PREVIOUS
கரோனா தீநுண்மிப் பரவலால் விளைந்த பொருளாதாரத் தேக்கத்தை மிகவும் சாதாரணமாக எடை போடுகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
வரும் நாள்களில் பொருளாதாரம் சீராகிவிடும் என்றும், நல்லதே நடக்கும் என்றும் அவர் நம்புகிறார். ஆனால் கள நிலவரம் அவர் நினைப்பது போலில்லை. உலகின் பொருளாதார வல்லரசு நினைப்பது போல, பொருளாதாரம் ஊக்கமளிப்பதாக இல்லவே இல்லை.
வெள்ளை மாளிகையின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அமெரிக்காவின் மூன்று முக்கிய நிதி நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. ஜே.பி.மோர்கன், சிட்டி, வெல்ஸ் ஃபார்கோ ஆகிய முன்னணி நிதி நிறுவனங்கள் கடந்த காலாண்டில் 28 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 2,08,964 கோடி) வாராக்கடன்களை தள்ளுபடி செய்ய நேர்ந்துள்ளது.
இது 2008-ஆம் ஆண்டு நிலவிய பொருளாதாரத் தேக்க நிலையை நினைவுபடுத்துகிறது.
அமெரிக்கா தும்மினால் உலகுக்கு சளி பிடிக்கும்
உலகின் பல நாடுகளும் கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சியை நம்பிக்கையுடன் அணுகுகின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடி நிதியுதவிகள், வேலையற்றோருக்கு மானிய உதவிகள் போன்ற தூண்டுதல்கள் மூலமாக பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்திவிடலாம் என இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கருதுகின்றன.
ஆனால், ஜே.பி. மோர்கன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேமி டைமன் கூறுவது போல, இந்தப் பொருளாதாரச் சரிவு வழக்கமாக ஏற்படும் மந்தநிலை அல்ல. "இப்போதைக்கு தற்காலிக நடவடிக்கைகளின் மூலம் உடனடி பாதிப்பிலிருந்து நாம் தப்பலாம். ஆனால் கடும் பாதிப்பு கீழ்நிலையில் ஏற்கெனவே துவங்கிவிட்டது' என்கிறார் அவர்.
"அமெரிக்கா தும்மினால் உலகுக்கு சளி பிடிக்கும்' என்ற வர்த்தகப் பழமொழி ஒன்றுண்டு.
உலக நாடுகளும் இதற்கு விலக்கல்ல. தொலைக்காட்சிகளில் காட்சியளிக்கும் திடீர் பொருளாதார நிபுணர்களின் தீர்க்கதரிசனங்கள் எப்படி இருப்பினும், இந்தியாவிலும் பொருளாதார நிலைமை தெளிவாகவோ, சாதகமாகவோ இல்லை.
நமது நாட்டின் பொருளாதார நிபுணர்கள், தர மதிப்பீட்டு அமைப்புகளின் முன்கணிப்பின்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றே தெரிகிறது.
அவர்கள் அனைவருமே மைனஸ் 5 சதவீதத்திலிருந்து மைனஸ்15 சதவீதம் வரை உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜிடிபி) செல்லும் என்று எச்சரிக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் -மே மாதங்களில் இந்த அதிரடி வீழ்ச்சி கண்கூடாகத் தெரிந்தது. இதனைச் சரிசெய்ய வேண்டுமானால், வர்த்தக நடவடிக்கைகளுக்குப் புத்துணர்வூட்டும் நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.
மீட்சிக்கு வழிவகுக்கும் அத்தகைய செயல்பாடுகள் ஏதேனும் நிகழ்ந்தனவா என்பதுதான் கேள்வி. இதற்கான பதில், இல்லை என்பதே. ஜூன் 1-இல் தேசிய பொது முடக்கத்தை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை துவங்கப்பட்டது. ஆனால், மீட்சிக்கான செயல்பாடுகள் இதுவரை துவங்கப்படவில்லை.
