TNPSC Thervupettagam

வாசிப்புப் பண்பாட்டை வளர்க்க என்ன செய்ய உத்தேசம்

January 14 , 2024 226 days 281 0
  • சென்னைப் புத்தகக் காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நூல் வெளியீடுகள், எழுத்தாளர் சந்திப்புகள், வாசகர் பங்கேற்பு என அறிவுக் கொண்டாட்டம் நடந்தேறுவதில் பெருமகிழ்ச்சி. மாவட்டம் தோறும் புத்தகக் காட்சிகளும், மாநில அளவில் இலக்கியப் பயிலரங்குகளும், மொழி - இலக்கிய அரங்குகளும் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பில் தொடர்வது தமிழ் அறிவுச் சூழலை நிச்சயம் மேம்படுத்தும்.
  • இந்த ஆண்டு மழை பாதிப்பு என்பதைவிட, எல்லா ஆண்டுகளிலும் ஜனவரியில் சென்னைப் புத்தகக் காட்சியை நடத்துவதில் வேறு சிக்கல்கள் இருக்கின்றன. பொங்கல் விழா வருவதால் வெளியூரில் இருந்து புத்தகக் காட்சிக்கு வந்து, திரும்புவதில் வாசகர்கள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். எனவே, சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஏப்ரல், மே மாதம் நடத்தலாம். ஜனவரி முதல் ஏப்ரல் வரைப் பதிப்பகங்கள் புத்தகங்களைத் தயாரிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜூன் முதல் டிசம்பர் வரை தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நூல் காட்சிகள், விழாக்கள் ஏற்பாடு செய்து நூல்களைச் சந்தைப்படுத்தலாம். அதிக நூல்கள் வெளியாவதும், விற்பனையாவதும், வாசகர்கள் கூட்டமும் நம்பிக்கையளிக்கின்றன. அதே நேரத்தில் புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளதா? பரவலாகி உள்ளதா? இவற்றை இன்னும் மேம்படுத்த என்ன செய்யலாம் என சிந்திப்பது நல்லது.
  • புத்தக வாசிப்பு அறிவின் வாசல்களைத் திறக்கும். மனச் சாளரங்கள் வழி உலகை அறிய எளிய வழி, வாசிப்பு மட்டுமே. தன்னை அறியவும் பிறரை உணரவும் நூல்களே துணை. பண்பாட்டுத் தூதாக அமைபவை புத்தகங்கள். பொழுதுபோக்கு, அறிவுபெறுதல் என்பவற்றைத் தாண்டி வாசிப்பு அனுபவம் வாழ்வை அர்த்தப்படுத்துகிறது. உடலுக்குப் பல பயிற்சிகள் இருப்பதுபோல உள்ளத்துக்கான பயிற்சி புத்தக வாசிப்பு. அது மனித மனதை விலாசப்படுத்தும். தொடர் வாசிப்பு குறுகிய எல்லைகளைக் கடக்க உதவும்.

குழந்தைகளும் பெண்களும்

  • புத்தக வாசிப்பில் அதிகமும் கவனம் குவிக்கப்பட வேண்டியவர்கள் குழந்தைகளும் பெண்களுமே. குழந்தைகளை இன்றையக் காட்சிக்கேள்விக் கருவிகளிடமிருந்து மீட்டெடுத்தாக வேண்டும். குழந்தைகளுக்கான வாசிப்பு இயக்கத்தை விரிவுபடுத்தி, தொடர்ச்சியாக்க வேண்டும். பாடநூல்களுக்கு வெளியே குழந்தைகளின் இயல்பூக்கங்களை மேம்படுத்தும் நூல்களை அதிகமாகப் படைத்திட வேண்டும்; சந்தைப்படுத்தப்பட வேண்டும்; வாசிப்புச் செயல்பாட்டை வீட்டிலும் பள்ளியிலும் உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைகளைப் பற்றிய நூல்களைத் தவிர்த்து குழந்தைகளுக்கான நூல்களையும், குழந்தைகளே படைக்கும் நூல்களையும் அதிகப்படுத்த வேண்டும்.
  • எழுத்தறிவு கூடியுள்ள இன்றைய நிலையில் பெண்களின் வாசிப்பு வழக்கம் குறைந்துள்ளதை எளிதில் உணரலாம். ஒரு காலத்தில் வார, மாத இதழ்கள் பெண்களுக்கான வாசிப்புத் தளமாக அமைந்தன. இன்று தொலைக்காட்சித் தொடர்கள் அவர்களை ஆக்கிரமித்துவிட்டன. குடும்பங்களில் வாசிப்பு அருகி விட்டது. வீட்டில் வாசிப்புச் சூழல் அமையாமல், குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்த இயலாது.
  • குழந்தைகள், பெண்கள் சார்ந்த மக்கள் வாசிப்பு என்பது பண்பாட்டின் ஒரு கூறாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதை மையப்படுத்தி சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் போன்றவற்றை எளிய உரைநடையில் வெளியிடலாம். அறிஞர் .சி.கந்தையா போன்றவர்கள்வசனம்என்கிற வகையில் இதுபோல் எழுதியுள்ளனர். நவீன இலக்கியச் சிறுகதைகள், நாவல்கள், தன் வரலாறுகள், வாழ்க்கை வரலாறுகள், எளிய கட்டுரைகளை வகை பிரித்து, தொகைப்படுத்திவாசிப்பு பனுவல்களாக’ (Readers) வெளியிடலாம்.
  • சாதி, சமயம், பாலினம், சுற்றுச்சூழலியல், உடல்நலம், மனநலம் முதலியன பற்றிய நடுநிலையுடன் கூடிய, அறிவியல் அடிப்படையிலான எழுத்துக்கள் வாசிப்பு இயக்கத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில் வாசிப்பு வழியேதான் நடத்தை மாற்றங்களை உருவாக்க இயலும். வெகுமக்கள் நடுவே உள்ள தப்பெண்ணங்களை அகற்ற பகுத்தறிவு சார்ந்த எழுத்துக்களின் பரவலாக்கம் அடிப்படைத் தேவை.

