TNPSC Thervupettagam

வளர்ச்சிக்கு உற்ற துணை உயர் கல்வி

February 6 , 2024 341 days 281 0
  • ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடாக அங்கீகாரம் பெறுவதற்குத் துணை புரியும் அம்சங்களில் முக்கியமானது உயர் கல்வி. இந்தியாவில் உயர் கல்வி பெற்றவர்கள் 27.2% மட்டுமே என்பதால், இன்னமும் நாம் வளர்ந்துவரும் நாடாகவே கருதப்படுகிறோம்.
  • 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, நமது நாட்டில் உயர் கல்வி பெறத் தகுதி பெற்றவர்கள் (18 முதல் 23 வயது இளைஞர்கள்) 14 கோடிப் பேர். இந்தியாவில் 1,100 பல்கலைக்கழகங்கள், 53,000 கல்லூரிகள் இருக்கின்றன. எனினும், 4 கோடிப் பேர்தான் உயர் கல்வி பயில்கிறார்கள்.
  • அதில் 60% பேர் தனியார் கல்வி நிறுவனங்களில் படித்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை போதாது. ஏழைகள், நடுத்தரவர்க்க மக்களுக்கு உயர் கல்வி என்பது இன்னும் எட்டாக் கனியாகத்தான் இருந்துவருகிறது. உயர் கல்வி, தனிநபர் வருமான உயர்வுக்கான ஒரு நல்வாய்ப்பு.
  • இந்தியாவில் பல ஏழைக் குடும்பங்கள் உயர் கல்வியால் பொருளாதாரரீதியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியிருக்கின்றன. மத்திய–மாநில அரசுகள் மனது வைத்தால், சாதகமான இந்த அம்சத்தை மேலும் வளர்த்தெடுக்க முடியும்.

இந்தியாவில் கல்வியின் நிலை

  • கல்வியை மேம்படுத்த கோத்தாரி குழுவை மத்திய அரசு 1964இல் அமைத்தது. நாட்டின் மொத்த வருவாயில் 6%ஐக் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது. ஆனால், அது செயல்படுத்தப்படவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்துப் புதிய கல்விக் கொள்கையும் அதே பரிந்துரையை முன்வைக்கிறது. தற்போது ஒதுக்கப்பட்டுவரும் நிதி நிச்சயம் போதாது.
  • நெருக்கடிநிலைக் காலத்தின்போது 1976இல் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டுசென்றார், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. இப்போது தமிழ்நாடு உள்படப் பல மாநிலங்கள் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று போராடிவருகின்றன. கூடவே, கல்விக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்கிற குரல்கள் மேலும் அழுத்தம் பெற வேண்டும்.
  • ஊராட்சி அமைப்புகள் முதல் மத்திய-மாநில அரசுகள் வரை, ‘கல்விக்குச் செலவிடப்போகிறோம்’ என்று சொல்லி, குறிப்பிட்ட சதவீதம் வரி வசூல் செய்கின்றன. மறுபுறம், கல்விக் கட்டணங்கள் உயர்ந்தபடி இருக்கின்றன. கல்விக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.
  • அதற்குக் கல்வி நிறுவனங்களின் தேவை என்ன என ஆட்சியாளர்கள் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். கல்வியின் அடிப்படையில் நம் நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இதைக் குறைப்பதற்கு அனைத்துத் தரப்பினருக்கும் உயர் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
  • ஆசிய நாடுகளில் ஜப்பான், தென் கொரியா, சீனா ஆகிய நாடுகள் உயர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன. அதனால்தான் தனிநபர் வருமானம் அங்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. உயர் கல்வியில் 100% என்னும் இலக்கை எட்டிய நாடுகள் ஆஸ்திரேலியாவும் தென்கொரியாவும்தான். மக்கள்தொகையில் நம்மோடு போட்டி போடும் ஒரே நாடு சீனா.
  • 1980இல் இந்தியா - சீனா இரண்டு நாடுகளின் தனிநபர் வருமானம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. அதன் பிறகு, சீனா உயர் கல்விக்கு முக்கியத்துவம் தந்து பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது. இப்போது சீனாவின் தனிநபர் வருமானம் 12,500 டாலராக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் அது 2,600 டாலர்தான். உயர் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முக்கியச் செய்தி இது.

மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் 

  • இந்தியாவில் உயர் கல்வியிலும் இடைநிற்றல் இருக்கத்தான் செய்கிறது. உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை 27.2% என்றாலும், பட்டப்படிப்பை முடித்து பட்டதாரியாக வெளியே செல்பவர்கள் 10%தான். பள்ளிக்கல்வியில் இறுதி ஆண்டு வரை படிப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 50%. எனவே, இரண்டிலும் நிலவும் முட்டுக்கட்டைகளை நீக்குவதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். உயர் கல்வியில் இடங்களை அதிகரிப்பது மிக அவசியம். மருத்துவக் கல்வியில், ஒரு லட்சம் இடங்களுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். இந்தப் பற்றாக்குறை களையப்பட வேண்டும்.
  • தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகம். பிஹார், உத்தரப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள் இதில் பின்தங்கியிருக்கின்றன. வட மாநிலங்களில் தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதற்கு இது முக்கியக் காரணம்.
  • அனைத்து மாநிலங்களும் உயர் கல்வியில் முன்னேற்றம் கண்டால், நாட்டின் முன்னேற்றப் பாதை மேலும் துலக்கமாகும். உயர் கல்வியின் தரமும் உயர்த்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். போதுமான ஆசிரியர்களையும் நியமனம் செய்ய வேண்டும். இந்தப் பணிகளை மத்திய-மாநில அரசுகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வுசெய்ய வேண்டும். உயர் கல்வியில் அதிகமானோர் சேர இவையெல்லாம் துணைசெய்யும்.
  • சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் மதிப்பீட்டுக்கான சர்வதேசத் திட்டம் (Programme for International Student Assessment - PISA) என்ற அமைப்பு, உலக நாடுகளின் கல்வியைத் தரவரிசைப்படுத்தியது. இந்தியாவும் இந்தப் பட்டியலில் பங்கேற்றது. மொத்தம் 74 நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்ட அந்தப் பட்டியலில், இந்தியா 73ஆவது நாடாகப் பின்தங்கியிருந்தது. அதன் பிறகு இந்த அமைப்பின் பட்டியலில் பங்கேற்க விரும்பாமல் இந்தியா தவிர்த்துவிட்டது.

செய்ய வேண்டியவை 

  • உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் போதுமான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை தனியார் கல்வி நிறுவனங்களில்தான் அதிகம். இந்த உண்மையை அரசு பெருந்தன்மை யாக ஒப்புக்கொண்டு அவர்களுக்கு வரிச் சலுகைகள், மானியங்கள் போன்றவற்றை வழங்க வேண்டும்.
  • இவற்றையெல்லாம் செய்தால், தனியார் கல்வி நிறுவனங்களில் உயர் கல்விக் கட்டணம் குறைவதற்கான வாய்ப்பு உருவாகும். இவற்றின் மூலம் உலக அளவில் உயர் கல்வியில் சிறந்த நாடாக இந்தியாவை வளர்த்தெடுக்க முடியும். வளர்ச்சிப் பாதையிலும் வெற்றி நடை போட முடியும்!

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்