TNPSC Thervupettagam

வளர்ச்சிக்கு அறிவியலே அடித்தளம்!

February 28 , 2020 1783 days 819 0
  • ஓர் ஊடகத்தின் வழியே ஒளி ஊடுருவும்போது ஏற்படும் ஒளிச்சிதறல்களின் அடிப்படையில், வெளியேறும் ஒளி அலைகளின் அலைநீளம், அதிர்வெண், ஆற்றல் மாறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து முடிவுகளை வெளியி ட்ட தினம் 1928-ஆம் ஆண்டு, பிப்ரவரி 28.   இந்த ஆய்வு சர் சி.வி. ராமன், கே. எஸ்.கிருஷ்ணன்  ஆகியோரால் இணைந்து முன்னெடுக்கப்பட்டது. 

கண்டுபிடிப்பு

  • இந்த கண்டுபிடிப்புக்காக 1930-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு சர் சி.வி.ராமனுக்கு வழங்கப்பட்டது. முதன்முதலில் 1954-இல் நமது நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா சர் சி.வி. ராமனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 
  • 1987-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிப்.28-ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தத் தினத்தில் நாடு முழுவதும்  உள்ள  பள்ளி, கல்லூரிகளில், ஆய்வு மையங்களில் ஊக்கத்தை ஏற்படுத்தும்  வகையில்  அறிவியல் கண்காட்சிகள், கருத்தரங்குகள் செயல் மாதிரிகள் மூலம் மக்கள் மத்தியில்  அறிவியல் சிந்தனை வழிமொழியப்படுகிறது. 
    இந்திய அறிவியல் இதழின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று,  கட்டுரைகள் தொடர்ந்து வெளிவர அடித்தளமிட்டார் சர் சி.வி.ராமன். நூற்றாண்டை நோக்கி இந்தியாவின் மூத்த அறிவியல் சஞ்சிகை என்ற பெருமையோடு வெற்றி நடைபோடுகிறது இந்த ஆய்வு  இதழ்.

பல்வேறு திட்டங்கள்

  • பெங்களூரில் ராமன் ஆய்வுக் கழகம் என்று ஒன்றை தொடங்கி இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட அடிப்படை அறிவியலில் ஆய்வுகள் தொடர திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி பல சாதனைகள் புரிந்தவர் சர் சி.வி.ராமன். அவரின் அறிவியல் தாகமும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் இந்தியாவின் இளம் ஆய்வாளர்களுக்கு என்றும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. 
  • நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள்  கடந்தபோதும் அடிப்படை அறிவியலில் கோலோச்சிய எஸ்.என். போஸ், ஹோமி ஜகாங்கீர் பாபா, சர் சி.வி.ராமன், ஜெகதீஷ் சந்திர போஸ், சந்திரசேகர், சலீம் அலி முதலான அறிவியல் அறிஞர்களின் வீச்சு, சுதந்திரக் காற்றை சுவாசித்து, நான்கு மடங்கு மக்கள்தொகை பெருகியபோதும் இன்றும் அவர்களை நெருங்க முடியவில்லையே, ஏன் என்ற கேள்வி எல்லோருக்கும் நியாயமாக எழக்கூடியதுதான்.

ராமன் விளைவு

  • ராமன் விளைவு, ஒளி மூலம் பல ஆய்வுகளுக்கு வழி வகுத்து பல தாக்கத்தை இயற்பியலிலும், வேதியியலிலும் ஏற்படுத்தியது.  மக்களின் மனமும் மார்க்கமும் அறிவியலில் இருந்து ஒருமுகப்படவில்லை. அறிவியல் தொழில்நுட்பங்களை பயிற்றுவிப்பதற்கு நிறைய கல்வி நிறுவனங்கள்,  ஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்டன. அறிவியலைவிட பொறியியல், தொழில்நுட்பம் பயின்றவர்களுக்கு  வாய்ப்பும், வருவாய்ப் பெருக்கும் எளிதில் கிடைத்தது. இதன் காரணமாக  அறிவியல் இரண்டாம் பட்சமாக பார்க்கப்பட்டது.
  • அறிவியல் ஆர்வத்தோடு பயின்று, மேற்படிப்பையும்  ஆய்வையும் முன்னெடுக்க விரும்பியவர்கள் போதிய நவீன உபகரணங்கள், ஆய்வக வசதிகள், உதவித் தொகை போதுமான அளவில் கிடைக்காததால் அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து  சென்றனர்.
  • அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டும் உள்ள விஞ்ஞானிகளில்  36 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்று  புள்ளிவிவரம் கூறுகிறது.

