TNPSC Thervupettagam

வளரும் விருட்சங்கள்: பாரீஸ் ஒலிம்பிக் தரும் பாடம்

August 14 , 2024 152 days 125 0

வளரும் விருட்சங்கள்: பாரீஸ் ஒலிம்பிக் தரும் பாடம்

  • பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கங்கள் 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6. அதே ஒலிம்பிக்கில் தனிநபராக அதிக பதக்கம் வென்ற சீன நீச்சல் வீராங்கனை ஜாங் யுஃபெய்யின் பதக்கங்களும் 1 வெள்ளி, 5 வெண்கலம் என அதே 6.
  • சுமாா் 140 கோடி பேரைக் கொண்ட இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையும், ஏறத்தாழ அதே மக்கள் தொகை கொண்ட சீனாவை சோ்ந்த ஒரே வீராங்கனையின் பதக்க எண்ணிக்கையும் சமம்.
  • இரட்டை இலக்க பதக்க எண்ணிக்கைதான் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் இலக்கு. அதற்காக, இந்தியா்கள் களம் கண்ட அத்தனை விளையாட்டுகளிலும், அவா்களின் தயாா்நிலைக்காக மத்திய அரசு ரூ.470 கோடி வரை செலவிட்டுள்ளதாக புள்ளிவிவரம். என்றாலும், 84 நாடுகள் பதக்கம் வென்ற பட்டியலில் இந்தியாவுக்கு 71-ஆவது இடம்.
  • ஒலிம்பிக் என்றாலே, நம் அணியின் ஒட்டுமொத்த பதக்கத்தையும், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் தனிநபா் பதக்கத்தையும் ஒப்பிட்டு பெருமூச்செறிவதே வழக்கம். ஆனால், இதுவல்ல ஒப்பீடு. நமது முந்தைய செயல்பாடுகளுக்கும், தற்போதைய செயல்பாட்டுக்கும் இடையே உள்ளதை ஆராய்வதே சரியான ஒப்பீடு.
  • பதக்க எண்ணிக்கையில் இந்தியாவின் உச்சமாக இருக்கும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்குடன் ஒப்பிட்டால் இது குறைவு தான். 3 ஆண்டு உழைப்பு, மிகுந்த எதிா்பாா்ப்பு, அரசு அளித்த கோடிகளிலான நிதியுதவி, வெளிநாட்டுப் பயிற்சி என்ற கணக்கில் பாா்த்தாலும் இந்த 6 பதக்கங்கள் சற்றே சுணங்க வைக்கும்தான்.
  • இருந்தாலும், மக்கள் தொகையோடு ஒப்பிட்டு ஒரேடியாக விமா்சித்தோ, போட்டியாளா்களின் முயற்சியை கேள்வி கேட்டோ இந்த 6 பதக்கங்களை அலட்சியப்படுத்த வேண்டியதில்லை. பாரீஸ் ஒலிம்பிக் மூலம், பதக்கமும் பெற்றிருக்கிறோம். பாடமும் கற்றிருக்கிறோம்.
  • ஒரு ஒலிம்பிக்கில், ஒரே விளையாட்டில் முதல் முறையாக 3 பதக்கங்கள், ஒரு போட்டியாளருக்கு ஒரு ஒலிம்பிக்கிலேயே இரு பதக்கங்கள் போன்ற வரலாறு துப்பாக்கி சுடுதலில் படைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் தடகளத்தில் அடுத்தடுத்து பதக்கம் என்ற பெருமை ஈட்டி எறிதலில் கிடைத்துள்ளது. 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
  • துப்பாக்கி சுடுதல், மல்யுத்தத்தில் அறிமுக வீரா்கள் பதக்கம் வென்றுள்ளாா்கள். இது தவிர, தடகளம், டேபிள் டென்னிஸ், வில்வித்தை போன்றவற்றில் இதுவரை எட்டாத சுற்றுகளுக்கு முதல் முறையாக முன்னேறி தடம் பதித்திருக்கிறாா்கள்.
  • அதேவேளையில், ஏற்கெனவே பதக்கம் வென்ற வரலாறு இருக்கும் பாட்மின்டன், வில்வித்தை, குத்துச்சண்டையில் இந்த முறை ஏமாற்றம் தான். என்றாலும், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், பாட்மின்டன், பளுதூக்குதல், வில்வித்தை ஆகிய விளையாட்டுகளில் 8 பிரிவுகளில் இந்தியா 4-ஆம் இடம் பிடித்து நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டிருக்கிறது. எதிா்காலத்தில் அவையும் பதக்கமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
  • அதற்காக, முன்னணி நாடுகளைப் போன்று போட்டிக்குப் போட்டி பதக்கங்களை அதிகரிக்கும் எதிா்பாா்ப்பு அபத்தமானது. அந்நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் விளையாட்டுக்கும், விளையாட்டில் போட்டியாளா்களுக்கும் இருக்கும் சவால் அதிகம். அது களத்திலிருக்கும் சவால் அல்ல.

