TNPSC Thervupettagam

வழிபாட்டுத் தலங்கள் அனைத்து மதத்தினருக்கும் சொந்தம்

July 13 , 2022 757 days 434 0
  • இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த நிலங்களில் கல்லூரிகள் நிறுவப்படும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது.
  • இந்தக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர், அலுவலர்கள் பணிக்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என்றும், சட்டம் அப்படித்தான் இருக்கிறது என்றும் சொல்வது விவாதத்துக்குரியது. சமீப காலமாகப் பிற மதத்தினரைக் கோயில்களுக்கு உள்ளே அனுமதிக்கக் கூடாது என்கிற கோரிக்கை, அது தொடர்பான நீதிமன்ற ஆணை பற்றிய செய்திகள் செய்தித்தாள்களில் இடம்பெற்றுவருகின்றன.
  • அதே நேரம், பண்டைய தொல்லியல் சான்றுகளை அகழ்ந்தெடுப்பதிலும் தமிழ்ப் பண்பாட்டைப் போற்றவும் பாதுகாக்கவும் அரசு உறுதியெடுத்துச் செயல்படுவதையும் பார்க்க முடிகிறது. அதே வகையில், வரலாற்று உண்மைகளையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என நம்புவோம்.

திருமலையின் தீர்க்க முடிவு

  • மதுரை மீனாட்சியம்மன் கோயில் 1623-1659 ஆண்டு காலத்தில் பல மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்டது. கோயிலின் பெருமளவு கட்டிடப் பணிகளை மன்னர் திருமலை நாயக்கர்தான் மேற்கொண்டார். அந்தத் தறுவாயில் தான் கட்டிவரும் கோயிலுக்குத் தனது வாரிசுகளோ அல்லது தனது குடும்பத்தினரோ உரிமை கொண்டாடக் கூடாது. மீனாட்சியம்மன் கோயிலைப் பொதுச் சொத்தாக ஆக்க வேண்டும் என அவர் தீர்மானித்தார்.
  • அனைத்துச் சமூக மக்களுக்கும் வீட்டுக்கு ஒரு மண் பானையைக் கொடுத்து, முரசறிவிப்பு மூலம் ஒரு செய்தியையும் கொண்டுசென்றார். ‘‘மன்னர் திருமலை நாயக்கர், மதுரையம்பதியில் மீனாட்சியம்மனுக்குக் கோயில் கட்டி வருகின்றார். அக்கோயில் கட்டும் பணிக்கு, மக்களாகிய நீங்களும் பங்குபெறும் பொருட்டு, ஒவ்வொரு முறை சமையல் செய்வதற்கு அரிசியினை எடுக்கும்போதும், ஒரு கைப்பிடி அரிசியைக் கொடுக்கப்பட்ட மண்பானையில் இட வேண்டும்.
  • மண்பானை நிறைந்தவுடன் அவை சேகரிக்கப்பட்டு பணமாக்கப்படும். அப்பணம் கோயில் கட்டப் பயன்படுத்தப்படும். இதனால் மீனாட்சியம்மன் கோயிலின் உரிமை உங்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்பது மன்னரின் விருப்பமும் ஆணையுமாகும்.’’

மக்கள் உரிமை

  • மன்னர் ஆணையை மகேசன் ஆணையாக ஏற்று, மக்கள் அனைவரும் இனம், மதம், சாதி வேறுபாடின்றி மண்பானை அரிசியைக் குறுகிய காலத்திலேயே அளித்தனர். பெறப்பட்ட அரிசி விற்கப்பட்டுக் கிடைத்த பணத்தால் கட்டப்பட்டதுதான் மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள கிளிக்கூண்டு மண்டபம். பொற்றாமரைக் குளத்தின் தெற்கு மூலையில் இருக்கின்ற விபூதிப் பிள்ளையார் சிலைக்குப் பின்புறம் உள்ள மண்டபம்தான் கிளிக்கூண்டு மண்டபம். 60 வருடங்களுக்கு முன்பு கிளிகளும் கூண்டுகளும் அங்கே இருந்தன.
  • அந்த மண்டபத்தின் கல்வெட்டில் மேற்கண்ட வரலாற்று உண்மை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இன்று மட்டுமல்ல, எத்தனையோ ஆயிரமாண்டுகளுக்குப் பிறகும் மீனாட்சியம்மன் கோயில் எங்களது மூதாதையரின் பங்களிப்பால் கட்டப்பட்டது என்றும், அதனால் நாங்களும் இந்தக் கோயிலுக்குச் சொந்தக்காரர்கள் என்றும் தென்பாண்டி மக்கள் பெருமையோடும் உரிமையோடும் சொல்லிக்கொள்ளலாம்.
  • மக்களுக்காக மக்களால் ஏற்படுத்தப்பட்டதே சட்டம். இந்து சமய அறநிலையத் துறை சட்டமும் அப்படிப்பட்டதுதான், மாற்றத்துக்குரியதுதான். கோயிலை உருவாக்கிய மக்களுக்கு, உரிமையாளர்களுக்குக் கோயில்களில் பணியாற்றவும் பணிகளில் பங்குபெறவும் இனம், மதம், சாதிக்கு அப்பாற்பட்டு உரிமை அளிப்பதுதானே நியாயம்.
  • இதைப் போல் கிறிஸ்தவ ஆலயங்களையும், இஸ்லாமிய மசூதிகளையும் உருவாக்கும்போது பலதரப்பட்ட மக்களும் பங்களித்திருப்பது நிதர்சனம். அதனால், அனைத்துத் தரப்பு வழிபாட்டுத் தலங்களும் அனைத்துத் தரப்பு மதத்தினருக்கும் சொந்தம் என்பதுதானே ஏற்புடையது.

நன்றி: தி இந்து (13 – 07 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்