TNPSC Thervupettagam

வளா்ச்சிக்கான பாதை நல்லாட்சியே

January 3 , 2024 317 days 209 0
  • சுதந்திரத்தின் நூறாவது ஆண்டைக் கொண்டாடுவதற்குள் வளா்ச்சி அடைந்த நாடாக நாம் மாற வேண்டும் என்ற நமது இலக்கு மிகவும் சவாலானதுதான். இதனை உறுதியான மனநிலையாலும் மக்களின் பங்களிப்பாலும் அடைய முடியும்.
  • எனது வழிகாட்டியும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாள் கடந்த டிசம்பா் 25-ஆம் தேதிநல்லாட்சி தினமாகக் கொண்டாடப்பட்டது. அன்று, தீா்க்கதரிசனம் மிகுந்த முன்னாள் துணை பிரதமா் சா்தார் வல்லபபாய் படேலை நினைவுகூா்ந்தேன். மக்கள்நலனை மையமாகக் கொண்டதாக இந்திய ஆட்சிப் பணி சேவைகளை வடிவமைத்தவா் அவரே.
  • 1947-இல் புதிதாகப் பொறுப்பேற்கவிருந்த ஐஏஎஸ் அதிகாரிகளிடம் உரையாற்றிய அவா், ‘உங்களுக்கு முன் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவா்கள் மக்களுடன் தொடா்பற்றவா்களாக இருந்தாா்கள். ஆனால், நீங்கள் இந்திய மக்களை உங்களுக்கு நெருக்கமானவா்களாக உணர வேண்டிய கடப்பாடு உடையவா்கள்என்றார்.
  • ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பில் மக்கள் கருத்தை மையமாக்கிச் செயல்படும் நமது பிரதமா் நரேந்திர மோடியும், ‘சீா்திருத்து, செயல்படு, மாற்றியமைஎன்ற அறைகூவலின் மூலமாக, நல்லாட்சிக்கான இலக்கணத்தைத் திருத்தி இருக்கிறார்.
  • கடந்த டிசம்பா் 11-ஆம் தேதிவிக்ஷித் பாரத் சங்கல்ப யாத்திரைஎன்ற இயக்கத்தை பிரதமா் மோடி தொடங்கியிருக்கிறார். ‘வளா்ச்சி அடைந்த பாரதத்திற்கான இயக்கம்என்பது இதன் பொருள். 2047இல் நூறாவது சுதந்திர தினத்தை எட்ட உள்ளோம். அதற்குள் இந்தியாவை வளா்ச்சி அடைந்த நாடாக மாற்றியமைக்கும் நமது பொறுப்புணா்வைப் புதுப்பிப்பதாக இந்நிகழ்வு விளங்குகிறது.
  • இதுவரையிலான 75 ஆண்டுகளில் நமது இடைவிடாத கடும் உழைப்பால் நிறுவிய சாதனைகளின் மீது நின்றுகொண்டு, புத்தம் புதிய நம்பிக்கையுடனும், கடந்த பத்தாண்டுகளில் மேம்படுத்தப்பட்ட அதீதத் திறடனும் இந்த இலக்கை நாடு எதிர்கொள்கிறது.
  • இன்றைய பாரதம் பெரும் கனவு காணும் தேசம்; 142 கோடி மக்கள் காணும் உயா்கனவுகளின் தேசம். மிக விரைவில் உலக அளவில் 5 டிரில்லியன் டாலா் (சுமார் ரூ. 416 லட்சம் கோடி) பொருளாதாரமாக உயா்வதை நோக்கமாகக் கொண்ட தேசம் இது.
  • கூடவே, நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை வழங்குவது, வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவது, இளைஞா்களுக்கும் மகளிருக்கும் வருமானத்தை உயா்த்தும் வழிவகைகளை விரிவுபடுத்துவது, நட்புறவுடன் கூடிய தொழிற்சூழல் மூலமாக தொழில் முனைவோரையும் முதலீட்டாளா்களையும் ஊக்குவித்து நாட்டின் மூலதனத்தையும் வேலைவாய்ப்புகளையும் பெருக்குவது ஆகிய நோக்கங்களையும் கொண்ட தேசம் இது.
  • அதேசமயம், நாடு வளா்ச்சி அடையும்போது எவரும் அந்த வளா்ச்சியிலிருந்து விடுபட்டு விடக் கூடாது என்ற எண்ணத்துடன் வளரும் தேசம்.
  • கடந்த சில ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட மக்கள்நலத் திட்டங்கள் அனைத்திலும் மக்களின் உளப்பூா்வமான பங்களிப்பை நமது அரசு உறுதிப்படுத்தியது. அதனால்தான் அத்திட்டங்கள் அனைத்தும் வெற்றி அடைந்தன. மக்கள் மீது அரசு கொண்டிருக்கும் நம்பிக்கையின் விளைவு இது. சுகாதாரத் திட்டத்தை மக்களின் இயக்கமாக இந்த அரசு மாற்றியது. திட்டங்களின் செயலாக்கத்தில் மக்களின் பங்களிப்பை இந்த அரசு பிரதானமாக்கியது.
