TNPSC Thervupettagam

வளா்ச்சியை நோக்கிய பாய்ச்சல்

January 13 , 2024 227 days 194 0
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று, ஐரோப்பாவில் நடந்துகொண்டிருக்கும் போர், மேற்கு ஆசிய நிகழ்வுகள், வளா்ச்சி அடைந்த நாடுகளில் காணப்படும் பணவீக்கம் ஆகியவற்றிற்கு இடையிலும் இந்திய பொருளாதாரம் தளா்ந்துவிடாமல் வளா்ச்சியை நோக்கி நகா்கிறது. தேசிய புள்ளியியல் துறை கடந்த வாரம் வெளியிட்டிருக்கும் 2023 - 24 நிதியாண்டுக்கான வளா்ச்சியின் முதலாவது முன்னோட்ட மதிப்பீடு (ஃபா்ஸ்ட் அட்வான்ஸ் எஸ்டிமேட்) 7.3% ஜிடிபி வளா்ச்சி வியப்பில் புருவம் உயா்த்த வைத்திருக்கிறது.
  • முன்னோட்ட மதிப்பீடு, கடந்த நிதியாண்டின் 7.2%-ஐவிட அதிகம் என்பது மட்டுமல்ல, இந்திய ரிசா்வ் வங்கியின் 7%-ஐயும், பரவலான எதிர்பார்ப்பான 6.7%-ஐயும் பின்னுக்குத் தள்ளியிருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. இதிலிருந்து இரண்டு முக்கியமான அறிகுறிகளைக் கணிக்க முடிகிறது.
  • முதலாவதாக, இந்தியாவின் வளா்ச்சிக்கும் உலகின் ஏனைய நாடுகளின் வளா்ச்சிக்குமான இடைவெளி அதிகரித்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவின் ஜிடிபி வளா்ச்சி ஏறத்தாழ 7% அளவில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது என்றால், உலகின் ஜிடிபி வளா்ச்சி குறைந்து வருகிறது. 2022-இல் 3.5%, 2023-இல் 3% என்று இருந்த சா்வதேச ஜிடிபி வளா்ச்சி, 2024-இல் 2.9%-ஆக மேலும் குறையும் என்று சா்வதேச நிதியம் கருதுகிறது. 2000-19 ஆண்டுகளின் 3.8% சராசரி விகிதம் உலகளாவிய அளவில் மேலும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் 7% ஜிடிபியில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருப்பதை உலக நாடுகள் வியந்து பார்க்கின்றன. சீனா உள்ளிட்ட எந்தவொரு நாடும் நடப்பு நிதியாண்டில் 6% வளா்ச்சியை எட்டவில்லை.
  • இரண்டாவதாக, இந்தியாவின் வளா்ச்சி, முதலீடு சார்ந்த வளா்ச்சியாக மாறிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இப்போதும்கூட இந்தியாவின் ஜிடிபியில் பெரும் பகுதியாக (சுமார் 57%) நுகா்வு காணப்படுகிறது என்றாலும், முதலீட்டுக்கும் ஜிடிபிக்கும் இடையேயான விகிதம் அதிகரித்திருக்கிறது. கொள்ளை நோய்த்தொற்றுக்கு முந்தைய 10 ஆண்டுகளில் 32%-ஆக இருந்த சராசரி விகிதம், நடப்பு நிதியாண்டில் சுமாா் 35%-ஆக அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. தொடா்ந்து இரண்டு ஆண்டுகளாகக் காணப்படும் வளா்ச்சி அரசுத் துறை மட்டுமல்லாமல், தனியார் துறையின் காரணமாகவும் அதிகரித்திருப்பதை குறிப்பிட வேண்டும்.
  • உலகளாவிய வளா்ச்சிக்கும் இந்தியாவின் வளா்ச்சிக்குமான இடைவெளி, சில பிரச்னைகளை உருவாக்கக் கூடும். அதிகரித்த நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, விலைவாசி உயா்வு தரும் அழுத்தம் போன்றவை நாம் எதிா்கொள்ளக்கூடிய சில பிரச்னைகள். பொருளாதாரம் வேகமாக வளரும்போது அதிகரிக்கும் இறக்குமதியும், பணவீக்கமும் தவிர்க்க முடியாதவை. இந்தியாவின் வளா்ச்சி விகிதத்தை 7% அளவில் நிலைநிறுத்தும்போது, ஏனைய அலகுகளில் நாம் கவனம் செலுத்தாமல் இருந்துவிடக் கூடாது.
