TNPSC Thervupettagam

வழிகாட்டும் ஒளிச்சுடர்

October 16 , 2023 454 days 301 0
  • இந்தியா முழுமையிலும் நடைபெறும் சாதிமறுப்புத் திருமணங்களின் சதவீதம் என்பது மிக மிகக் குறைவு. அதாவது, தமிழ்நாட்டில் 5 சதவீதமும் நாடு முழுமையிலும் 10 சதவீதமும்தான் இத்தகைய திருமணங்கள் நிகழ்வதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அப்படி என்றால், அகமண முறையை மட்டுமே அனைவரும் ஏற்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
  • சாதியரீதியிலான ஏற்பாட்டுத் திருமணங்களின் எண்ணிக்கையே இங்கு அதிகம். அப்படி இருக்கும்போது இங்கு காதல், சாதி மறுப்புத் திருமணங்கள் ஏராளம் நிகழ்வதாகச் சொல்லப்படுவதும் வெறும் கட்டுக்கதைதானே?
  • இன்னமும் நம் மக்களின் மனங்கள் சாதிய வட்டத்தை விட்டு விலக மறுக்கின்றன என்பதும் புலனாகிறது.
  • பின் ஏன் சாதிமறுப்புத் திருமணங்களையும் காதல் திருமணங்களையும் கண்டு கொதிப்படைகிறார்கள்?! ஒருவேளை 50 சதவீதத்துக்கும் மேல் இவ்வாறு நிகழ்ந்தால் - அதிலும் குறிப்பாக, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தின் வழி திருமணங்கள் நிகழ்ந்தால் - எதிர்ப்பாளர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? சமீபத்தில் இளவரசன் என்பவர் சுயமரியாதைத் திருமணச் சட்டத்தின் வாயிலாகச் செய்துகொண்ட திருமணம் செல்லாது என்றும், அது குற்றம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது; பின்னர், அந்தத் திருமணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துவிட்டது; ஆனால், உயர் நீதிமன்றத் தீர்ப்பு இளவரசனை மட்டுமல்ல, எல்லோரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம் இச்சட்டம்