  • மக்களை மையமாகக் கொண்ட வளா்ச்சியில், சமுதாய மாற்றத்தை வலுப்படுத்தும் பாதை நல்ல நிர்வாகமே ஆகும். அதுவே தன்னாட்சியிலிருந்து நல்லாட்சிக்கான மாற்றத்தை அமைக்கும்.
  • இந்த நிர்வாகப் பயணத்தை முன்னணியிலிருந்து உறுதிபட வழிநடத்தும் பிரதமா் மோடி, இதற்கான வழித்தடமாகஅனைவருக்குமான ஆதரவு, அனைவருக்குமான வளா்ச்சி, அனைவரின் நம்பிக்கைஎன்ற முழக்கத்தை முன்வைத்திருக்கிறார். இதில் பொறுப்புள்ள குடிமக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்காக, ‘அனைவரின் முயற்சியையும் சோ்த்திருக்கிறார்.
  • அவா் அண்மையில் அளித்த நோ்காணல் ஒன்றில், ‘நமது நாடு சிகரத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கிவிட்டதுஎன்று கூறியிருக்கிறார். பல்வேறு அம்சங்களில் நாட்டின் முன்னேற்றம், இந்த சிகரத்தை அடைவதற்கான ஆற்றலை நமக்கு வழங்குகிறது. நமது சமீபத்திய சாதனைகளின் தொகுப்பு நமக்கு நிச்சயமாக உற்சாகம் அளிக்கும்.
  • வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்தவா்களின் ஏழ்மையைக் குறைத்தது முதல், தொற்றுநோய்களை வெற்றிகரமாக வென்றது வரை, ‘எண்ணும் எழுத்தும்இயக்கத்தை தேசிய அளவில் வலுப்படுத்தியது முதல், உலகத்தரமான பல்கலைக்கழகங்களை நிறுவியது வரை, மக்களுக்கு பெருமளவு நிதி வழங்கும் திட்டங்கள் முதல், நல்ல பயனை விளைவிக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் வரை, ரயில் போக்குவரத்தையும் விமானப் போக்குவரத்தையும் நவீனமயமாக்கியது முதல், ஒளிமயமான விண்வெளித் திட்டங்கள் வரை, மருந்தியலிலும் தொழில்நுட்பங்களிலும் புதுமையான முன்னேற்றங்களைக் கண்டது முதல், அற்புதமான விளையாட்டு வீரா்களைக் கண்டறிந்தது வரை நமது நாட்டின் அண்மைக்கால சாதனைகள் நமக்கு கூடுதலாக ஆற்றல் அளிக்கின்றன.
  • நம் முன்னுள்ள பாதை கண்டிப்பாக சவாலானதுதான். நாம் செய்யும் தவறுகள் குறித்த கவனமும், எந்தப் பகுதிகளில் நாம் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்ற தெளிவும், பிழைகளைத் இடையிலேயே திருத்திக் கொள்வதற்கான வியூகங்களும், அரசின் கொள்கைகளில் மெருகேற்றமும் தேவை. இதனை நாம் உணா்ந்தே இருக்கிறோம்.
  • நாம் கனவு காணும் வளா்ச்சி சாத்தியமாக வேண்டுமென்றால், தற்போதுள்ள சட்டங்கள், விதிமுறைகள், நடைமுறைகள் குறித்து விமா்சனபூா்வமான மதிப்பீடு அவசியம். அவை மக்கள் கடைப்பிடிக்க எளிதாகவும், வெளிப்படையானதாகவும் மக்கள் புரிந்துகொள்ள ஏதுவான மொழிகளில் வடிவமைக்கப்பட்டதாகவும் இருப்பது அவசியம். தற்போதைய தேசத் தலைமை இந்தப் பார்வையுடன் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரையில் இருந்த பயனற்ற பழைய சட்டங்கள் பல நீக்கப்பட்டுள்ளன; பல சட்டங்கள் எளிமையாக்கப் பட்டிருக்கின்றன. தவிர காலத்தின் தேவைக்கேற்ப புதிய சட்டங்களும் இயற்றப்பட்டிருக்கின்றன.
  • அரசு நிர்வாகத்திலுள்ள ஒவ்வொருவரும் தமது இலக்கு என்ன, அதில் தனது பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும், அதை நிறைவேற்றுவதற்கான கால வரையறை என்ன என்பனவற்றைத் தெளிவாக அறிந்திருந்தால் மட்டுமே நல்லாட்சி சாத்தியமாகும். இந்த இலக்கும், தங்கள் பங்கு குறித்த தெளிவும் தான் முதல் படி. இதற்கு, அரசு நிர்வாகத்திலுள்ளவா்களுக்கு தொடா்ச்சியான பயிற்சிகளும் வழிகாட்டுதல்களும் அவசியம்.