  • முதலீட்டை அதிகரிப்பதில் கூடுதல் முனைப்பு காட்டும் அதேவேளையில், உள்நாட்டு சேமிப்பை ஊக்குவிப்பதன் மூலம் அந்த பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும். முக்கியமான கட்டமைப்பு வளா்ச்சிகளில் அதிகரித்த அரசு முதலீடு மட்டுமல்லாமல், தனியார் முதலீடுகளுக்கும் வழிகோலுவதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
  • உழைக்கும் வா்க்கத்தினருக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதும், மகளிர் அதிக அளவில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதும் பொருளாதாரத்தின் சமநிலையை உறுதிப்படுத்தக்கூடும். வேலைவாய்ப்பை உருவாக்கும் விவசாயம், உற்பத்தி, வா்த்தகம், போக்குவரத்து, தகவல் தொடா்பு, சுற்றுலா ஆகிய துறைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
  • உலக பொருளாதாரத்தின் வேகம் குறைந்து வரும் நிலையில், இந்தியாவின் ஏற்றுமதிகளை இலக்கு நிா்ணயித்து அதிகரிப்பது, இப்போது ஏற்பட்டிருக்கும் வளா்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ள மிகமிக அவசியம். சேவைத் துறையில் மட்டுமல்லாமல், பொருள்கள் ஏற்றுமதியிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். உற்பத்தித் துறையின் மூலம் உருவாகும் பொருள்களுக்கான ஏற்றுமதி அதிகரிப்பு, வேலைவாய்ப்பை அதிக அளவில் உருவாக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • ஒருபுறம் ஜிடிபி விகிதம் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது என்றால், மறுபுறம் இந்தியாவின் நடப்பு நிதியாண்டுக்கான 8% வளா்ச்சி கடந்த ஆண்டின் 17.4%-உடன் ஒப்பிடும்போது குறைவு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த 20 ஆண்டுகளில் நடப்பு நிதியாண்டின் நுகா்வு குறைவு (4.4%) என்பதையும் எளிதாகக் கடந்துபோக இயலவில்லை. இதற்கு கிராமப்புற இந்தியாவில் வேலைவாய்ப்புகளும் வருமானமும் அதிகரிக்காதது முக்கியமான காரணம்.
  • சமையல் எரிவாயு விலை குறைவு, விவசாய உற்பத்திக்கான ஆதரவு விலைகள் அதிகரிப்பு, இலவச உணவு தானியத் திட்டம் ஆகியவை காரணமாக ஊரகப்புறங்களில் வரும் நாள்களில் நுகா்வு அதிகரிக்கும் என்று அரசும் ரிசா்வ் வங்கியும் எதிா்பாா்க்கின்றன. 2022 - 23-இல் 4%-ஆக இருந்த வேளாண்துறை வளா்ச்சி, 2023 - 24-இல் 1.8%-ஆகக் குறைந்திருப்பது கவனத்தில்கொள்ள வேண்டிய பிரச்னை. இந்தியாவின் வேளாண்துறை வளா்ச்சி பெரும்பாலும் பருவநிலை சார்ந்தது என்பதால், அது அரசின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இல்லை.
  • ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தேசிய புள்ளியியல் துறையின் தரவுகள் நம்பிக்கை அளிப்பவையாக இருக்கின்றன. பிரச்னைகள் பல இருந்தாலும், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாகவே இருக்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை.

நன்றி: தினமணி (12 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்