உருவானதன் பின்னணி

  • பெரியாரின் வெற்றி: 1967 தேர்தலில் வெற்றிபெற்றுப் புதிதாக ஆட்சியமைத்த சி.என்.அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு, 7ஏ என்னும் பிரிவின்கீழ் இந்துத் திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. 56 ஆண்டுகளுக்கு முன் அவ்வாறு கொண்டுவரப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டப் பிரிவின் கீழ், பெரியார் தலைமையில், அண்ணா முன்னிலையில் நிகழ்த்திவைக்கப்பட்ட முதல் திருமணம் பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் ப.ஜீவானந்தத்தின் மகள் உஷா தேவி - வழக்குரைஞர் அருணாசலம் ஆகியோரின் திருமணம்தான்.
  • அக்னி வளர்த்து, வேதம் ஓதி, தாலி கட்டினால்தான் திருமணம் என்ற நடைமுறைகளை உடைக்க வேண்டும் என்று பெரியார் எடுத்துக்கொண்ட முயற்சியில் வெற்றியும் பெற்றார். சடங்கு, சம்பிரதாயங்கள் அனைத்தையும் மறுத்து, ஏராளமான திருமணங்களைத் தன் தலைமையில் நடத்திவைத்தார். அவர் வழி நின்ற தொண்டர்களும் அதை முழுமையாக மனமுவந்து ஏற்றார்கள்.
  • 1929இல் குத்தூசி குருசாமி - குஞ்சிதம், 1930இல் சாமி.சிதம்பரனார் - சிவகாமி ஆகியோரின் திருமணங்கள், சாதி எதிர்ப்பை இந்தச் சமூகத்தின் முகத்தில் அறைந்து அழுத்தமாகச் சொன்ன முன்னோடித் திருமணங்கள். ஒருவகையில், இது மதப் பழைமைவாதிகளுக்கு விடப்பட்ட சவாலும்கூட. எனினும் முப்பதாண்டு கால இடைவெளியில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்ட அமலாக்கத்துக்குப் பின்னரே அந்தத் திருமணங்கள் அனைத்தும் சட்ட பூர்வமானவை என அங்கீகரிக்கப்பட்டன.
  • முறியடித்த தமிழ்நாடு: 1954 இல் இந்திய அளவில் ‘சிறப்புத் திருமணச் சட்டம்’ என ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், இதனை இந்துத் திருமணச் சட்டத்துக்கு மாற்று என்பதாகக் கொள்ள முடியாது. எந்த மதம் சார்ந்தவர்களும் சாதி மறுப்புடன் தங்கள் மதங்களை மறுத்து, யாரும் யாரையும் மணந்துகொள்ளலாம் என்ற நடைமுறையை ஏற்படுத்தியது இச்சட்டத்தின் சிறப்பு. இந்தியாவில், திருமணம் என்பது சாதிகளுக்குள் முடிவு செய்யப்படுகிறது. அச்சாதிகளில் பிரிவுகள், அப்பிரிவுகளுக்குள் உட்பிரிவுகள் என ஏராளமாக உள்ளன. ஆனால் திருமணம் என்றால் அகமண முறை மட்டும் பின்பற்றப்படுகிறது; ஏற்கப்படுகிறது.
  • மீறினால் அதன் விளைவுகள் குறித்தும் நாம் அறிவோம். இதனால்தான் இந்துத் திருமணச் சட்டத்தை ஒரு வரையறைக்கு உட்படுத்தும் சட்டத்தை இயற்றுவதற்காக டாக்டர் அம்பேத்கர் மேற்கொண்ட முயற்சிகள் முழுமையாக ஈடேறவில்லை. ‘இந்து மகாசபை’ போன்ற இந்துத்துவ அமைப்புகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடெங்கும் கூட்டங்களை நடத்தியது வரலாறு.
  • ஆனால், இந்தியா முழுவதும் கெட்டித்தட்டிப் போயிருந்த நடைமுறையைத் தமிழ்நாடு முறியடித்துக் காட்டியது. தாலி கட்டினாலும் கட்டாவிட்டாலும் அத்திருமணத்தைச் சுய மரியாதைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்ய முடியும். இதேபோன்ற சட்டம் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் 1971இல் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்தியாவில், இன்றுவரை வேறு எந்த மாநிலத்திலும் இச்சட்டம் கொண்டுவரப்படவில்லை.
  • தமிழ்நாடு - புதுச்சேரியைச் சேர்ந்தவர்களேயானாலும்கூட இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்திவிட முடியாது. அப்படியே நடத்தினாலும் அத்திருமணம் சட்டபூர்வமாகச் செல்லுபடியாகாது. சிறப்புத் திருமணச் சட்டத்தின் வழியாக மட்டுமே சடங்குகளற்ற திருமணம் அங்கு செல்லுபடியாகும்.
  • இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டால், அதன் வழியாகவாவது சாதிமறுப்புத் திருமணங்கள் நடைமுறைக்கு வந்தால், சாதியின் மேலாதிக்கமும் தாக்கமும் ஒருவேளை குறைவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். இது நம் ஆதங்கம்; எதிர்பார்ப்பு.
  • ‘பொதுநல’ வழக்கு: சுயமரியாதைத் திருமணச் சட்டம் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று 2015ஆம் ஆண்டு வழக்குரைஞர் ஒருவர், ‘பொதுநலன்’ அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ‘சுயமரியாதைத் திருமணச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள்? ஏன் அதை எதிர்க்க வேண்டும்? நீக்குவதால் பலனடையப் போகிறவர்கள் யார்?’ - இவ்வளவு கேள்விகளும் எழுகின்றன அல்லவா?
  • “புரோகிதர் இல்லாமல் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடத்துவது செல்லும் என்பதுதான் இந்தத் திருமணச் சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம். உறவினர்கள், நண்பர்கள் சூழ மாலை அல்லது மோதிரம் மாற்றிக்கொள்வது அல்லது தாலியைக் கட்டிக்கொள்வது என்பது ஒரு முழுமையான திருமணம்தான். எனவே, சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை ரத்துசெய்ய இயலாது” என்று நீதிபதிகள் ஆணித்தரமான தீர்ப்பை வழங்கி, அந்தப் ‘பொதுநல’ வழக்கினைத் தள்ளுபடி செய்தார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்