- 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா வுக்கான முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்ததோடு சுதந்திரத் துக்குப் பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியராகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் 22 வயது மனு பாகர் (துப்பாக்கிச் சுடுதல்).
- இதற்கு முன் ரியோ ஒலிம்பிக்கில் சாக்ஷி மாலிக்கும் (மல்யுத்தம்) டோக்கியோ ஒலிம்பிக்கில் மீராபாய் சானுவும் (பளுதூக்குதல்) 2016, 2020ஆம் ஆண்டுகளுக்கான ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கங்களைப் பெற்றுத் தந்தனர். தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தைப் பெற்றுத்தந்து பதக்கக் கணக்கை வீராங்கனைகளே தொடங்கி வைத்திருக்கிறார்கள்! 2024 ஒலிம்பிக்கில் பிரான்ஸ் நாட்டின் பதக்க கணக்கைத் திறந்து வைத்ததும், வட அமெரிக்கப் பிராந்தியத்தில் மிகவும் பின்தங்கிய நாடான கவுதமாலாவின் முதல் பதக்கத்தை வென்றதும் அந்தந்த நாட்டு வீராங்கனைகளே.
தடைகளை மீறி
- பாலியல் குற்றங்களுக்கு எதிராக இந்திய மல்யுத்த வீராங்கனைகளும் வீரங்களும் 2023ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர் மனு பாகர். வளர்ந்துவரும் வீராங்கனையான அவர், அழுத்தம் நிறைந்த தருணத்திலும் சக வீராங்கனைகளின் பக்கம் நின்றது விளையாட்டைத் தாண்டிய அவரது உயர் பண்புக்குச் சான்றானது. அதேபோல, இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகள் எழுந்தபோதும் சிந்துவுக்கு ஆதரவாக வாதாடினார் மனு.
- துப்பாகிச் சுடுதலில் மனு என்றால், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் வரலாற்றில் முதல் முறையாக 16 பேர் விளையாடக்கூடிய சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தினர் மணிகா பத்ராவும், ஜா அகுலாவும். ஐந்து முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவரான சரத் கமல் போன்ற அனுபவமிக்க வீரரே இன்னும் எட்டாத உயரத்தை இந்த இளம் வீராங்கனைகள் அடைந்துள்ளனர். பதக்கம் வெல்லவில்லை என்றாலும் இச் சுற்றுக்குத் தகுதிபெறுவதே சவால்களை உடைத்தெறிந்ததற்குச் சான்று!
வாய்ப்பளித்தால்…
- ஒலிம்பிக் வரலாற்றில் ஆண்களும் பெண்களும் இணைந்து விளையாடும் கலப்புப் பிரிவில் அதிக விளையாட்டுகள் (20) இருப்பது இதுவே முதல் முறை. ‘வேகமாக, உயரமாக, வலிமையாக – ஒன்றாக’ என்கிற கருத்தை இந்தக் கலப்புப் போட்டிகள் உணர்த்துவதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
- ஒலிம்பிக்கில் பாலினச் சமத்துவத்தை எட்டவே பல நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலையில், கைக்கு எட்டும் ஒவ்வொரு வாய்ப்பையும் வீராங்கனைகள் தவறவிடத் தயாராக இல்லை. எகிப்து நாட்டைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை நடா ஹஃபீஸ், முதல் சுற்றில் வெற்றி கண்டு இரண்டாவது சுற்றில் தோல்வியுற்றார். 26 வயதான அவர் தனது தோல்விக்குப் பிறகு இன்ஸ்டகிராமில் உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்தார். ஏழு மாதக் கர்ப்பிணியாக அவர் போட்டியில் பங்கேற்றிருந்தது அப்பதிவின் மூலம் தெரிய வந்தது. அப்போதும் அவரது உடல்நலத்தின்மீது அக்கறை கொண்டதாகக் கூறிக்கொண்டு நடாவின் இந்த முயற்சிக்கு விமர்சனங்கள் எழுந்தன.அதற்கு பதிலளித்த அவர், “நானும்என்னுடைய குழந்தையும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவுமான சவால்களில் சம அளவு பங்கு கொண்டுள்ளோம். தனிப்பட்ட வாழ்க்கையையும் விளையாட்டு லட்சியத்தையும் சமாளிக்க ஒரு பெண் போராடுவது சாதாரண காரியமல்ல. எனது குடும்பத் தினரின் ஆதரவுடன் என்னால் இதைச் சாத்தியப்படுத்த முடிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
- ஏற்கெனவே இரண்டு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றிருக்கும் நடா, கர்ப்பக் காலத்திலும் மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றதற்கான காரணத்தை அவரே விளக்கிவிட்டார். வீட்டுக்குள்ளேயும், வீட்டுக்கு வெளியிலும் பெண்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பு என்பது மாற்றத்துக்கான விதை. அதை சாதாரணமாகக் கடந்துவிடக் கூடாது என்பதில் திடமாக இருக்கும் பெண்கள், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் வரலாறாக மாற்றிவருகிறார்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 08 – 2024)