TNPSC Thervupettagam

வலுப்பெறும் இந்திய - அமெரிக்க உறவு

June 27 , 2023 563 days 310 0
  • பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க அரசு முறைப் பயணம், சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. பிரதமராக மோடி பொறுப்பேற்ற இந்த ஒன்பது ஆண்டுகளில், இந்திய-அமெரிக்க உறவில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முந்தைய பயணங்களைப் போலல்லாமல், அமெரிக்க அரசின் அழைப்பில் மோடி மேற்கொண்ட முதல் பயணம் இது.
  • அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு பிரான்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குத்தான் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ‘அமெரிக்காவின் நெருக்கமான நண்பனாக இந்தியா மாறிவருகிறது’ என பிரிட்டனிலிருந்து வெளிவரும் ‘தி எகானமிஸ்ட்’ இதழ் சொல்வதன் சான்றாக இந்தப் பயணம் அமைந்தது. உக்ரைன் போர், பொருளாதார நெருக்கடி போன்ற சமீபத்திய சர்வதேசப் பிரச்சினைகளுக்கான தீர்வாக இந்தச் சந்திப்பு பல ஒப்பந்தங்களுக்கு வழிவகுத்துள்ளது.
  • இந்திய-ரஷ்ய உறவு நீண்ட கால வரலாற்றைக் கொண்டது. எண்ணெய், ஆயுதங்களுக்கு இந்தியா பெரும்பாலும் ரஷ்யாவையே நம்பியிருக்கிறது. உக்ரைன் போர் விஷயத்திலும் இந்தியா, ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்களில் வாக்களிக்க மறுத்துவிட்டது. ரஷ்ய ஆயுத ஏற்றுமதியில் 20% இந்தியாவுக்கானது. ஆனால், ரஷ்யச் சார்பிலிருந்து இந்தியா தற்போது படிப்படியாக நீங்கிவருகிறது.
  • உக்ரைன் போரின் காரணமாக ரஷ்யாவால் இந்தியாவுக்கு வாக்குறுதி அளித்த ஆயுங்களைத் தர இயலாமல் போனது. அதனால், இந்தியா ஆயுதக் கொள்முதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளை நாட வேண்டியுள்ளது. இந்தப் பின்னணியில், பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கடல் பாதுகாப்புக்கான அமெரிக்க ட்ரோன்களை வாங்க வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட கால விருப்பம்.
  • அதற்கான இசைவு இந்தப் பயணத்தின் வழி கனிந்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புக் கூட்டணிக்கும் சில நேட்டோ நாடுகளுக்கும் மட்டுமே இந்த ட்ரோன்களை அமெரிக்கா அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தொழில்நுட்பத்தை யாருக்கு அளிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா திட்டவட்டமாக உள்ள நிலையில், தற்போது இந்தியாவுக்கு அளித்திருப்பதன் மூலம் இந்தியாவின் நெருக்கமான நண்பன் என்பதை அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது.
  • சீனா, பாகிஸ்தான் நாடுகள் இந்திய எல்லையில் அத்துமீறி வரும் நிலையில், எல்லைகளைப் பாதுகாக்கவும் இந்த ட்ரோன்கள் பயன்படும் என இந்தியா நம்புகிறது. விற்பவர்-வாங்குபவர் என்பதற்கும் அப்பால் மேம்பாட்டிலும் உற்பத்தியிலும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது.
  • இதன் பலனாக அமெரிக்காவுடன் இணைந்து போர் விமானங்களைத் தயாரிப்பதற்கான திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அமெரிக்காவும் இப்போதுதான் உணர்ந்துள்ளது என இந்தோ-பசிபிக் பாதுகாப்புத் திட்ட இயக்குநர் லிசா கர்டிஸ் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பப் பாகங்கள் உற்பத்தியில் இணைந்து செயல்படுவதன் வழி இரண்டு நாடுகளும் பலன் அடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் கவனிக்கத்தக்கது. சர்வதேசச் சூழலைச் சாதகமாகக் கையாள்வதில் இந்திய வெளியுறவுத் துறையின் சாமர்த்தியத்தை உக்ரைன் போரை உதாரணமாகக் கொண்டு அறியலாம். இந்த மாற்றம், இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மேலும் முன்னேற்றம் ஏற்படுத்தும் என நம்பலாம்.

நன்றி: தி இந்து (27  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்