ஏப்ரல் மாதத்திலிருந்தே பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. குறைந்துவிட்ட வருவாய்க்கும் வழக்கமான செலவினத்துக்கும் இடையில் துண்டு விழுவதைத் தடுக்க இந்த நடவடிக்கைகளை நிறுவனங்கள் தேர்ந்தெடுத்துள்ளன.
இது முதல் கட்டமே. இந்தியப் பொருளாதாரத்தின் எதார்த்த நிலையை உணர இதுவே போதும். வேண்டுமானால் சில உதாரணங்களைக் காணலாம்.
உதாரணங்கள்
ஹைதராபாதின் பிரதானப் பகுதியில் முன்னணி நிறுவனத்தின் இரு அழகு நிலையங்கள் சில நாள்களுக்கு முன்னர் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. கடந்த நான்கு மாதங்களாக வருவாய் இல்லாதிருந்தபோதும் அவை இயங்க முயன்றன.
அங்கு பணிபுரிந்த அழகுக் கலைஞர்களுக்கு குறைந்த சம்பளமே அப்போது வழங்கப்பட்டது. வரும் நாட்களில் வாடிக்கையாளர்கள் பழையபடி வர வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த பிறகு, ஜூலை முதல் வாரத்தில் தனது கிளைகளை மூட அந்நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.
வர்த்தகத்தின் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புக்கு இதுவே அடையாளம். அடுத்துவரும் சில மாதங்களில், ஆட்டோமொபைல், ஜவுளி, ஹோட்டல், காலணியகம் முதலிய துறைகளில் பல விற்பனையகங்கள், ஷோரூம்கள் மூடப்படக் கூடும். குறைந்துவரும் கிராக்கி காரணமாக, 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரையிலான விற்பனை நிலையங்கள் மூடப்படலாம்.
இன்னொரு பாதிப்பு உண்டு. இதுவரை ஒரு நகரில் 100 கார்கள் விற்கப்பட்டன என்றால் அந்த வர்த்தக நடவடிக்கையில் சுமார் 10 ஆட்டோமொபைல் ஷோரூம்கள் பயனடைந்திருக்கும். வரும் நாள்களில் இந்த விற்பனை 60 அல்லது 70 கார்களாகக் குறையும்போது, ஷோரூம்களின் தேவை குறையும்.
அவற்றில் பலவீனமான நிலையிலுள்ள விற்பனையகங்கள் பாதிப்புக்குள்ளாகும். இதன் தொடர்ச்சியாக, வேலையிழப்பு, கட்டடங்களின் வாடகை இழப்பு, மின்தேவை சரிவு, துணைத் தொழில்களில் பாதிப்பு ஆகியவை நிகழும். ஒட்டுமொத்தத் தேவை குறைவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, அண்மையில் அரசு வெளியிட்டுள்ள வர்த்தகப் புள்ளிவிவரங்களே சாட்சி.
ஆட்சியில் இருப்பவர்கள் இதை மறைக்கலாம்; தங்கள் சாதனைகளைப் பறைசாற்றலாம். ஆனால் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தக இடைவெளி கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத வகையில் வர்த்தக மிகையாக மாறியிருக்கிறது.
அதாவது தங்கமோ, எரிபொருளோ, இயந்திரங்களோ எதுவாயினும் மக்களின் தேவை குறைந்துவிட்டது.
பொருளாதாரத் தேக்கநிலை
பணவீக்கம் அதிகரிப்பு, வேலையிழப்பு, தேவைக் குறைவு போன்றவற்றை பொருளாதாரத் தேக்கநிலையின் முதல் அடையாளங்கள் என்று சொல்லலாம். தொடர்ந்து உயரும் எரிபொருள் விலையையும் அதன் தொடர் விளைவுகளையும் மறக்க முடியாது.
அத்தியாவசியப் பொருள்களின் தேவைக்குறைவு காரணமாக விற்பனை அளவு குறைவதால், அவற்றின் விலையை அதிகரிக்கும் கட்டாயச்சூழல் ஏற்படுகிறது. இதற்கு தகுந்த உதாரணம் விமானப் போக்குவரத்து.
