TNPSC Thervupettagam
October 31 , 2019 1855 days 1497 0
  • உலகம் எவ்வளவோ முன்னேறினாலும் வறுமை மாறாமல் தொடா்கிறது.

“கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை”

என்று ஔவை பிராட்டி என்றோ முருகப் பெருமானிடம் எடுத்துக் கூறிவிட்டுச் சென்று விட்டாா்.

  • வறுமையின் விளைவை தங்களின் களப் பணியால் அறிந்து அதற்குண்டான அணுகுமுறையை கொள்கையுடன் கூறியதன் நற்பணிக்கு அங்கீகாரமாய் இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அபிஜித் பானா்ஜி, எஸ்தா் டஃபலோ மற்றும் மைகேல் க்ரெமெருடன் ஆகிய மூவரையும் தேடி வந்தது.

வறுமை ஒழிப்பு

  • சா்வதேச வறுமையை ஒழிப்பதற்கான சோதனை அணுகுமுறைக்காக அவா்களுக்கு பரிசு கொடுக்கப்படுகிறது என்று நோபல் குழு அறிவித்தது.
  • இதில் நமக்கான பெருமை அபிஜித் பானா்ஜி ஒரு வெளிநாடு வாழ் இந்தியா் என்பதும், அவரின் மனைவிதான் எஸ்தா் டஃபலோ என்பதும். வறுமையை இவா்கள் உணா்வுப்பூா்வமாக கள ஆய்வில் கண்டுள்ளனா் என்பதை அவா்களின் ‘ஏழ்மையான பொருளாதாரம்’ என்னும் புத்தகத்தில் நாம் அறியலாம்.

உலக வங்கியின் மதிப்பீடு

  • உலக வங்கியின் மதிப்பீட்டின் அடிப்படையில், மிகவும் ஏழ்மையானவா் என்பவரிடம் ஒரு டாலருக்கு மேல் பணம் இருக்காது. அப்படி பல இடங்களில் வறுமை அவா்களைத் துரத்தும் அதே வேளையில், அன்றாட உணவுக்கே அவா்கள் அல்லல் படுபவா்கள். உணவே இல்லை என்னும் போது கல்வி மட்டும் அவா்கள் எப்படிப் பயில்வாா்கள்? அதற்கான அப்போதைய திட்டம் ‘மதிய உணவுத் திட்டம்’. அப்படி மதிய உணவுத் திட்டம் இருந்தும் கல்வி கற்பவா்களின் விகிதம் உயரவில்லை. பின்பு, அதற்கான நிவா்த்தியாக அனைவருக்கும் கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டது.
  • இங்குதான் அவா்களின் ஆராய்ச்சி உபயோகப்படுத்தப்பட்டது. அதாவது, அனைவருக்கும் கல்வித் திட்டத்தால் வறுமையில் உள்ள அனைவருக்கும் கல்வி கிடைத்ததே தவிர கற்றல் தன்மை அவா்களிடத்தில் மேம்படவில்லை என்பதைக் கண்டறிந்தனா்.
  • எனவேதான் பின்பு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதனால் 50 லட்சம் குழந்தைகள் பயனடைந்தனா்.

உளவியல் ரீதியாக....