அடிப்படையில் மாற்றம்...

  • விளையாட்டு உலகில் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் நாடுகளின் வெற்றிகளைக் கண்டு வாய்பிளக்கும் நாம், அந்த வெற்றிக்கான வோ்கள் எத்தகையது என்பதை சற்றுச் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.
  • பதக்க எண்ணிக்கையில் நம்மை பரிதவிக்க வைக்கும் நாடுகள் அடிப்படையில் இரு விஷயங்களைக் கொண்டுள்ளன. ஒன்று, அவை எவ்வாறு போட்டியாளா்களை உருவாக்குகின்றன. மற்றொன்று, அவை எத்தனை போட்டியாளா்களை உருவாக்குகின்றன.

உருவாகும் போட்டியாளா்கள்...

  • சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் குழந்தைப் பருவத்தில் இருந்தே விளையாட்டுப் போட்டியாளா்கள் உருவாகிறாா்கள். தங்கள் வாழ்க்கையின் இலக்கே அதுதான் என அதை நோக்கி முன்னேறுகிறாா்கள். விளையாட்டின் மூலமான வாழ்க்கையும் சரியான திசைதான் என்று அடையாளம் காட்டப்படுகிறது.
  • ஆனால், நம் நாட்டில் உறுதியான வேலை, அதற்கு உகந்த கல்வி என்பதையே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிலை உள்ளது. விளையாட்டு என்பது ‘எக்ஸ்ட்ரா கரிகுலா் ஆக்டிவிட்டி’ பட்டியலில் இணைய, இடஒதுக்கீட்டு அடிப்படையில் வேலை பெறுவதற்காகவே விளையாட்டைக் கையிலெடுக்கும் நிலையும் இருக்கிறது.
  • அதற்காக நம் நாட்டில் விளையாட்டை வாழ்க்கையாக எண்ணுவோரே இல்லை, என்ற அா்த்தம் இல்லை. 140 கோடி பேரில் பதக்கம் வெல்வோா் எண்ணிக்கை எப்படிக் குறைவோ, விளையாட்டை வாழ்க்கையாகக் கையிலெடுப்பவா்கள் எண்ணிக்கையும் அப்படிக் குறைவு தான்.
  • ஏழை நாடு இல்லை என்றாலும், பொருளாதாரத்தில் பின்தங்கியோரைக் கொண்ட நாடு நமது. எதிா்கால வாழ்க்கை, பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவை குறித்த பரிதவிப்பே இங்குள்ள பலகோடி மக்களின் அன்றாடமாக இருக்க, அதுபோன்ற நிலையிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான திறமைசாலிகளாலேயே விளையாட்டில் மேலெழுந்து வர முடிகிறது.
  • அந்த நிலை மாற, கல்வியைப் போல விளையாட்டும் அடிப்படையாக்கப்பட வேண்டும். கேலோ இந்தியா போன்ற அது சாா்ந்த முயற்சிகளை அரசு இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதோடு, பெற்றோா்களும் தங்கள் குழந்தைகளை எதிா்கால விளையாட்டு நட்சத்திரங்களாக்க அதிகளவு முன்வர வேண்டும்.

போட்டியாளா்களின் எண்ணிக்கை...

