TNPSC Thervupettagam
September 1 , 2023 450 days 312 0
  • இரு தினங்களுக்கு முன், அண்டை நாடான சீனா வெளியிட்ட புதிய சீன தேச வரைபடத்தில் இந்தியாவுக்குச் சொந்தமான அருணாசல், வடக்கு லடாக் (அக்சாய் சின்) பகுதிகள் இடம்பெற்றிருப்பது, அந்நாடு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்பதற்கான சான்று.
  • அண்மையில் (ஆக. 24) தென்ஆப்பிரிக்காவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் 'பிரிக்ஸ்' மாநாட்டில் சந்தித்தபோது அதிகாரபூர்வமற்ற முறையில் பேச்சு நடத்தினர். அப்போது, 'இரு நாடுகளிடையே அமைதி நிலவ வேண்டுமானால் எல்லை தாண்டும் போக்கை சீனா கைவிட வேண்டும்' என்று மோடி வலியுறுத்தியிருந்தார்.
  • ஆனால், தனது எதேச்சதிகாரப் போக்கும்எல்லை விரிவாக்க உத்தியும்  சற்றும் மாறி விடவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது சீனா. இதுவரை நிகழ்ந்துள்ள சம்பவங்களைப் பட்டியலிட்டாலே, சீனாவின் சாம்ராஜ்யப் பேராசை புலப்படும்.
  • சுதந்திரத்திற்கு முந்தைய (1914) திபெத் - பிரிட்டிஷ் அரசுகளிடையிலான ஒப்பந்தத்தின்படி திபெத் - பிரிட்டிஷ்  இந்தியா இடையே மெக்மேகன் எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் அந்த அடிப்படையில் வடக்கு லடாக் பகுதி ஜம்மு காஷ்மீரின் அங்கமானது. அதை ஆரம்பத்திலிருந்தே சீனா ஏற்கவில்லை. அப்பகுதியை 1962-இல் சீனா ஆக்கிரமித்து 'அக்சாய் சின்' என்று பெயரிட்டுக் கொண்டது. அதன் பரப்பளவு 38,000 சதுர கி.மீ. அப்போது நடந்த இந்திய-சீனப் போரில், இந்தியா 3,000 வீரர்களை இழந்து தோல்வி அடைந்தது.
  • பஞ்சசீலக் கொள்கையின் இரண்டாவது விதியே, 'எந்த நாடும் பிற நாட்டை ஆக்கிரமிக்கக் கூடாது' என்பதுதான். இந்த ஒப்பந்தம், பெய்ஜிங்கில் 1954-இல் கையொப்பமானது. அடுத்த சில ஆண்டுகளில் தனது சுயரூபத்தைக் காட்டியது செஞ்சீனா. அதன்பிறகு மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) என்ற எல்லைக் கோடு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனாலும், அவ்வப்போது எல்லை தாண்டும் குறும்புகளை சீனா கைவிடவில்லை. 
  • இந்தியாவும் சீனாவும் சுமார் 4,057 கி.மீ. தொலைவுக்கு எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இப்பகுதிகளில் அவ்வப்போது வம்பிழுப்பது சீனாவுக்கு வாடிக்கையாகிப் போனது.
  • வடகிழக்கு மாநிலமான அருணாசலிலும் சீனா உரிமை கோருகிறது. திபெத்தை 1959-இல் மோசமான முறையில் ஆக்கிரமித்த சீனா, அதை தனது நாட்டின் ஒரு பகுதியாக்கிக் கொண்டது. அதன்பிறகு அருணாசல பிரதேசத்தை 'தெற்கு திபெத்' என்று கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது.
  • சுமார் 90,000 சதுர கி.மீ. பரப்புள்ள அருணாசலப் பகுதிக்கு 'ஜாங்னான்' என்று பெயரிட்டுள்ளது சீனா. அது மட்டுமல்ல, அருணாசலில் உள்ள பல பகுதிகளுக்கும் சீனப் பெயரிட்டு வரைபடத்தை வெளியிடுவது சீனாவின் வக்கிரமான சிந்தனை. கடைசியாக 2017-இல் இவ்வாறு 32 இடங்களுக்கு சீனப் பெயரிட்டு மகிழ்ந்தது ஜின்பிங் அரசு.