சென்னையிலிருந்து மும்பைக்குப் பயணிக்கும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 50 - 60 சதவீதமாகக் குறைந்துவிட்டதால் பயணக் கட்டணத்தை விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் உயர்த்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இதிலும் பலவீனமான நிறுவனம் விரைவில் நடையைக் கட்டும்; தாக்குப்பிடிக்கத் தகுதியுள்ள நிறுவனங்கள் மட்டுமே நிலைக்கும்.
பொருளாதாரத் தேக்கநிலையின் அடுத்த தாக்கம் பணச்சுழற்சியில் வெளிப்படும். பொருளாதாரச் செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், எதிர்கால நிச்சயமின்மை காரணமாக மக்கள் தங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்வதால், அவர்களிடமுள்ள பணம் பொருளாதார நீரோட்டத்துக்கு முழுமையாக வராது.
பொருள்கள் மற்றும் சேவைகளின் விலையும் கட்டணமும் எப்போது குறைகிறதோ அப்போதுதான் மக்கள் தங்களிடமுள்ள பணத்தை செலவு செய்யவும், தொழில்களில் முதலீடு செய்யவும், ஆடம்பரச் செலவுகளில் ஈடுபடவும் முன்வருவார்கள்.
வெளிநாட்டுப் பயணமோ, புதிய ஆடை வாங்குவதோ எதுவானாலும், பணச்சுழற்சிக்கு அடிப்படை இதுவே.
அந்த நிலை வரும்போதுதான் தேவைகள் பெருகும்; வர்த்தக நடவடிக்கைகளும் புத்துணர்வு பெறும். அப்போதுதான் புதிய விமான சேவைகளும், ஹோட்டல்களில் கூட்டமும், ஷோரூம்களில் விற்பனையும் சாத்தியமாகும். கரோனா பாதிப்புக்கு முந்தைய பொருளாதாரச் சூழலை அப்போதுதான் காண முடியும்.
அதற்கு நீண்ட நாள்களாகும் என்பதுதான் சிக்கல். கடந்த மூன்று மாத வேலையிழப்பு, சம்பளக் குறைப்பால் ஏற்பட்ட பாதிப்பைத் தாங்கிக்கொண்ட நடுத்தர வர்க்கம் ஏற்கெனவே மிகுந்த நெருக்கடியில் தவிக்கிறது.
எதிர்கால அச்சத்தால் சொந்த ஊர்களுக்கு ஓடிப்போன புலம்பெயர் தொழிலாளர்களோ, சொந்த ஊர்களில் எந்த வேலைவாய்ப்பும் இல்லாததால் பழைய இடங்களுக்கே திரும்பத் துடிக்கிறார்கள். அவ்வாறு திரும்பினால், அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்குமா என்பதும் பதில் அளிக்க முடியாத கேள்வியாக முன்னிற்கிறது.
விவசாயத் துறையில் மட்டுமே மறு இடப்பெயர்வுக்கு ஓரளவு வாய்ப்பு காணப்படுகிறது.
தற்போதைய பொருளாதாரச் சரிவிலிருந்து இந்தியாவோ, உலகமோ மீள வேண்டுமானால் கிடுகிடு பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்தாக வேண்டும். தீநுண்மி தொற்றுப் பரவலின் ஆரம்ப காலகட்டத்தில், பொருளாதார நிபுணர்கள் சிலர், அவ்வாறு நிகழும் என நம்பிக்கை தெரிவித்தது உண்மைதான்.
ஆனால், தற்போது மிக நிதானமாகவே பொருளாதாரம் மீட்சி அடையும் என நிபுணர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.
அதாவது, பொருளாதார மீட்சிக்கு முன்னதாக, பொருளாதார வீழ்ச்சியின் விளைவுகளை, மேலும் பல வலிகளைத் தாங்கியாக வேண்டும் என்பதே அதன் பொருள்.
இதிலிருந்து மீள்வது மிகக் கடினமானதுதான். ஆனால், அதற்கு முன், பொருளாதார வீழ்ச்சியின் ஆழத்தை இதுவரை யாரும் முழுமையாக அறியவில்லை என்பதையும் மறுக்க இயலாது.
நன்றி: தினமணி (24-07-2020)