TNPSC Thervupettagam

வரியோ வரி... வரலாற்றில் வரி

March 31 , 2023 486 days 328 0
  • குடிமக்கள் எவரும் வரியிலிருந்து தப்பிக்கவே முடியாது. நேரடியாகச் செலுத்தும் நேர்முக வரியிலிருந்து தப்பித்தாலும், அவர்கள் வாங்கும் பொருள்கள் மீதான மறைமுக வரியை அவர்கள் செலுத்தவே செய்கிறார்கள். இரந்து வாழ்பவரும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. அரசு என்ற அமைப்பு உருவானபோதே வரியும் தோன்றிவிட்டது.
  • இனக்குழுத் தலைவர்களின் ஆட்சியை அடுத்து வேளாண்மைச் சமூகம் உருவானபோது, விளைநிலங்கள் மதிப்புவாய்ந்த சொத்துக்களாயின. இவை தரும் வருவாயின் காரணமாக இவை வரி செலுத்தும் இனமாயின. நாணயப் புழக்கம் பரவலாகாத சூழலில், இவற்றில் விளையும் தானியங்களின் வடிவில் வரி வாங்கப்பட்டது.
  • இறை’ என்ற பெயரில் ஆளுவோன் அழைக்கப்பட்டமையால், அவனுக்குச் செலுத்தும் வரியானது ‘இறை’ என்றும் அழைக்கப்பட்டது. வேளாண்மைச் சமூகத்தின் வளர்ச்சியால் வாணிபமும் கைத்தொழிலும் தோன்றி வளர்ந்தபோது, இவையும் வரி விதிப்புக்கு உள்ளாயின.
  • ஏற்றுமதிப் பொருள்கள் மீதான சுங்க வரி ‘உல்கு’ எனப்பட்டது. காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகத்தில் சுங்கம் செலுத்தியதற்குச் சான்றாகச் சோழர்களின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டதாகப் பட்டினப்பாலை குறிப்பிட்டுள்ளது.

வரிப்பளு

  • வரிவிதிப்பு கடுமையானபோது மக்கள் அல்லல்பட்டனர். இவர்களுக்கு ஆதரவான குரல் ‘செவியறிவுறூஉ’ என்ற துறையில் பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுச் செய்யுளில் (184) இடம்பெற்றுள்ளது. பல்லவர், பாண்டியர், இடைக்காலச் சோழர் கல்வெட்டுகளில் பல்வேறு வரி இனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
  • இடைக்காலச் சோழர் ஆட்சியில் நானூறுக்கும் மேற்பட்ட வரிகள் நடைமுறையில் இருந்ததாக வரலாற்றறிஞர் கே.கே.பிள்ளை குறிப்பிடுகிறார். குடிஊழியக்காரர் மீதும் வரிவிதிக்கப்பட்டுள்ளது. வண்ணார்கள் துணி துவைக்கப் பயன்படுத்தும் கல் மீது ‘வண்ணாரப்பாறை’, ‘வண்ணாற் கற்காசு’ என்கிற வரிகள் விதிக்கப்பட்டன. குயவர்கள் ‘குசக்காணம்’ என்ற வரிவிதிப்புக்கு ஆளாகினர். நாவிதர்களும் வரிவிதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
  • உழுகுடிகள் ஒரு தானியத்தைப் பயிரிடும்போது ஊடுபயிராக வேறொரு தானியத்தைப் பயிர் செய்தால் அதற்கும் வரி விதிக்கப்பட்டது. கள் இறக்குவோர் ‘ஈழப்பூச்சி’ என்ற வரியையும், ஆயர்கள் ‘இடைப்பாட்டம்’ என்ற வரியையும் செலுத்த நேரிட்டது. திருமணம் செய்துகொள்வோர் ‘கண்ணாலக்காணம்’ என்ற வரியைச் செலுத்த வேண்டியிருந்தது. காவிரி ஆற்றுக்குக் கரை எடுத்தபோது ‘காவிரிக்கரை விநியோகம்’ என்ற வரி விதிக்கப்பட்டது.
  • இடைக்காலச் சோழர் கல்வெட்டுகளில், ‘வெண்கலம் எடுத்து மண்கலம் உடைத்து’ என்ற தொடர் பரவலாக இடம்பெற்றுள்ளது. வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் உள்ள மதிப்புவாய்ந்த பொருள்களைக் கைப்பற்றி எடுத்துச் செல்வதையும் விலைமதிப்பற்ற மண்பாண்டம் போன்றவற்றை அவர்களுக்குப் பயன்படாதவாறு உடைத்து அழித்தலையும் இத்தொடர் குறிப்பிடுகிறது.

