TNPSC Thervupettagam

வருமான வரிச் சுமையை ஒரு சாரார் மீதே சுமத்துவது நியாயமா?

July 29 , 2021 1099 days 477 0
  • வருமான வரி தினத்தையொட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையொன்றில், நாட்டின் வளர்ச்சிக்காக நேர்மையாக வரி செலுத்தும் ஒவ்வொருவருடைய பங்களிப்பையும் பாராட்டியிருந்தார்.
  • மேலும், அவர்களை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளை வருமான வரித் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார். மத்திய நிதியமைச்சரின் இந்த அறிவுறுத்தல் உடனடியாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.
  • நேரடி வரிவிதிப்பு முறையின் பாதுகாப்புச் சுவராக மாதாந்திர ஊதியம் பெறுபவர்களே இருக்கிறார்கள்.
  • கடந்த நிதியாண்டில், கார்ப்பரேட் வரி வசூல் முற்றிலுமாகச் சீர்குலைந்து போனாலும், வருமான வரி வசூல் நிலையாகவே இருந்தது. தனிநபர் வருமான வரி மட்டும் ரூ.4.71 லட்சம் கோடி வசூலானது.
  • இந்த நூற்றாண்டிலேயே கடந்த நிதியாண்டில்தான் முதன்முறையாக கார்ப்பரேட் வரிகளைக் காட்டிலும் தனிநபர் வருமான வரி அதிகமாக வசூலாகியிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
  • கடந்த நிதியாண்டில் 6.54 கோடிப் பேர் தங்களது வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்தனர். இந்தியாவில் வயதுவந்தோர் எண்ணிக்கையில் இவர்களது விகிதம் 10%-க்கும் குறைவானதாகும்.
  • கணக்கு தாக்கல் செய்பவர்கள் அனைவருமே வரி செலுத்துபவர்களும் இல்லை. தணிக்கை, சட்டம், மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த சுதந்திரமாகத் தொழில் செய்யும் பிரிவினரின் வரிப் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
  • பெருவணிகர்கள் தங்களது வருமானத்தைக் குறைவாகக் காட்டவே விரும்புகின்றனர். எனவே, இந்தியாவில் தனிநபர் வருமான வரி என்பது பெரிதும் மாதாந்திர ஊதியம் பெறும் வர்க்கத்தினரையே குறிக்கிறது.
  • பெருந்தொற்றின் பொருளாதாரப் பாதிப்புகள் காரணமாக மாதாந்திர ஊதிய வர்க்கத்தினரில் பெரும் பகுதியினர் ஏற்கெனவே ஊதியவெட்டை அனுபவித்துக் கொண்டிருப்பதோடு, வேலையிழப்பு குறித்த அச்சத்திலும் இருந்துவருகின்றனர். வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அவர்களது மொத்தச் செலவுகளும் ஒரே விகிதத்தில் இல்லை என்பதும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவருகிறது.
  • குறைவான வருமானம் உள்ளவர்களாகக் கணக்குக் காட்டுபவர்களே அதிக செலவுகளைச் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்றாலும் அவர்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வருவது வருமான வரித் துறையினருக்கு இன்னமும் சிரமமாகவே இருக்கிறது.
  • இந்நிலையில், மாதாந்திர ஊதியம் பெறும் வர்க்கத்தினர் மட்டும் ஊதியத்துக்கான வருமான வரி, செலவுகளுக்கான விற்பனை வரி என்று நேர்முக, மறைமுக வரிகள் இரண்டையும் சேர்த்துச் சுமக்க நேரிடுகிறது.
  • அவர்களிடமிருந்து உத்தேச வருமானத்துக்கான வரிகளை முன்கூட்டியே வசூலித்துக் கொள்வது ஒருவகையில் வரித் திணிப்பாகவும் அமைகிறது.
  • தனிநபர்களிடமிருந்து வசூலிக்கப்படும் நேரடி வரிவிதிப்பு முறையானது அனைத்துக் குடிமக்களையும் சமமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • வரிச் சுமையைப் பரவலாக்காமல் குறிப்பிட்ட சிலர் மீது மட்டும் சுமத்துவது சிறந்த வரிக் கொள்கையாகவும் இருக்க முடியாது. வருமான வரிச் சட்டங்களைச் சீர்திருத்தும் வகையில், உரிய திருத்தங்களைச் செய்ய வேண்டிய நேரமிது.
  • அதற்கான தேவையைப் பெருந்தொற்றுக் கால அனுபவங்கள் விரைவுபடுத்தவே செய்கின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (29 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்