TNPSC Thervupettagam

வறுமை ஒழிப்பும் நகர்ப்புற வளர்ச்சியும்: தமிழ்நாட்டின் வெற்றி

December 7 , 2021 971 days 536 0
  • நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட முதலாவது பல்பரிமாண வறுமைக் குறியீட்டில், வறுமை நிலை குறைவாகக் காணப்படும் மாநிலங்களில் நான்காவது இடத்தில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.
  • வறுமை நிலையில் முதலிடத்தில் இருக்கும் பிஹார் மாநிலத்தில், மக்கள்தொகையில் 51.91% பேர் வறுமை நிலையில் இருக்க, தமிழ்நாட்டில் இந்த விகிதம் 4.89% ஆக இருக்கிறது.
  • தமிழ்நாட்டைக் காட்டிலும் வறுமை நிலை குறைவாக இருக்கும் மற்ற மாநிலங்கள் முறையே கேரளம், கோவா, சிக்கிம் ஆகியவை ஆகும். இந்த மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு அதிக மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் மாநிலம் என்பது குறிப்பிடத் தக்கது.
  • பல்பரிமாண வறுமை நிலைக் குறியீட்டுக்கு நிதி ஆயோக் கையாண்ட ஆய்வுமுறையானது ஆக்ஸ்ஃபோர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டுத் திட்டம், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றைப் பின்பற்றியுள்ளது.
  • சத்தான உணவு, குழந்தைகள் மற்றும் வயதுவந்தோர் இறப்பு விகிதம், பேறுகாலப் பாதுகாப்பு, குழந்தைகளின் பள்ளிப்படிப்புக் காலம், பள்ளி வருகைப் பதிவு, சமையலுக்கான எரிபொருள் வசதிகள், கழிப்பறை வசதிகள், மின்வசதி, வீட்டுவசதி, சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய அளவீடுகளின் அடிப்படையில் இந்த வறுமை நிலைக் குறியீடுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
  • நிதி ஆயோக் வெளியிட்டிருக்கும் வறுமை நிலைக் குறியீடானது 2015-16ம் ஆண்டுக்கான தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
  • கல்வி, நலவாழ்வு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் இந்தியா முழுவதும் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டியிருக்கும் தேவையை இந்தக் குறியீடுகள் உணர்த்துகின்றன.
  • மிகவும் அடிப்படையான இந்தத் தேவைகளில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறது என்பது பெருமைக்குரியது.
  • தமிழ்நாட்டில், அறுபதுகளின் இறுதியிலிருந்து மாநிலக் கட்சிகளின் ஆட்சி தொடர்ந்துவரும் நிலையில், மாநில அரசியலின் வெற்றியாகவும் இதற்குப் பொருள்கொள்ளலாம்.
  • நிதி ஆயோக் வெளியிட்ட நீடித்த நிலையான வளர்ச்சி பெற்றுள்ள நகரங்களுக்கான பட்டியலிலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. கேரளத்தை அடுத்து இரண்டாவது நிலையில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.
  • கேரளத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான வேறுபாடு ஒரு மதிப்பெண் என்ற அளவிலேயே உள்ளது. தொழில்வளர்ச்சி பெற்ற குஜராத், மஹாராஷ்டிரம் போன்ற மாநிலங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களின் நீடித்த வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
  • வேலைவாய்ப்புகளின் அடிப்படையிலேயே நகர்ப்புறங்களின் வளர்ச்சி அமைகிறது என்ற நோக்கில் பார்த்தால், தமிழ்நாட்டு நகரங்கள் ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் வேலைவாய்ப்புடன் தரமான வாழ்க்கைச்சூழலையும் கொண்டிருக்கின்றன என்பது தெரியவந்துள்ளது.
  • அதிலும் குறிப்பாக, நீடித்த வளர்ச்சிக்கான நகரவாரியான பட்டியலில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் கோயம்புத்தூரும் எட்டாவது இடத்தில் திருச்சிராப்பள்ளியும் இடம் பெற்றுள்ளன.
  • தமிழகத்தின் மற்ற தொழில் நகரங்களும் அத்தகைய நிலையான வளர்ச்சியை எட்டுவதற்கான செயல்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
  • அது போலவே, கழிப்பறை வசதியின்மை உள்ளிட்ட வறுமை அளவீடுகளில் தமிழ்நாட்டின் பின்னடைவு விரைந்து சரிசெய்யப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்