income No Kids(DINK) தம்பதிகள் என்றழைக்கப்படும் இவர்கள் புதிய கலாச்சாரத்தை உலகம் முழுக்க பரப்பி வருகின்றனர்.
- அமெரிக்காவில் குழந்தையை வளர்த்து 18 வயது வரை ஆளாக்க சராசரியாக 2 லட்சம் முதல் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாகவும் அதை தவிர்க்க வேண்டியும், பொருளாதார நெருக்கடியற்ற வாழ்க்கை முறையை வாழவும் இப்படிப்பட்ட முடிவை இளைஞர்கள் எடுப்பதாக ப்ரூக்கிங்ஸ் கல்வி நிறுவனம் எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற ‘டிங்க்’ கலாச்சாரம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- குழந்தை வேண்டாம் என்று சொல்லும் தம்பதியரின் எண்ணிக்கை இந்தியாவில் ஆண்டுக்கு 30 சதவீதம் அளவில் வேகமாக வளர்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.
- பெண்கள் உயர்கல்வி பயில்வது, பணிக்குச் செல்வது போன்ற காரணங்களும் இத்தகைய முடிவுக்கு காரணமாக அமைகின்றன. இந்த கலாச்சாரத்தின் காரணங்கள் குறித்து மேலும் ஆய்வுகள் நடத்தி, விளைவுகளை கணக்கிட்டுஅதற்கேற்ப வரிக் கொள்கைகள் உள்ளிட்ட பொருளாதார முடிவுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்வது அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 01 – 2025)