முன்னேற்றம்

  • நமது நாட்டின் அறிவுச் செல்வங்கள் அந்நிய நாட்டிற்கு, அதன் முன்னேற்றத்துக்குப் பயன்படுவது ஆதங்கத்தை ஏற்படுத்தினாலும், அதில் உள்ள காரணிகளை அரசும் கல்வியாளர்களும்  ஆய்வுசெய்து பார்க்க வேண்டும். வளர்ந்த நாடுகளில் உள்ள ஆய்வக உபகரணங்கள், வசதிகள் இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் போன்றவற்றுக்கு வருவதற்கே 15 முதல் 20 ஆண்டுகள் ஆகிறது என அங்கு  பணிபுரியும் பேராசியர் கருத்தரங்கு ஒன்றில் வருத்தத்தைப் பதிவு செய்தார்.
  • அப்படியென்றால், மற்ற கல்வி நிலையங்களின் நிலை என்ன? அங்கு நடை பெறும் ஆய்வு முடிவுகள், நவீனத்துவம் ஆகியவற்றை  வைத்து,  சர்வதேச அளவில் எப்படிப் போட்டியிட முடியும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
    இந்தியாவில் நடைபெறும் முனைவர் பட்ட ஆய்வுகளில் பெரும் பகுதி சமூக மதிப்பிற்காகவும், வருமான உயர்வுக்காகவும், வேலைவாய்ப்பு திண்டாட்டத்திலிருந்து தப்பிப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அடிப்படைச் சித்தாந்தம் இருக்கின்ற வரையில் தரமான ஆய்வு முடிவுகள்  சந்தேகம்தான்.
  • அதிக மக்கள்தொகை கொண்ட நமது நாட்டில் உயர் கல்வி நிலையங்கள், அறிவியல் ஆய்வு மையங்கள் போதுமான எண்ணிக்கையில் உள்ளதா? கணக்கிற்கு எடுத்துக்கொள்ளப்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் உண்மையிலேயே ஆய்வு வசதிகளை வழங்குகின்றனவா? அப்படி இல்லையெனில் அதற்கான அரசின் முயற்சி என்ன என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

ஆய்வு நிதி

  • நமது நாட்டின் மொத்த ஜிடிபி மதிப்பில் ஒரு சதவீதத்தைக்கூட நிறைவாக நம்மால் ஆய்வு நிதியாக ஒதுக்க  முடியவில்லை. கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க நாம் பரிசுகளை, பட்டங்களை, விருதுகளை அறிவிக்கும் அதே நேரம், நம் நாட்டின் அறிவுச்சுடர்கள் அடுத்த நாட்டில் சென்று பங்களிப்பை வழங்குவதை தடுத்து, அவர்களுக்குத் தேவையான உரிய வசதிகளைச் செய்து கொடுத்து, இங்கேயே அவர்களைத் தக்கவைத்துக்கொள்ள அரசு ஆவன செய்யுமா?
  • நமது நாட்டில் நடைபெறும் 99 சதவீத ஆய்வுகள்  எழுத்துகளாக, தத்துவங்களாக, கோட்பாடுகளாக,  முன்மொழிவுகளாக ஏடுகளில்  இருக்கின்றன. அவை செயல்  வடிவம் பெற்று ஆக்கபூர்வ ஆராய்ச்சிகள்  நடந்து, தொழில் நிறுவனங்களும் ஆய்வு நிறுவனங்களும் இணைந்து செயல்படும்போது,  வர்த்தகச் சந்தையாக இருக்கும் நம் நாட்டின்  நிலை மாறி, உலகம் திரும்பிப் பார்க்கும் உண்மையான வளர்ச்சியைப் பெறும்.
  • அன்றுதான் புதிய இந்தியா  பிறக்கும். அதை நோக்கி  பீடு நடைபோட வீண் சர்ச்சைகள், பிரிவினைகளை  விலக்கி, மலிவு அரசியலை மக்கள் மனதிலிருந்து அகற்றி, அறிவியல் சிந்தனைகள் வளம் பெற போதுமான நிதி ஆதாரங்களை ஏற்படுத்த வேண்டும். வளரும் இளம் தலைமுறையினரிடம் ஆக்கச் சிந்தனை கொண்ட எண்ணங்களை உருவாக்கி, நிலையான திட்டங்களை வகுக்க வேண்டும்;  
  • அதன் மூலம் அறிவியல் ஆய்வுகளை வலுப்பெறச் செய்து, நோபல் பரிசு உள்ளிட்ட அங்கீகாரப் பட்டியலில் முன்னணி இடம்பிடித்து,  நாட்டை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதே இனி வரும் காலங்களில் தேர்தல் வாக்குறுதிகளாக இருக்க வேண்டும். 

நன்றி: தினமணி (28-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்