  • 2020-இல் லடாக் அருகிலுள்ள கல்வான் பகுதியில் ஊடுருவிய சீன வீரர்களால் நிகழ்ந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பிலும் 37 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த மோதல் நிகழ்ந்த பகுதியில் இன்றும் இரு நாடுகளின்  படைகளும் நிலைகொண்டுள்ளன.
  • அதேபோலஇந்தியா, பூடான், சீனா ஆகிய மூன்று  நாடுகளின் முச்சந்திப் பகுதியான டோகாலாம் பீடபூமியை 2017-இல் ஆக்கிரமித்து மிரட்டியது சீனா; தற்போதைய இந்திய அரசின் உறுதியான நடவடிக்கையால் அங்கு நிலைமை சரியானது.
  • 2022 டிசம்பரில் அருணாசலின் தவாங் பள்ளத்தாக்கிலுள்ள யாங்ட்ஸியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்தது. அவர்களை வெளியேற்ற இந்திய ராணுவம்  முயன்ற போது பல வீரர்கள் காயமடைந்தனர். இந்தியத் தலைவர்கள் அருணாசல் மாநிலத்திற்குச் செல்லும்போதெல்லாம் கடுமையாக விமர்சிப்பது சீனாவின் வழக்கம்.
  • இரும்புத்திரை நாடான சீனாவை ஆட்சி செய்பவர்கள், தமது சர்வாதிகாரப் போக்கை நிலை நாட்டவும்தங்கள் நாட்டின் மக்கள் விடுதலை ராணுவத்துக்கு (பிஎல்ஏ) வேலை கொடுக்கவும், எல்லைப் பிரச்னையை உருவாக்குகின்றனர்.
  • சீனாவின் முதல் அதிபர் மாவோவும், முதல் பிரதமர் சூ-இன்-லாயும் ஆரம்பத்திலிருந்தே  எல்லையை விஸ்தரிக்கும் நாடாக சீனாவை வடிவமைத்தனர். கம்யூனிஸ சர்வாதிகார ஆட்சி, ராணுவ வலிமை ஆகியவற்றின் உதவியால், உலகின் முன்பு தனது அனைத்துத் தவறுகளையும் நியாயப்படுத்துவது சீனாவின் இயல்பு. அது ஜின்பிங் காலத்திலும் தொடர்கிறது. இந்தியாவிலோ, ஜவாஹர்லால் நேரு காலம் முதல் நரேந்திர மோடி காலம் வரை, சீனாவின் தாக்குதல்களைத் தடுக்கும் தற்காப்புச் செயல்பாடுகளிலேயே காலம் கழிக்க வேண்டியிருக்கிறது.
  • சீனாவின் வல்லாதிக்கம் என்பது இந்தியாவை மட்டும் பாதிக்கவில்லை. இந்தியப் பகுதிகளை தனது வரைபடத்தில் காட்டியது போலவே, தைவான், தென்சீனக் கடல் ஆகிய பகுதிகளையும் சீனா தனது வரைபடத்தில் சேர்த்திருக்கிறது. இதன்மூலம் தென்கிழக்கு ஆசியாவில் தைவான், வியத்நாம், பிலிப்பின்ஸ், மலேசியா, புருணே ஆகிய நாடுகளுடனும் மோதலில் சீனா ஈடுபடுகிறது.
  • வரும் செப். 9, 10 ஆகிய தேதிகளில்   தில்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில்வரைபடம் வெளியிடப்பட்டிருப்பதில் உள்நோக்கம் தெரிகிறது. இந்தியாவின் தலைமையில் நடக்க இருக்கும் ஜி20 மாநாட்டின் வெற்றியைக் குலைப்பதுதான் சீனாவின் நோக்கமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், இப்போது எதற்காக தொடர்பே இல்லாத வரைபட பிரச்னை?

நன்றி: தினமணி (01– 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்