இலக்கிய வரலாறும் கல்வியும்

  • செம்மொழியாகவும், நவீன மொழியாகவும் தொடர் படைப்புச் செயல்பாட்டில் தமிழ் மொழி விளங்குகிறது. அண்மைக்காலத்தை உள்ளடக்கிய ஓர் தமிழ் இலக்கிய வரலாறு நம்மிடம் இல்லை. பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி போன்றோர் முன்வைத்த இலக்கிய வரலாறு எழுதியல் எனும் முறைமை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதையும் இவ்வேளையில் கவனப்படுத்த வேண்டும். இத்தகைய சமகால இலக்கிய வரலாற்றை உருவாக்கி, ‘யார்? எவர்?’ என்பது போன்று தமிழில் வெளியாகும் அனைத்து நூல்களையும் பதிவுசெய்திட ஓர் அமைப்பு வேண்டும். ஓராண்டில் வெளியாகும் அனைத்து வகை நூல்களையும் நூல் பெயர், நூலாசிரியர், பதிப்பு விவரம் முதலியவற்றை மட்டுமாவது பதிவுசெய்துஇலக்கிய கருப்பொருள் களஞ்சியம்போல வெளியிடலாம். இதனை மாவட்ட, பெருநகர அளவில்கூட செய்யலாம். பின்னர் தமிழ்நாடு அளவில் ஒருங்கிணைத்து வெளியிடலாம்.
  • அடுத்து, படைப்புகள் சார்ந்து அக்கறை கொள்ள வேண்டியது திறனாய்வுப்புலம். திறனாய்வும் திறனாய்வாளர்களுமே, எந்த ஒரு மொழியினுடைய படைப்புகளின், படைப்பாளிகளின் முகவரிகள் போலச் செயலாற்ற முடியும். கல்விப் புலத்திலும் கல்விப் புலத்திற்கு வெளியேயும் திறனாய்வு எழுத்துக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். சில துறைகள் சார்ந்த ஒருங்கிணைப்பு தமிழில் அவசியம் எனத் தோன்றுகிறது. மொழியியல் துறைகளுக்கும், தமிழ் இலக்கியத் துறைகளுக்குமான ஒட்டுறவு அதிகப்படுத்தப்பட வேண்டும். அதேபோல ஆங்கிலத் துறைகளும், தமிழ் இலக்கியத் துறைகளும் நட்டுப்புறவோடு இணைந்து செயல்பட வேண்டும். மலையாளம் போன்ற மொழிகளோடு ஒப்பிட, இங்கு அவை அருகியே உள்ளன. இலக்கியத் திறனாய்வும், இலக்கிய வாசிப்பும் மேம்பட மொழிக்கல்வியுடன் இலக்கியக்கல்வியும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
  • தமிழில் பண்டைய, நவீன இலக்கியக் கல்வி என்பது உயர்கல்வி நிறுவனங்களில் கவனப்படுத்தப்பட வேண்டும். பாடங்கள், தேர்வுகள் என்பவற்றைத் தாண்டி இலக்கியக் கல்வி கற்றல் - கற்பித்தல் நிகழ வேண்டும். அதற்கு இலக்கியத் திறனாய்வும், பல்துறை வாசிப்பும் அடிப்படையாக அமையும். இவை யாவற்றையும் ஒருங்கிணைத்து வாசிப்புப் பண்பாடாகக் கட்டமைக்க முடியும்.

வாசிப்புப் பரவலாக்கம்

  • தொழில் அடிப்படையில் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் மொழி, இலக்கியக் கல்வியிலும், திறனாய்விலும், வாசிப்பு இயக்கத்திலும் முன்னணியில் நிற்க வேண்டும். ஒரு மருத்துவர் மருத்துவப் பிரதிநிதிகள் மூலமாகக்கூட, தன்னை நடப்புக்கு ஏற்ப மேம்படுத்திக் (update) கொள்வதைப் பார்க்கிறோம். அனைத்து வகை ஆசிரியர்களும் தங்களை நடப்பு, எதிர்காலத் தன்மைகளோடு இணைத்துக்கொள்ள நூல் வாசிப்பே அடிப்படை.
  • வாடகை நூலகங்கள், நடமாடும் நூலகங்கள், நூலகங்கள் ஆகியவற்றின் மக்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். நூலக வாசிப்பு இயக்கத்தைப் பரவலாக்க வேண்டும். நூலக இயக்கத்தை, உள்ளூராட்சிகளோடு ஒருங்கிணைக்கலாம், ‘கிராம சபைக்கூட்டங்களின் நிகழ்ச்சி நிரலில் நூலக இயக்கத்தின் தேவை குறித்தும் பேச வைக்க வேண்டும். வாசிப்பைப் பரவலாக்கிட வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், துணிக்கடைகள், மருத்துவமனைகள், பேருந்து, ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில்வாசிப்பு நிலையங்களைஉருவாக்கலாம். இந்த யோசனைகளை கூடுதலாக்கி நடைமுறைப்படுத்தும்போது வாசிப்புப் பண்பாடு நிச்சயம் ஒரு நாள் மலரும்.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்