TNPSC Thervupettagam

வாகனங்கள் அல்ல காரணம்

August 24 , 2022 715 days 411 0
  • சாலை மேம்பாடு எந்த அளவுக்கு முனைப்புடன் முன்னெடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு சாலைப் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறவில்லை என்பதை தொடர்ந்து நிகழும் சாலை விபத்துகள் எடுத்தியம்புகின்றன. அதுமட்டுமல்ல, சாலை விபத்துகள் பல பதிவாகாமல் போகின்ற அவலமும் தொடர்கிறது.
  • சமீபத்தில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர், சைக்கிளில் வீடு திரும்பும்போது மாநகரப் பேருந்து மோதி உயிரிழந்தார். அருகில் இருந்த காவல் நிலையத்தினர் அன்று சுதந்திர தினக் கொண்டாட்ட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக உயிரிழந்த சிறுமி கவனிப்பாரற்று சாலையில் கிடந்த துயர நிகழ்வு பல செய்திகளை உணர்த்துகிறது.
  • காவல்துறையினரின் உடனடி கவனிப்பின்மை, மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் கவனக்குறைவு, பாதசாரிகளும் சைக்கிள் ஓட்டுபவர்களும் பாதுகாப்பாக பயணிக்க சாலைகளில் வழியில்லாமை, சாலை ஆக்கிரமிப்புகள், குடிநீர், கழிவுநீர் துறையினரின் பணிகள் என்று பல்வேறு காரணங்களால் சாலை விபத்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
  • 2017 முதல் 2020 வரையிலான நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ 22,000 சாலை விபத்து மரணங்கள் பதிவு செய்யப்படாமல் விடுபட்டிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. சாலை விபத்துகள் குறித்த புள்ளிவிவரங்களின் மறுபரிசீலனையில் வெளியாகியிருக்கும் இந்தத் தகவல், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை.
  • 2019-இல் 9,813 உயிரிழப்பு விபத்துகளும், அதனால் ஏற்பட்ட 10,525 மரணங்களும் பதிவாகியிருக்கின்றன. மறு ஆய்வின்படி, உயிரிழப்பு விபத்துகள் 17,196 என்றும், மரணங்கள் 18,129 என்றும் திருத்தப்பட்டிருக்கிறது. அதே போல, 2020-இல் உயிரிழப்பு விபத்துகள் 7,560, மரணங்கள் 8,060 என்று பதிவாகியிருந்தது. மறு ஆய்வில் உயிரிழப்பு விபத்துகள் 13,868, மரணங்கள் 14,527 என்று திருத்தப்பட்டிருக்கிறது. அதாவது, விபத்துகளும் உயிரிழப்புகளும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதையே இவை காட்டுகின்றன.
  • இதில் வேடிக்கை என்னவென்றால், 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சாலைப் பாதுகாப்பில் முதல் மாநிலத்துக்கான விருதை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற்றது. அதே ஆண்டுகளில் சாலை விபத்து மரணங்கள் 24%, 12% என்று குறைத்திருப்பதற்கான பாராட்டையும் உலக வங்கியிடமிருந்து தமிழகம் பெற்றது.
  • புள்ளிவிவரங்கள், தரவுகளில் குறைபாடு இருப்பது சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புப் படையினரின் ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் மாநில காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.
  • இதன் பின்னணியில், புள்ளிவிவரங்கள் வேண்டுமென்றே பதிவு செய்யாமல் விடப்பட்டிருக்கக்கூடும் என்று கருத இடமிருக்கிறது. சாலைப் பாதுகாப்புக்கான பாராட்டைப் பெறுவதற்காகவும், மத்திய - மாநில அரசுகளின் விருதுகளைக் கருத்தில் கொண்டும் இதுபோல புள்ளிவிவரங்களை மாற்றுவது அரசு நிர்வாகத்துக்கு புதிதொன்றுமல்ல.
  • சாலை விபத்துகள், உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரக் குறைபாடுகளுக்கு இன்னொரு காரணமும் இருக்கக்கூடும். மறு ஆய்வு செய்யப்பட்ட ஆண்டுகளில் தமிழகம் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொண்டதை நினைவில் கொள்ள வேண்டும். சாலையில் நிகழ்ந்த விபத்தின்போது பலியானவர்களை மட்டுமே பதிவு செய்து, மருத்துவமனையில் சில நாட்களுக்குப் பின் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை கவனிக்காமல் விட்டிருக்கக் கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
  • காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தால் ஒருவேளை இந்தக் குறைபாடு தவிர்க்கப்பட்டிருக்கலாம். மேலும். காப்பீடு பெறுவதற்கு விபத்துகள் பதிவாகி இருக்க வேண்டியது கட்டாயம் என்பதால், இதுபோன்ற குளறுபடி எப்படி, எதனால் ஏற்பட்டது என்பதை ஆராய வேண்டும். உயிரிழந்தோர் குடும்பங்கள் பல காப்பீடு பெறமுடியாமல் போயிருந்தால், அது மிகப் பெரிய கொடுமை.
  • தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அளவில் இந்தியாவும் சாலைப் பாதுகாப்பில் மெச்சும்படியாக இல்லை. உலக வாகனங்களின் எண்ணிக்கையில் வெறும் 1% மட்டுமே இருக்கும் இந்தியா, சர்வதேச அளவிலான சாலை விபத்துகளில் 10% அதிகமாக இருக்கிறது என்பதை நாம் வருத்தத்துடன் எதிர்கொள்ள வேண்டும். மத்திய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறையின் அறிக்கையின்படி, 2015 முதல் 2019 வரை ஆண்டுதோறும் சராசரியாக 1,49,472 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். 4,72,606 சாலை விபத்துகளில் 4,77,331 பேர் காயமடைகிறார்கள். இந்த புள்ளிவிவரமும் மறுபரிசீலனை செய்யப்பட்டால் அதிகரிக்குமோ என்னவோ.
  • சாலை விபத்துகளுக்கு வாகனங்களின் குறைபாடுகள் காரணமாக இருந்த காலம் மலையேறி விட்டது. இன்று எல்லா பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்த அதிநவீன வாகனங்கள் இயங்குகின்றன.
  • வாகன ஓட்டிகளின் கவனக்குறைவும், பயிற்சியின்மையும், சாலை விதிகளைக் கடைப்பிடிக்காமையும் சாலை விபத்துக்கு முக்கியக் காரணங்கள். அதற்கு எள்ளளவும் குறையாதது நமது சாலைகளின் நிலைமை. இருபுறமும் ஆக்கிரமிப்புகள், ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள், செப்பனிடப்படாத சாலைகள் ஆகியவை சாலை விபத்துகளுக்கு உறுதுணையாகின்றன. சுங்கம் வசூலிக்கப்படும் நாற்கரச் சாலைகளின் தரக் குறைபாடுகளை கேள்வி கேட்பார் இல்லை.
  • இந்த நிலைமைகள் மாறாதவரை இந்தியாவில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அன்றாட நிகழ்வுகளாகத் தொடரும்.*.

நன்றி: தினமணி (24– 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்