- சென்னை வியாசர்பாடியில் திங்கள்கிழமை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்திருக்கும் "அம்மா சிறு மருத்துவமனை' திட்டம் தமிழக மருத்துவ வரலாற்றில் சாதனை என்பது மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள ஏனைய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக வழிகாட்டும் திட்டமும்கூட.
- அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா கூட்டுறவு மருந்தகம், அம்மா சிமென்ட் ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து இப்போது அறிவித்திருக்கும் அம்மா சிறு மருத்துவமனைத் திட்டமும் அடித்தட்டு மக்களின் தேவையை உணர்ந்து அறிவிக்கப்பட்டிருக்கும் அத்தியாவசியத் திட்டங்களில் ஒன்று.
- ஏற்கெனவே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்தின் கீழ், மாநிலம் முழுவதும் ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றாலும்கூட, அனைவருக்கும் மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்ய முதல்வர் அறிவித்திருக்கும் அம்மா சிறு மருத்துவமனைத் திட்டமும் அவசியமாகிறது.
- ஏழை, எளிய மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கக் கூடிய சிகிச்சைக்கு நிகரான சிகிச்சை வழங்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பு வரவேற்புக்குரியது.
- கார்ப்பரேட் மருத்துவமனைகள் மாநகராட்சிகளில் உருவாகத் தொடங்கியதிலிருந்து நடுத்தர வர்க்கத்தினரும், அடித்தட்டு மக்களும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ உயர் சிகிச்சைகள் பெறுவது பிரச்னையாக மாறியிருக்கிறது.
- பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும், தமிழக முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் நடைமுறையில் இருந்தாலும்கூட, உடனுக்குடன் மக்களின் அவசர மருத்துவ தேவையை ஈடுகட்ட ஆங்காங்கே கூப்பிடும் தூரத்தில் அரசின் சிறு மருத்துவமனைகள் அமைவது அவசியம்.
- கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று உலகெங்கிலும் இயல்பு நிலையை தகர்த்து காட்டுத் தீயாகப் பரவியபோது, அதை வெற்றிகரமாக எதிர்கொண்ட மாநிலங்களில் தமிழகம் குறிப்பிடத்தக்கது. 228 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு இந்தியாவிலேயே அதிக அளவில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட மாநிலம் தமிழகம்.
- தமிழ்நாடு முழுவதும் 310 அரசு மருத்துவமனைகள், 341 தனியார் மருத்துவமனைகள் என 651 மருத்துவமனைகள் 56,550 படுக்கை வசதிகளுடன் கொவைட் 19 தீநுண்மித் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த பெருமையும் தமிழகத்துக்கு உண்டு.
- கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியா முழுவதும் பொதுத்துறையின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார மையங்களும் போதுமான கவனம் பெறாமல் மத்திய - மாநில அரசுகளால் புறக்கணிக்கப்பட்டன என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் தங்களது சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையை நாடத் தொடங்கியபோது பொதுத்துறையில் இயங்கும் மருத்துவமனைகள் கேள்வி கேட்பார் இல்லாத காரணத்தால், செயல்திறன் இழந்தன.
- கொள்ளை நோய்த்தொற்றால் ஏற்பட்ட சில மாத பொருளாதார நிலைகுலைவு இந்தியாவின் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவைத் தகர்த்து, அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட வைத்துவிட்டது.
- இதேபோல, இன்னும் சில நோய்த்தொற்றுகள் வரக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலையோ, இன்னொரு நோய்த்தொற்றுப் பரவலோ ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் நிலையில் இந்தியா இல்லை. தேசிய அளவில் பொது முடக்கம் என்பது இந்தியப் பொருளாதாரத்தை அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கடத்திவிடும்.
- 2017-இல் அறிவிக்கப்பட்ட தேசிய சுகாதாரக் கொள்கை, 2025-க்குள் சுகாதாரத்துக்கான ஒதுக்கீட்டை ஜிடிபி-யில் 2.5% அளவுக்கு உயர்த்துவதாக இலக்கு நிர்ணயித்திருந்தது. அந்த இலக்கை எல்லா மாநிலங்களும் எட்ட முடியுமா என்பது தெரியவில்லை.
- தமிழகத்தைப் பொருத்தவரை, சுகாதாரக் கட்டமைப்பில் ஏனைய மாநிலங்கள் எல்லாவற்றையும்விட முன்னிலையில் இருக்கிறது என்பது மிகப் பெரிய ஆறுதல். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டு, அதன் மூலம் மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன.
- மக்களுக்கான மருத்துவ சேவை அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் மருத்துவர்களையும், செவிலியர்களையும், ஏனைய சுகாதாரப் பணியாளர்களையும் உருவாக்கும் பணியிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.
- மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமல்லாமல், தடுப்பூசி வழங்குபவர்கள், தகவல் உள்ளீட்டுப் பணியாளர்கள் (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்), ஆய்வுக்கூடப் பணியாளர்கள், ஆயாக்கள், மருந்தாளுநர்கள், அவர்களின் உதவியாளர்கள் என்று பலருக்குமான தேவை உருவாகி இருக்கிறது.
- அம்மா சிறு மருத்துவமனைகள் அமைக்கப்படுவது, பொது சுகாதாரக் கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதும் மக்களின் மருத்துவ தேவையை ஈடுகட்டுவதும் மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும்.
- கொவைட் 19-க்கான தடுப்பூசி விரைவில் வழங்கப்பட இருக்கும் நிலையில், அது அடித்தட்டு மக்களை உடனடியாக சென்றடைவதற்கு அம்மா சிறு மருத்துவமனைகள் மிக முக்கியமான பங்கை வகிக்க இருக்கின்றன.
- கிராமப்புறங்களில் 1,400, சென்னை பெருமாநகராட்சிகளில் 200, நகர்ப்புறங்களில் 200 , நடமாடும் மருத்துவமனைகள் 200 என மொத்தம் 2,000 அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்க இருப்பது, எல்லாவித மருத்துவ சவால்களையும் எதிர்கொள்ள தமிழகத்தைத் தயார் நிலையில் வைத்திருக்கும் என்பதுடன், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டுதலாகவும் அமையப் போகிறது!.
நன்றி: தினமணி (17/12 2020)