- பாரதியின் நூல்கள் நாட்டுடைமை யானதை அறிவோம். ஆனால், நாட்டுடைமையானது அவ்வளவு எளிதாக இல்லை. அதற்காகப் போராட வேண்டியிருந்தது.
- நாட்டுடைமையாக்கு வதற்கு ‘பாரதி விடுதலைக் கழகம்’ என்று ஒரு அமைப்பே உருவாக்கப்பட்டது. அதன் தலைவர் நாரண.துரைக்கண்ணன். ஒரு செயலாளர் திருலோக சீதாராம்; இன்னொரு செயலாளர் வல்லிக்கண்ணன்.
- வல்லிக்கண்ணனின் சொந்த ஊர் நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம். என்றாலும், அவர் பிறந்தது 12.11.1920 அன்று நாங்குநேரி அருகே உள்ள திசையன்விளை என்ற ஊரில்தான். அவர் தந்தை அரசுப் பணியில் இருந்தார். மத்திய வர்க்கக் குடும்பம். பத்தாவது வயதில் தந்தையை இழந்த வல்லிக்கண்ணனுக்குக் கல்லூரிப் படிப்பு எட்டாக் கனியாயிற்று.
சாதாரணரின் இலக்கிய ஆவேசம்
- வல்லிக்கண்ணனின் வாழ்க்கை மிக எளிமையானது. “அனைத்துத் தரப்பினரும் வியந்து பாராட்டக்கூடிய ஒரு சாகச நாயகன் இல்லை நான். நான் ஒரு சாதாரணன். எனது வாழ்க்கையும் சாதாரணமானதுதான். பலரையும் வசீகரிக்கக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் எனக்கு எதிர்ப்பட்டதும் இல்லை, அத்தகைய சுவாரசியமான அனுபவங்களை நான் தேடிச் சென்றதுமில்லை, ஆக்கிக்கொள்ளவும் இல்லை” என்கிறார் வல்லிக்கண்ணன்.
- இந்தச் சாதாரண மனிதனுக்குள் ஒரு இலக்கிய ஆவேசம் இருந்தது. இலக்கியத்தைத் தாண்டிய ஒரு வாழ்க்கையை அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
- இலக்கியம்தான் அவருக்கு மனைவி. சென்னை செல்ல வேண்டும், எழுத்தாளனாக வேண்டும் என்பதே அவர் இலக்கு. என்றாலும், வாழ்க்கைச் சூழ்நிலை அவரை உத்தியோகம் பார்க்க வைத்தது. எழுத்தாளராக ஆசைப்பட்டவர், எழுத்தராக பரமக்குடியில் உள்ள விவசாய அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
- வல்லிக்கண்ணன் கூறுகிறார்: “முதல் சம்பளம் கிடைத்ததும் ரொம்ப சந்தோஷம் ஏற்பட்டது. பத்தொன்பது ரூபாய்தான் சம்பளம். என்றாலும், நான் வேலை பார்த்து அடைந்த முதலாவது சம்பளம் அது. சாப்பாடு ஓட்டலுக்கு ஒன்பது ரூபாய். ஊருக்கு, வீட்டுக்கு ஐந்து ரூபாய் அனுப்பினேன். மீதம் ஐந்து ரூபாய் இருந்தது. அதை என்ன செய்வது என்று விளங்காத நிலையிலேயே அன்று நான் இருந்தேன்.
- “பல்பொடி, தலைக்குத் தேய்த்துக்கொள்ள எண்ணெய், கடிதம் எழுதத் தபால் கவர் இப்படி முக்கியமானவற்றை வாங்க ஒரு ரூபாய் போதுமானதாக இருந்தது. சாப்பாடு போக அதிகப்படியாகத் தின்பண்டம், மாலை டிபன், காபி என்று எந்த வழக்கம் அல்லது பழக்கமும் இருந்ததில்லை.
- பணத்தை என்ன செய்ய?” மீதிப் பணத்தைப் புத்தகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் செலவழித்தார் வல்லிக்கண்ணன். அது அவரை ஒரு இலக்கியவாதியாக ஆக்கியது.
எழுத்தே வாழ்க்கை
- எழுத்துதான் வாழ்க்கை என்று தீர்க்கமாக முடிவெடுத்த வல்லிக்கண்ணனுக்கு அரசுப் பணியில் தொடரச் சற்றும் விருப்பம் இல்லை.
- 1941-ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டுத் தன் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். நடந்தே சென்னை செல்லத் துணிந்தார். மதுரை வரை நடந்தே வந்தார்.
- இலக்கிய மோகம் அவரை இயக்கியதால்தான் அது சாத்தியமாயிற்று. ஆனால், அவருடைய உறவினர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி திருநெல்வேலிக்குத் திருப்பிவிட்டார்கள்.