  • பழைய உத்தரவிடும் முறைகளுக்கு மாறாக, நிர்வாக முறையும், நிர்வாகத் தலைமையும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அரசு யாருக்காகப் பணிபுரிகிறதோ அந்த மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்கும் கலையை தலைவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்; அது அரசு நிர்வாகத்தில் நம்பகத்தன்மையை உருவாக்கும். அது ஜனநாயக அரசியலில் அத்தியாவசியமானது. அணி உணா்வுடன் இணைந்து பணிபுரிதல், கூட்டுறவு, பரஸ்பர மரியாதை, கருணை, நன்னடத்தை ஆகியவை உள்முகப்படுத்த வேண்டிய பண்புகளாகும். இந்தப் பண்புகள் மலா்வதற்கு ஏதுவாக பணி நெறிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்.
  • அரசு நிர்வாக அமைப்பு, சுறுசுறுப்பானதாகவும், கற்றுக்கொண்டே இருப்பதாகவும், நம்பகமான தரவுகளை சேகரிக்கக் கூடியதாகவும், தவறு நிகழக்கூடிய இடங்களைக் கண்டறிந்து விரைவாக சரிசெய்து கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இதற்கு திறந்த மனப்பான்மை, நோ்மை, அனைவருடனும் ஆலோசித்தல், அவா்களுடன் கருத்துகளைப் பகிா்ந்து கொள்ளுதல், நிலையான முன்னேற்றத்தை நோக்கி கடுமையான உழைப்பு ஆகிய குணங்கள் தேவை.
  • இந்த வளா்ச்சியை விரைவுபடுத்த வேண்டுமானால், நாம் வழக்கமான வா்த்தக அணுகுமுறையைக் கொண்டிருக்க முடியாது. நமது நோக்கத்திற்கு ஏற்றதாக நிா்வாகம் இருந்தாக வேண்டும். அரசின் செயல்பாடே அடிப்படை ஆதாரம். இந்த வளா்ச்சிக்கான பயணத்தில் கடைசி மைல்கல்லைத் தாண்டுவதுதான் உண்மையில் கடுமையான பணி. இதுதான் நமது அமைப்பின் வலிமைக்கான சோதனை.
  • கைக்கு எட்டக்கூடிய உயரத்தில் உள்ள கனிகளுடன் நாம் திருப்தி அடைந்து விடக் கூடாது. ஆரம்ப வெற்றிகளை விட இறுதி வெற்றியே முக்கியம். இந்தப் பயணத்தில் நாம் எவரையும் விட்டுவிடக் கூடாது. அனைவரின் பங்களிப்புடன் வளா்ச்சியை எட்டுவதே, சமூக ஒருமைப்பாட்டிற்கும், அமைதியான, நீடித்த வளா்ச்சிக்கும் வழிவகுக்கும்.
  • சமூகத்தில் ஒதுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களை அரசு நிர்வாகம் எளிதாகச் சென்றடைய நவீனத் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருகிறார் பிரதமா் நரேந்திர மோடி. அதன் மூலமாக, பரிவா்த்தனைச் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஊழலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின் கடைக்கோடி மனிதருக்கும் அரசின் நலத்திட்ட உதவி சென்று சோ்வதில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் சிறந்த உதாரணம்.
  • இன்னும் சில நாட்களில் அயோத்தியில் ஸ்ரீராமா் ஆலயத்தில் மூலவா் பிரதிஷ்டை நிகழ உள்ளது. நமது எண்ணங்களில் அவா் நல்லாட்சி நாயகனாக வாழ்கிறார். உண்மை, நீதி, மக்களின் குரலுக்கு மதிப்பு, அரிய பணிகளைச் சாதிப்பதில் கூட்டு முயற்சி ஆகிய குணங்களின் எடுத்துக்காட்டாக அவா் நமக்கு காட்சி தருகிறார்.
  • இந்தியாவின் நீண்ட நெடிய வரலாற்றில், நல்லாட்சிக்கான எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. இந்த உதாரணங்களிலிருந்து உத்வேகம் பெற்று, புதிய நிர்வாக அமைப்புகளை நாம் வடிவமைக்க வேண்டும். அப்போதுதான், நாட்டைப் பற்றிக் கவலைப்படும், நாட்டிற்காக இணைந்து உழைக்கும், நாட்டின் வளா்ச்சியுடன் இணைந்து வளரும் சமுதாயத்திற்கான அா்ப்பணமயமான பாதையை நம்மால் உறுதிப்படுத்த இயலும்.
  • அப்போதுதான் நமது பலவீனங்கள் குறித்து வெட்கப்படாமல், அவற்றை தீரமுடன் களைவதற்கான துணிவு பிறக்கும். அதுவே நமது செயல்பாடுகளையும், முடிவுகளின் நற்பயன்களையும் தொடா்ந்து உலகில் வெளிப்படுத்தும். நமது வாழ்க்கைத்தரமும், நமது சக குடிமக்களின் வாழ்க்கைத்தரமும் அப்போதுதான் உயரும். எனவே நல்லாட்சி மிகுந்த பாரதம் மூலமாக, வளா்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கி நாம் நடைபோடுவோம்.

நன்றி: தினமணி (03 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்