வரி எதிர்ப்பு

  • வரி கடுமையாகும்போது மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும் உண்டு. பொ.ஆ. (கி.பி.) 1078இல் மாடுகளுக்கும் எருமைகளுக்கும் குலோத்துங்க சோழன் வரி விதித்தபோது மக்கள் கிளர்ச்சி செய்து, அதை நடைமுறைப்படுத்த முடியாமல் செய்துள்ளனர். வரி செலுத்தாது கைவினைஞர்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். சில நேரம் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்.
  • நாடு விடுதலை பெற்ற பின்னர் அமைப்பாக ஒன்றுதிரண்டு வரிகொடாப் போராட்டங்களையும் மக்கள் நடத்தியுள்ளனர். அறுபதுகளில் காங்கிரஸ் ஆட்சியில் நெல்லை மாவட்டத்தின் கோவில்பட்டி வட்டத்தில் இத்தகைய வரிகொடாப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று நடத்தியபோது, உழவர்களின் அசையாப் பொருள்களையும் கால்நடைகளையும் வருவாய்த் துறை கையகப்படுத்தியது. இந்நிகழ்வை மையமாகக் கொண்டு, கி.ராஜநாராயணன் ‘கதவு’ என்ற அற்புதமான சிறுகதையை எழுதினார்.

காலனியமும் வரியும்

  • தென் தமிழ்நாட்டில் முத்துக் குளித்தல் தடையின்றி நடைபெற்றபோது, சேகரித்த முத்துகள் பத்து பங்காகப் பகுக்கப்பட்டு, அதில் ஒரு பங்கு பாண்டிய மன்னனுக்கு வரியாகச் சென்றது. எஞ்சிய ஒன்பது பங்கை முத்துக்குளித்தவர்களும், தோணி உரிமையாளர்களும் பகிர்ந்து கொண்டனர்.
  • 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தலாயினர். அதன் பின்னர் எடுக்கப்பட்ட முத்துக்கள் நான்காகப் பகுக்கப்பட்டு ஒரு பங்கு மட்டுமே முத்துக்குளித்த பரதவர்களுக்கு உரியதாயிற்று. எஞ்சியவை போர்த்துக்கீசியருக்கு உரியதாகின.
  • பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியைக் கைப்பற்றியதும் நிலவரி அவர்களது முக்கிய வருவாயானது. இதை வாங்குவதற்காகவே வருவாய்த் துறை உருவானது, வரியை மக்களிடமிருந்து சேகரித்து அனுப்புவதே மாவட்ட ஆட்சித் தலைவரின் முக்கியப் பணியாக அமைந்தது. இதன் அடிப்படையிலேயே இவரது பதவிப்பெயர் ‘கலெக்டர்’ (Collector) என்றாயிற்று என்றும் கூறுவர். இதனாலோ என்னவோ தொடக்கத்தில் ‘கலெக்டர்’ என்பதை ‘தண்டல்நாயகம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டது.
  • திருநெல்வேலி மாவட்டத்தில் கிறித்துவர்களாக மதம் மாறியவர்களில் சிலர், இனி தாம் வரிகட்ட வேண்டாம் என்று அப்பாவித்தனமாக நம்பியுள்ளனர். இதனால் அம்மாவட்டத்தின் கலெக்டராக இருந்த லூஷிங்டன் என்பவர் கிறித்துவ மறைப் பணியாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘சீசருக்குரியதை சீசருக்கும் தேவனுக்குரியதை தேவனுக்கும் கொடுங்கள்’ (மத்தேயு 22:21) என்ற விவிலிய வரிகளை அழுத்தமாகக் கற்றுக்கொடுக்க வேண்டும்’ என்று எழுதினார்.
  • வரியைப் பெற கொடூரமான சித்ரவதைகள் உழுகுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டன. மதராஸ் மாகாணத்தில் சித்ரவதைகளுக்கு ஆளான குடியானவர் ஒருவரின் வாக்குமூலத்தை, 28 ஆகஸ்ட் 1857இல் எழுதிய கட்டுரை ஒன்றில் கார்ல் மார்க்ஸ் பதிவிட்டுள்ளார். அதில், ‘எங்களை வெயிலில் நிறுத்திவைத்துக் குனியும்படி கூறி, எங்கள் முதுகில் கல்லைத் தூக்கிவைத்துக் கொதிக்கும் மணலில் நிறுத்திவைப்பது வழக்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காமதேனு’ வரி

  • நிலவரி, தொழில்வரி, பத்திரப் பதிவுக் கட்டணம் என்பன மாநில அரசின் வருவாய்க்குத் துணைநின்ற சூழலில், ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது விற்பனை வரியை அறிமுகம் செய்தார். ‘காமதேனு’ என்று இவ்வரியை அவர் வர்ணித்தார்; இது உண்மையும்கூட. இதன் அதிகரிப்பானது புன்செய் நிலங்களின் மீதான வரியை முற்றிலும் ஒழிப்பதற்கு மு.கருணாநிதிக்குத் துணைநின்றது. இன்று ஜிஎஸ்டி என்ற பெயரால் இது மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசின் கைக்குள் சென்றுவிட்டது.

நன்றி: தி இந்து (31 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்