- இருந்தாலும், அவருள் இருந்த எழுத்தாளன் வென்றான். புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘திருமகள்’ பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர், கோவையிலிருந்து வெளிவந்த ‘சினிமா உலகம்’, சென்னையில் ‘நவசக்தி’, துறையூரில் ‘கிராம ஊழியன்’ முதலிய பத்திரிகைகளில் பணியாற்றிவிட்டு சென்னைக்கு வந்தார்.
- ‘ஹனுமன்’ பத்திரிகையில் சிறிது காலம் இருந்துவிட்டு, 1952 முதல் வணிகப் பத்திரிகைகளின் ஆதரவு இல்லாமல் சுதந்திர எழுத்தாளராகத் திகழ்ந்தார். பணம் என்ற எண்ணம் அவருக்கு எப்போதும் இருந்ததில்லை. அதனால், திரைப்படங்களில் வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தபோதும் அதை உதறித்தள்ளினார்.
- ‘லைலா மஜ்னு’ திரைப்படத்தில் சில காட்சிகளுக்கு வசனம் எழுதியபோதும் அடுத்து வந்த வாய்ப்புகளை அவர் நிராகரித்தார்.
- வல்லிக்கண்ணன் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன் ஆகியவர்களே அவரைச் செதுக்கிய சிற்பிகள்.
- பாரதிதாசன் கவிதைகள் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்டன, மனப்பாடமாக மேடைகளில் முழங்கினார்கள் என்றாலும் பாரதிதாசனைப் பற்றி முதலில் விமர்சன நூல் எழுதியவர் வல்லிக்கண்ணன்தான்.
- வல்லிக்கண்ணன் ஒரு பன்முக எழுத்தாளர். அவர் தொடாத துறை கிடையாது. சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, நாடகம், திரைப்படம், வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று பல்துறையிலும் தடம் பதித்தவர்.
- வல்லிக்கண்ணன் 10 நாவல்கள் எழுதியுள்ளார். ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’, ‘சரஸ்வதி காலம்’, ‘பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை’, ‘தீபம் யுகம்’, ‘டால்ஸ்டாய் கதைகள்’, ‘எழுத்தாளர்கள் பத்திரிகைகள் அன்றும் இன்றும்’, ‘தமிழில் சிறுபத்திரிகைகள்’ ஆகியவை குறிப்பிடத் தக்கவை. அவருடைய ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ கட்டுரை நூல் 1978-க்கான சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது.
நிலைபெற்ற நினைவுகள்
- ஜெயகாந்தன் ஒருமுறை வல்லிக்கண்ணனைப் பார்த்து, “நீங்கள் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதுங்கள். அது உங்கள் வரலாறாக மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பண்பாட்டுக் கலாச்சார மற்றும் இலக்கியப் பதிவாகவும் அமையும்” என்றார்.
- அந்த வேண்டுகோளை ஏற்று வல்லிக்கண்ணன் ‘நிலைபெற்ற நினைவுகள்’ என்ற தலைப்பில் எழுதத் தொடங்கினார்.
- முதல் பாகம் 2005-ல் வெளியானது. இரண்டாம் பாகம் முழுமை அடையாத நிலையில் 9.11.2006 அன்று மறைந்தார்.
- அவருடைய இலக்கியப் பணியை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு அவர் படைப்புகளை 2008-ல் நாட்டுடைமையாக்கியது. ஆம், பாரதியின் படைப்புகளை நாட்டுடைமையாக்கக் களம் கண்ட வல்லிக்கண்ணனின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
- பாரதியின் நூல்களை நாட்டுடைமை ஆக்க அவர்செய்த பணியைத் தமிழகம் உரிய முறையில் அங்கீகரிக்கவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்க வேண்டும். அதனால்தான் “அரசியல் கட்சி சார்ந்ததாக இருந்திருந்தால், அல்லது புகழும் பாராட்டும் நாடுவோரின் முயற்சியாக இருந்திருந்தால், ஆண்டுதோறும் விழா நடத்தியும், வெள்ளிவிழா, பொன்விழா என்று ஆர்ப்பாட்டங்கள் செய்தும் இச்சாதனை விளம்பர வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.
- வல்லிக்கண்ணனுக்கு 80 வயதானபோது வெளியிடப்பட்ட மலரில் ஜெயகாந்தன் கூறியது ஆத்மார்த்தமானது. “அவருக்கு இப்போது வயது எண்பது ஆகிறது. அவரது இலக்கிய வாழ்க்கை வணங்கத் தக்கதும், வழிபடத் தக்கதும் ஆகும்.
- அவரைச் சுற்றி வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நேரினும் அந்த மாற்றங்களை, அறிவாலும் சிந்தனையாலும் ஆக்கபூர்வமாய் வெளியிடும் திறனாலும் தவிர, தன் அளவில் எத்தகைய பாதிப்புகளுக்கும் ஆளாகாத ஓர் ஆத்ம யோகி அவர்.”
நன்றி : இந்து தமிழ் திசை (13-11-2020)