TNPSC Thervupettagam

வாக்காளர் பட்டியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு தான் என்ன?

October 28 , 2024 73 days 124 0

வாக்காளர் பட்டியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு தான் என்ன?

  • வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி அக்டோபர் 29 அன்று தொடங்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை ஒட்டி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
  • இந்தக் கூட்டத்தில், இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைப் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருப்பது விவாதப் பொருளாகியுள்ளது. இந்த விஷயத்தில் பிற துறைகளுடன் இணைந்து பணியாற்றுவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.
  • அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்பதற்காக நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள், இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
  • 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டவர்களின் பெயர்கள்கூடப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் இடம்பெறுவதை எளிதாகத் தவிர்க்க முடியும். மரணமடைந்தவர்களின் உறவினர்கள் இறப்புச் சான்றிதழை உள்ளாட்சி நிர்வாகங்களிடம் பெறுவது வழக்கமான நடவடிக்கையாகிவிட்டது.
  • அதற்காக இறந்தவரின் ஆதார் எண்ணும் கட்டாயமாகப் பெறப்படுகிறது. எனவே, அந்தச் சான்றிதழின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இறந்தவர்களின் பெயர்களைப் பட்டியலிலிருந்து எளிதாக நீக்கிவிட முடியும். இதில் தேர்தல் ஆணையம் உள்ளாட்சி நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றினாலே போதுமானது.
  • ஆனால், இதில் தொடர்ச்சியாகத் தவறுகள் நேர்வதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள், அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில் தேர்தல் ஆணையம் ஆர்வம் காட்டவில்லையோ என்னும் கேள்வியை எழுப்புகின்றன. இதேபோலத் தகுதிவாய்ந்த வாக்காளர்களின் பெயர்கள் விடுபடுவது, ஒரே நபரின் பெயர் வெவ்வேறு தொகுதிகளில் இடம்பெறுவது போன்ற பிரச்சினைகள் நீண்ட காலமாகவே தீர்க்கப்படாமல் தொடர்கின்றன.
  • இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி யுகத்தில் எளிதாகத் தீர்க்கப்பட வேண்டிய இந்தப் பிரச்சினைகள் இன்றுவரை நீடிப்பது தேர்தல் ஆணையத்தின் பணிகளில் நிலவும் குறைபாடுகளாகவே பார்க்கப்படுகிறது. இன்னொரு புறம், பல ஆண்டுகளாக வாக்களித்தும் தேர்தல் நாளில் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட்டதாக வாக்காளர்கள் கூறும் புகார்களும் வரவே செய்கின்றன. எனவே, இதில் தேர்தல் ஆணையம் சிறப்புக் கவனம் செலுத்தி, முறையான விசாரணையை மேற்கொண்ட பிறகு, வாக்காளர் பெயரைப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.
  • இதற்கு அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைக்க வேண்டும், மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக நவம்பர் மாதத்தில் நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முகாம்கள் நடப்பது ஒரு புறம் இருந்தாலும், வாக்காளர்களைத் தேடிச் சென்று விசாரித்து பெயர்களை இணைப்பதிலும், நீக்குவதிலும் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக 18 வயதைக் கடந்தவர்கள், 17 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.
  • ஏற்கெனவே, கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களின் வாயிலாக இளம் வாக்காளர்களைச் சேர்க்கும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டாலும், அவற்றை உறுதியுடன் செயல்படுத்துவதில் தேர்தல் ஆணையம் அக்கறை காட்ட வேண்டும். வாக்குப்பதிவை அதிகரிக்கும் முனைப்பைத் தேர்தல் நடத்தப்படும் காலத்தில் மட்டும் தேர்தல் ஆணையம் முன்னிலைப்படுத்துகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போதும் அதற்கான உரிய கவனத்துடன் செயல்படுவது மட்டுமே 100% வாக்குப் பதிவு என்னும் இலக்கை அடைய உதவும்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்