TNPSC Thervupettagam

வருமான வரி அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரமா?

March 6 , 2025 5 hrs 0 min 8 0

வருமான வரி அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரமா?

  • புதிய வருமான வரிச் சட்டம்-2025 அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், அதில் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
  • வருமான வரி செலுத்துவோர் வரி ஏய்ப்பு செய்வதாக அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தால், அவர்களது வீடு, தொழில் நிறுவனங்கள் மற்றும் உடைமைகள் இருக்கும் இடங்களில் எந்தவித முன்னறிவிப்புமின்றி சோதனை நடத்த ஏற்கெனவே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பூட்டியிருக்கும் அறை, பெட்டகம், ஒளித்து வைத்திருக்கும் இடங்களை யாருடைய அனுமதியுமின்றி உடைத்து சோதனை நடத்தும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு.
  • இந்த அதிகாரத்தின் நீட்சியாக, புதிய வருமான வரிச் சட்டத்தில், வரி செலுத்துவோரின் சமூக வலைதள கணக்குகள், தனிப்பட்ட இ-மெயில், இணையதளம், வர்த்தக கணக்குகள், ஆன்லைன் வங்கி கணக்குகள், இணைய முதலீட்டு கணக்குகள் உள்ளிட்ட அனைத்திலும் வருமான வரி அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனையிடும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
  • வங்கிக் கணக்குகள், முதலீட்டு கணக்குகள், கணினியில் உள்ள விவரங்கள் அனைத்தையும் பாஸ்வேர்டு எதுவும் தேவைப்படாமல் உடைத்து உள்ளே சென்று சோதனையிடும் அதிகாரம் புதிய வருமான வரிச் சட்டம் பிரிவு 247-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்வோரை கண்டறியவும், ஏமாற்றுவோரின் கணக்கு விவரங்களை அறிந்து கொள்ளவும் இத்தகைய அதிகாரம் தேவை என்றபோதிலும், நாட்டு மக்களின் அந்தரங்க உரிமையில் அரசு அமைப்பு தலையிடுவதற்கு வழிவகுத்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
  • மக்களின் சமூக வலைதள கணக்குகளில் அவர்களது அந்தரங்கமான பல விஷயங்கள் இருக்கும், இ-மெயிலிலும் மற்றவர்கள் தெரிந்துகொள்ள தேவையில்லாத பல விஷயங்கள் இருக்கும். நிதி முதலீடுகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தனிப்பட்ட ரகசியங்களை பராமரிக்கக் கூடும். தொழிலதிபர்கள் பலர் தங்கள் தொழில் தொடர்பான ரகசியங்களை கணினியில் சேகரித்து வைத்திருப்பார்கள். அவர்களது அனுமதியின்றி இவற்றில் நுழைந்து தகவல்களை சேகரிப்பது அரசின் அத்துமீறலாக அமைய வாய்ப்பு உள்ளது.
  • ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவர் மீது வருமான வரித் துறை அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டால், அந்த நிறுவனத்தின் கணக்கு விவரங்களையே சோதிக்க முடியும் என்ற அதிகாரமும் வழங்கப்பட்டிருப்பது அதிகார துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.
  • இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ், குடிமக்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்களை பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 19(1)(ஏ)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்துக்குள் தலையிடும் அதிகாரமாகவும் இது கருதப்படுகிறது.
  • நீதிமன்ற உத்தரவை பெற்று தனிப்பட்ட நபரின் விவரங்களை பெறுவது சட்டப்பூர்வமானது. ஆனால், வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் சந்தேகப்படும் மாத்திரத்தில் யாருடைய கணினியையும், சமூகவலைதள கணக்கு உள்ளிட்ட இணையவழி தகவல்கள் அனைத்தையும் பாஸ்வேர்டு இல்லாமல் உடைத்து உள்ளே சென்று பார்க்க முடியும் என்பது தேவைக்கு அதிகமான அதிகாரமாகவே கருதப்படுவதால் இதுகுறித்து விவாதித்து மாற்றங்களை செய்வதே சாலச் சிறந்தது.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்