- இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் வறட்சியின் பிடியில் தவிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மத்திய-மாநில அரசுகள் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ராஜஸ்தான், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் இந்த ஆண்டு வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கேரளம், அசாம், மேற்கு வங்கம், ஒடிஷா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் வறட்சியை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.
- கடும் வெப்ப அலையின் தாக்கத்தால் தமிழ்நாடும் வறட்சியின் தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது. 2024 ஏப்ரல் நிலவரப்படி 125 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2023இல் இதே காலகட்டத்தில் 33 மாவட்டங்கள் மட்டுமே வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தன.
- இது வறட்சியின் தீவிரத்தை உணர்த்துகிறது. நீண்ட காலத்துக்கு மழைப்பொழிவின் அளவு இயற்கையாகக் குறைவதன் விளைவால் வறட்சி ஏற்படுகிறது. இதற்குச் சீரற்ற மழைப்பொழிவு முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்பட்டாலும், காலநிலையுடன் சேர்த்தே வறட்சியும் மதிப்பிடப்படுகிறது.
- இந்தியாவில் மார்ச் மாதத்திலிருந்தே அதிகரித்துக் காணப்படும் வெப்பநிலையும் வறட்சியின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. வறட்சி என்பது மாநிலங்களின் எல்லைகளைக் கடந்து நிகழும் ஒரு சிக்கலான சூழலியல் சவால் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
- நேரடியாகப் பாதிக்கும் இயற்கைப் பேரிடர்களைவிட இது நீண்ட காலத்துக்குக் கடுமையான பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் இழப்புகளை ஏற்படுத்தி, மக்களை அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்கக்கூடியது என்பது கவனத்துக்குரியது.
- வறட்சியின் தாக்குதல் வேளாண் துறையை நேரடியாகப் பாதிக்கக்கூடியது. இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ 50%க்கும் அதிகமானோர் விவசாயத் துறையை நம்பியே இருக்கின்றனர். வேளாண் குடிகளுக்கு ஏற்படும் பாதிப்பு, விவசாயப் பொருள்களை நுகரும் நுகர்வோரையும் பாதிக்கும்.
- கடும் வறட்சியால் குடிநீர்த் தட்டுப்பாடும் ஏற்படலாம். அதிகரிக்கும் வெப்பநிலையால் வருங்காலத்தில் வறட்சியின் தீவிரம் அதிகமாகக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. அதுபோலவே காலநிலை மாற்றத்தின் விளைவால் இயல்பான மழை அளவைத் தாண்டி, அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்திய நகரங்களுக்குச் சாபக்கேடாக மாறலாம்.
- எனவே, தண்ணீர் இல்லாமல் ஏற்படும் வறட்சியையும் அதீத மழைப்பொழிவின் காரணமாக ஏற்படும் வெள்ளத்தையும் சமாளிப்பதற்கான வழிகளை மத்திய-மாநில அரசுகள் ஆராய வேண்டியது அவசியமாகிறது. வறட்சியை இந்திய மாநிலங்கள் கூட்டாகச் சேர்ந்து சமாளிப்பதற்குத் திட்டங்களை வகுக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்கிறது.
- பற்றாக்குறை காலத்தில் மாநில எல்லைகளைக் கடந்து தண்ணீரைப் பகிர்ந்துகொள்வது, மத்திய அரசிடமிருந்து வறட்சி நிவாரணம் பெறுவதில் ஒருங்கிணைந்து செயல்படுவது, மழைக் காலத்தில் தண்ணீரை அதிகம் தேக்கிவைக்கும் வகையில் வறட்சிக் காலத்தில் நீர்த்தேக்கங்களைத் தூர்வாரிப் பராமரிப்பது போன்ற பணிகளில் மாநில அரசுகள் ஈடுபட வேண்டும்.
- மத்தியில் அமையவிருக்கும் புதிய அரசு, எதிர்காலத்தில் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் தீர்க்கமான திட்டங்களை வகுத்தாக வேண்டும். நிலைமை இப்படி இருக்க, முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரளம் தடை போடுவது, கர்நாடகத்தில் வறட்சியைக் காரணம் காட்டி, மே மாதத்தில் தமிழ்நாட்டுக்குக் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட மறுப்பது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும். வறட்சி என்பது மனிதகுலத்தைப் பாதிக்கக்கூடியது. அதற்கு எல்லைகள் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 05 – 2024)