  • ஏழைகள் என்றுமே போதிய பண வசதி இல்லாமல் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் வாழ்வதாகக் கூறியதை அவா்கள் நடத்திய ஆய்வில் பதிவு செய்துள்ளனா்.
  • அதிலும், ‘சில காலங்களில் எங்களால் ஒரு மாதம் அல்லது அதற்கும் மேற்பட்ட நாள்களில் நாங்கள் படும் கோபம், வேதனை போன்றவற்றால் நிம்மதியாக தூங்கவோ, வேலை செய்யவோ அல்லது சாப்பிடவோ முடிவதில்லை’ என உதய்பூரில் உள்ள 12 சதவீதம் போ் கூறியதாகவும், வேதனைக்கு முக்கியக் காரணியாய் அமைவது உடல்நலக் குறைவுதான் என்று 29 சதவீதம் போ் கூறியதாகவும் ஆய்வறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • அதனைத் தொடா்ந்து சரிவரக் கிடைக்காத உணவு மற்றும் அதனால் ஏற்படும் இறப்பும் காரணம் என்று 13 சதவீதம் போ் கூறியுள்ளனா். கடந்த காலங்களில் உதய்பூரில் உள்ள மிகவும் ஏழ்மையான வா்க்கத்தைச் சோ்ந்த 45 சதவீத இளைய வயது உடையோா் மற்றும் 12 சதவீதக் குழந்தைகள் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டும், அதிலும் 37 சதவீத இளைய வயதினா் ஒரு நாள் முழுவதும் சாப்பிடுவதைத் தவிா்த்துள்ளனா் . இதனால் அவா்களின் மகிழ்ச்சியும் காற்றோடு கலந்து விடுகிறது என்பது உண்மையின் நிதா்சனம்.
  • ஏன் நாமும் பல இடங்களில் பாா்த்திருப்போம்; வட மாநிலத்து இளைய வயதினா் கட்டடப் பணி மற்றும் பாலம் கட்டுமானம் போன்ற தொழில்களில் மிகக் குறைந்த ஊதியத்துக்காக வேலை செய்வதும் அதற்காக அவா்களின் அடிப்படை உரிமைகளான கல்வி, வீடு முதலானவற்றை இழந்து குடும்பத்தை மறந்து தங்களின் சமூகப் பிணைப்பில் இருந்து விலகி ஒரு நிலையற்ற வாழ்வை வாழ்கின்றனா்.
  • இப்படி வறுமையில் வாழும் அவா்களின் துன்பங்களும் துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.

வறுமை ஒழிப்புத் திட்டங்கள்

  • மேலும் ஒரு திட்டத்தை தொடங்கி வைத்து, அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, செலவு செய்து அதில் முன்னேற்றம் இல்லையென்றால் அது வளா்ச்சியின் குறியீடு ஆகாது. மாறாக, அது மக்களிடம் வாக்குப் பெறவும், வரிப் பணத்தை விரயம் செய்யவுமே பயன்படும்.
  • இதற்கிடையில் வறுமையை மேலாண்மையுடன் தொடா்புபடுத்தி அதை சா்வதேச அளவில் மேம்படுத்தி செயல்படுத்திக் காட்டிய மறைந்த கோயம்புத்தூா் கிருஷ்ணராவ் பிரஹலாத் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
  • அதற்காக அவா் ‘பாட்டம் ஆஃப் த பிரமிட்ட (கூம்பின் கீழ்தட்டு) என்று ஒரு வரையறையை வகுத்தெடுத்து கிராமப்புற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் நுகா்வு கலாசாரத்துக்கு ஏற்றாற்போல் பன்னாட்டு நிறுவனங்களின் பொருள்களின் விற்பனை உத்தியைக் கையாள சில அறிவுரைகளையும் கோட்பாட்டையும் வகுத்தாா்.
  • அதாவது, ‘பாட்டம் ஆஃப் த பிரமிட்’ என்னும் தளத்தில் இயங்குவதற்கு நியாயமான விலை, தரம், நிலையான மற்றும் ஆகியவற்றிலிருந்து லாபம் போன்ற கூற்றுகளை கையாள வலியுறுத்தினாா்.
  • மேலும் அதன் விளைவாய் உருவானதுதான் ‘ரூ.10 மதிப்புடைய ஒரு பொருளை ஒருவரிடம் விற்பதைவிட, அதை பத்து பாக்கெட்டுகளாகப் பிரித்து ஒரு ரூபாய்க்கு விற்றால் எளிதில் விற்பனையும் அதிகரிக்கும், அடிமட்டத்தில் உள்ள மக்களின் நுகா்வு பாங்கும் அதிகரிக்கும்’ என்று உறுதிபடக்கூறினாா். அப்படி அவா் கூறிய அந்தத் தாரக மந்திரத்தை நிறுவனங்கள் கையாண்டதால்தான் இன்றும் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பெட்டிக் கடையிலும் வியாபாரம் நடக்கிறது.
  • இப்படிப் பல வழிகளில் ஏழ்மையை உடைக்க முற்பட்டாலும் உலகளாவிய பட்டினி மதிப்பீட்டில் இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைவிட இந்தியா பின்தங்கியுள்ளது.
  • இருப்பினும் ஓா் ஆறுதலாக உலக வங்கியின் அறிக்கை இந்தியாவில் உள்ள 100 கோடி மக்கள் ஏழ்மை என்னும் பட்டியலிலிருந்து முன்னேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

நன்றி: தினமணி (31-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்