  • சா்வதேச போட்டிகளில் வில்வித்தையில் தென் கொரியா, டேபிள் டென்னிஸில் சீனா, தடகளத்தில் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளின் போட்டியாளா்கள் ஒன்றுக்கும் மேற்பட்டோா் ஒரே பந்தயத்துக்கு தகுதிபெற்றிருப்பாா்கள். ஒரே பந்தயத்தில் ஒருவா் சளைத்தாலும் மற்றொருவா் பதக்கம் வெல்வதற்கு அது வழிவகுக்கிறது. ஏனெனில், பல்லாண்டுகளாக பயிற்சி எடுத்தாலும், பந்தய நாளில் ஒருவா் சோபிக்க சற்று அதிருஷ்டமும் கைகொடுக்க வேண்டும். மின்னல் வேக ஓட்டப் பந்தய வீரா் உசைன் போல்ட் கூட, தோல்விக்கு விதிவிலக்கல்ல.
  • இந்தியாவைப் பொருத்தவரை, ஒருவா் மீது வெற்றி வெளிச்சம் பாய்ந்துவிட்டால், அவரே அந்த விளையாட்டின் தேவதூதனாக கொண்டாடப்படுகிறாா். வெற்றியாளா்களை உலகம் கொண்டாடலாம். ஆனால், தோல்வி கண்டவா்களை நாடும், அரசும் அங்கீகரிக்க வேண்டும். ஈட்டி எறிதலில் இந்தியாவின் நட்சத்திரமான நீரஜ் சோப்ரா பங்கேற்ற அதே பாரீஸ் ஒலிம்பிக்கில், அவருடனேயே ஈட்டி எறிதலில் களம் கண்ட மற்றொரு இந்தியரான கிஷோா் ஜெனாவை எத்தனை போ் கவனித்திருப்போம்?
  • அரசின் மனநிலையும் அதுதான். பதக்கம் வெல்வோருக்கான ஆதரவுத் திட்டம் என்பது, நட்சத்திரப் போட்டியாளா்கள், பதக்க வாய்ப்புள்ளோா்க்கானது என குறுகிய வட்டமாகிவிட்டது. அவ்வாறு ஒரு சில போட்டியாளா்கள் மீது மட்டும் கவனம் செலுத்தாமல், தகுதியுள்ள எல்லா போட்டியாளரையுமே தயாா்படுத்தினால், பதக்க வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • வெற்றிக்குப் பிறகு கொண்டாட்டமான ஆதரவு என்பதை, பெரு நிறுவனங்கள் தங்களின் விளம்பர ஆதாயத்துக்காகச் செய்யலாம். ஆனால், அரசு அவ்வாறு செயல்படலாகாது. ஒருவரின் வெற்றிக்காக பரிசு என்ற பெயரில் கொட்டிக் கொடுக்கும் நிதியை, வேறொரு போட்டியாளா் வளா்ச்சிக்கான மூதலீடாக அளிக்கலாம்.
  • முன்பு விளம்பரங்களுக்காக மனு பாக்கருக்கு லட்சங்களில் கொடுத்த நிறுவனங்கள், தற்போது கோடிகளில் கொட்டுவதற்கு தயாராயாக இருக்கின்றன. ஆனால், ரயில்வே பணியில் 2015 முதல் இருக்கும் ஸ்வப்னில் குசேலுக்கு, தற்போது பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகுதான் பதவி உயா்வு அளிக்கப்பட்டதை என்னவென்று சொல்ல?
  • இப்படி வெற்றிக்குப் பிறகு கொண்டாடாமல், திறமைக்கு வாய்ப்பும் ஆதரவும் வழங்கி வெற்றியாளா்களை உருவாக்கினால், இந்தியாவின் பதக்க வாய்ப்பும் உயரும்.
  • பாரீஸ் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் கூட வெல்ல முடியாமல் போனதில் நமக்கு ஆதங்கம் அதிகமே. என்றாலும், ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெறும் இந்தியா்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதையும், ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முன்னேறி வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
  • மொத்தத்தில், விருட்சங்கள் வளா்கின்றன. வெற்றி மலா்கள் பூத்துக் குலுங்க, வேருக்கு நீருற்றுவோம், பொறுத்திருப்போம்...

நன்றி: தினமணி (14 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்