TNPSC Thervupettagam

வள்ளுவரும் குறளும் எல்லோர்க்கும் பொது!

June 23 , 2021 1135 days 489 0
  • சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியிருப்பது கவனம்பெற்றிருக்கிறது.
  • ஏற்கெனவே, தாய்லாந்தில் இந்திய வம்சாவளியினரிடையே பேசியபோதும், லடாக்கில் ராணுவ வீரர்களிடையே பேசியபோதும், கோவையில் நடந்த அரசு விழாவிலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் திருக்குறளைத் தமிழிலேயே அவர் மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார்.
  • தமிழர்களின் மொழிப் பெருமிதங்களில் ஒன்றான திருக்குறள், இந்தியாவின் அறிவுப் பெருமிதங்களிலும் ஒன்று; தேச எல்லைகளைத் தாண்டி மனித சமூகத்தின் மாபெரும் அறிவுப் பெட்டகம்.
  • தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருக்குறள் சார்ந்து மிகச் சமீப காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
  • வருகிற கல்வியாண்டிலிருந்து இளங்கலை மாணவர்களுக்குத் திருக்குறள் ஒரு விருப்பப் பாடமாக இருக்கும் என்று சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பெருந்தொற்றுக் காரணமாக இன்னும் புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வுகள் நடத்தப் படவில்லை என்றாலும், திருக்குறளை ஆழ்ந்து படிக்காமல் இனி யாரும் தமிழகத்தில் அரசுப் பணியாளராக முடியாது என்ற சூழல் எழுந்துள்ளது.
  • இதுபோன்ற முன்னெடுப்புகளுக்கு நடுவே அவ்வப்போது வள்ளுவர் உருவப்படம் குறித்து அரசியல் உள்நோக்கத்துடன் எழுப்பப்படுகிற சர்ச்சைகள் வருத்தமளிக்கச் செய்கின்றன.
  • கோவை வேளாண் பல்கலைக்கழக நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த காவியுடை தரித்த வள்ளுவரின் படம் சில நாட்களுக்கு முன்பு சர்ச்சைக்குள்ளாகி, அதற்குப் பதிலாக தமிழக அரசின் அதிகாரபூர்வமான வெள்ளை உடை வள்ளுவர் படம் தற்போது வைக்கப் பட்டுள்ளது.
  • திருக்குறளை சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திப் பேசும் வழக்கம் நீண்ட காலமாகவே நிலவிவந்தபோதும் அது சமயச்சார்பற்ற இலக்கியமாகவே போற்றப்பட்டுவருகிறது.
  • அறம், பொருள், இன்பம் என்ற பகுப்பானது தமிழுக்கும் சமணத்துக்கும் பொதுவானது. பகவன், வாலறிவன், பிறவிப் பெருங்கடல் ஆகிய சொற்றொடர்கள் பௌத்தத்தோடு தொடர்புடையவை.
  • திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் வினைக் கோட்பாடும் வீடுபேறும் கடவுள் இயல்பும் அதன் சைவத் தொடர்புக்குச் சான்று பகர்பவை. ‘தாமரைக்கண்ணான் உலகு’ என்பது வைகுண்டத்தையும், ‘மடியிலா மன்னவன்’ என்பது திருமாலையும் குறிப்பவை என்கின்றனர் வைணவர்கள். என்றபோதும், திருக்குறளைச் சமயங்களுக்கு அப்பாற்பட்ட அற நூலாகப் பார்க்க வேண்டும் என்பதே தமிழறிஞர்களில் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்துவருகிறது.
  • திருக்குறளின் சமயப் பொதுமையைப் பேசுபவர்கள், திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் சமயத்தைக் குறிக்கும் எந்தப் பெயர்களும் வெளிப்படையாக இல்லை என்பதைச் சுட்டிக் காட்டி, மதங்களுக்கு அப்பாலிருந்தே வள்ளுவர் தம் குறளை இயற்றியுள்ளார் என்ற முடிவுக்கு வருகின்றனர். s
  • காந்தியையும் அம்பேத்கரையும்கூட சாதி, மத அடையாளத்துக்குள் அடைத்துவிட முயலும் இன்றைய அரசியல் வியூகங்களுக்கு தமிழ்ச் சமூகத்தின் பொது அடையாளங்களான வள்ளுவர், வள்ளலார், பாரதியார் முதலானோர் பலியாகிவிடக் கூடாது.

நன்றி: இந்து தமிழ் திசை (23 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்